தாய்மை போற்றும் திருநாள்!

சூரனை வதைக்க சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய தீப் பொறிகளில் இருந்து அவதரித்தவர் முருகப் பெருமான். இவரது ஜென்ம நட்சத்திரம் விசாகம். சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில், ஆறு குழந்தைகளாக அவதரித்த முருகப் பெருமானை கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். இதனால், இப்பெருமான் ‘கார்த்திகேயன்’ என்றும் அழைக்கப்பட்டார். தனித் தனியே ஆறு குழந்தைகளாக இருந்த முருகப் பெருமானை அன்னை பார்வதி சேர்த்தணைக்க, ஓருடல் கொண்ட ஆறுமுகக் கடவுளாக முருகப் பெருமான் உருமாறினார். கார்த்திகைப் பெண்களுக்கும் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.
அசுரனை சம்ஹரிக்கவும், தேவர்களைக் காக்கவும் அவதரித்த முருகப் பெருமானை, தாயாக இருந்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக அமைந்தது தான் ஆடிக் கிருத்திகை தினம். முருகப் பெருமானுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திர தினம் மாதந்தோறும் வந்தாலும், ஆடி மாத கிருத்திகை நாள் சிறப்பு வாய்ந்தது. இந்நாள் முருகப் பெருமானுக்கு மிக உகந்த நாளாகக் கருதப்படுகிறது. திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளியும், நட்சத்திரங்களில் கிருத்திகையும் முருகப் பெருமானை வழிபட சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.
ஆடிக் கிருத்திகை தினத்தன்று அனைத்து முருகப் பெருமான் திருக்கோயில்களும் விசேஷ பூஜைகள், அலங்காரங்கள் என்று கோயிலே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். முடி காணிக்கை செலுத்துவது, குழந்தைகளுக்குக் காது குத்துவது போன்ற விழாக்களை அன்று செய்வது விசேஷம். இதுமட்டு மின்றி, நேர்த்திக் கடனாக பால்குடம் எடுப்பது, காவடி சுமப்பது, அலகு குத்துவது என்று பக்தர்கள் அன்று பக்திக்கோலமாக விளங்குவதையும் காணலாம்.
இத்தினத்தில் முருகப் பெருமானை தரிசிக்க கோயிலுக்கு நடை பயணமாக வருபவர்களுக்கு பக்தர்கள் ஆங்காங்கே நீர், மோர் அளிப்பது, அன்னதானம் செய்வது போன்றவை புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது.
தவிர்க்க முடியாத காரணங்களால் அன்று கோயிலுக்குச் சென்று வழிபட முடியாதவர்கள், கந்த புராணம், கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற முருக பக்திப் பாமாலைகளைப் பாடியும், படித்தும், கேட்டும் விரதமிருந்து வழிபடலாம்.
இவ்விரதம் மேற்கொள்பவர்கள் உணவில் அவசியம் உப்பை தவிர்க்க வேண்டும். உப்பில்லாத உணவை எடுத்துக்கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ மேற்கொள்வது உயர்வானதாகக் கருதப்படுகிறது. ஆடிக் கிருத்திகை விரதம் மேற்கொள்ள, வாழ்வில் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்பது திண்ணம்.
முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம் என்பதால், செவ்வாய் கிரகத்தால் ஏற்பட்ட திருமணத் தடைகள் நீங்கும். குழந்தைப் பேறின்றி வருந்துபவர்கள் 12 கிருத்திகை நாட்களில் விரதமிருந்து, முருகப் பெருமான் பாலமுருகனாக அருள்பாலிக்கும் திருத்தலங்களுக்குச் சென்று இனிப்பு நைவேத்தியம் செய்து வழிபட, விரைவில் குழந்தைப்பேறு வாய்க்கும். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர் முருகப் பெருமான் என்பதால் கிருத்திகை விரதமிருந்து வழிபட, முருகப் பெருமானைப் போன்றே அழகும், வீரமும் பொருந்திய மகப்பேறு நிச்சயம் வாய்க்கும்.
இவைதவிர, சொத்து வழக்குப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடிக் கிருத்திகை விரத மிருந்து கந்தவேளை வணங்க, அனைத்துக் கவலைகளும், தொல்லைகளும் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் சேரும்!
பூச்சொரிதல், மலர் முழுக்கு!
ஆடிக் கிருத்திகை நாளில் முருக பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாலாபிஷேகம் செய்தும் முருகப் பெருமானை ஆராதிப்பார்கள். பல கோயில்களில் இறைவனை முழுக்க முழுக்க மலர்களினால் அலங்கரித்து வழிபடுகின்றனர். அம்மன் ஆலயங்களில் இதைப் பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கிறார்கள்.

Comments