ஆண்டாள் திருப்பாவை

'ரங்கமன்னாருக்கு பூமாலையைச் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள், நமக்காகப் பாமாலையையும் பாடிக் கொடுத்திருக்கிறார். அதுதான், திருப்பாவை. இதில் உள்ள முப்பது பாடல்களும் முத்துக்கள்!'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார் உபன்யாசகர் அக்காரக்கனி ஸ்ரீநிதி. 29 வயதில், அழகிய உச்சரிப்பும் பாசுரங்களுமாக, உபன்யாசம் செய்வதில் படுசமர்த்தர் இவர், என்கின்றனர் வைஷ்ணவப் பெரியோர்.  
''அடடா... திருப்பாவையின் ஒவ்வொரு வரியும் பலாச் சுளைக்கு ஈடானது. அவை அனைத்தும், கண்ணனையே கணவனாக, ரங்கனையே மணாளனாக எண்ணி உருகிப் பாடியவை! தந்தை பெரியாழ்வார், மதுராவில் ஸ்ரீகண்ணன் செய்த லீலைகளைச் சொல்லச் சொல்ல, அவனையே நினைக்க ஆரம்பித்தாள் ஆண்டாள்; 'நீயே என் பதி’ என முடிவு செய்தாள்; அவனைப் பார்க்கவேண்டுமே என மருகித் தவித்தாள்; 'என்னை ஏற்றுக் கொள்வாயா?’ என்று கெஞ்சினாள். இவளின் இந்த ஏக்கமும் கனவும் திருப்பாவைப் பாடல்களாக மலர்ந்து, இன்றைக்கும் மணம் பரப்பி வருகிறது'' என்று மெய்யுருகப் பேசுகிறார் அக்காரக்கனி.

''சின்ன வயசிலேயே உபன்யாசம் பண்ண ஆரம்பிச்ச நான், இதுவரைக்கும் சுமார் 500 மேடைகள்ல உபன்யாசம் பண்ணிருக்கேன். 19-வது வயசுல, திருப்பாவையை வெச்சு உபன்யாசம் பண்ணினதுதான், திருப்பாவைக்கும் எனக்குமான முதல் தொடர்பு. அதுக்கப்புறம், திருப்பாவையை மையமா வெச்சு உபன்யாசம் பண்ணினது, பத்து பதினைஞ்சு இடங்கள்ல மட்டும்தான் இருக்கும். ஆனாலும், 500 உபன்யாசங்கள்ல எனக்குக் கிடைச்ச பாராட்டும் புகழும், திருப்பாவை உபன்யாசம் பண்ணின பத்து மேடையிலேயே கிடைச்சிடுச்சு! 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்...’னு முதல் பாட்டை ஆரம்பிச்சு, ஒவ்வொரு பாட்டையும் பாடி, அதன் அர்த்தங்களை விவரிச்சுச் சொல்லி, 'பகவான் மேல ஆண்டாளுக்கு எத்தனைப் பிரியம் பாருங்கோ! உண்மையான அன்பு இருந்தா, பகவான் நம்மளை ஏத்துப்பான்’னு அதன் தாத்பர்யத்தைச் சொல்லி முடிக்கும்போது, மொத்தக் கூட்டமும் வியந்து கை தட்டும்; ஆண்டாளின் இறைபக்தியை உணர்ந்து, கண்ணீர் விடும்!'' என்று நெக்குருகிச் சொல்லும் அக்காரக்கனி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், குஜராத் எனப் பல ஊர்களில் உபன்யாசம் செய்திருக்கிறார்; தொடர்ந்து செய்து வருகிறார். ''அப்பா உ.வே.ஸ்ரீஅனந்தாழ்வான், திருப்பாவை பத்தி நிறைய சிலாகிச்சுச் சொல்லிக் கொடுத்தார். அதேபோல, அண்ணங்கராச்சார்ய சுவாமிகள் எழுதின திருப்பாவைப் புத்தகங்கள் கோதையையும் பெரியாழ்வாரையும் அப்படியே என் கண்ணுக்கு முன்னாடி நிக்கவெச்சு, மனசுல வில்லிப்புத்தூர் ஊரே படம் மாதிரி பதிஞ்சிடுச்சு'' என்றவர், குஜராத்தில் தான் நிகழ்த்திய உபன் யாசத்தின்போது நடந்த சம்பவம் ஒன்றையும் தெரிவித்தார்.
''குஜராத்ல திருப்பாவை உபன் யாசம். அங்கே, பாவநகர் ஏரியாவுல அழகான பெருமாள் கோயில் இருக்கு. அங்கே, ஸ்ரீரங்கநாதரோடயே சேர்ந்து நின்னுண்டிருக்கிற ஸ்ரீஆண்டாளோட முகத்துல அப்படியரு பரவசம்; மனப்பூரிப்பு; சந்தோஷம்! கண்கொட்டாம பார்த்துண்டிருந்தேன். திருப்பாவைல எனக்கு ரொம்பவும் பிடிச்ச, 'எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ...’ங்கற பாட்டை மெள்ளப் பாடினேன். சட்டுனு ஆண்டாளோட மொத்த சந்தோஷமும் எனக்குள்ளே பரவி, என்னமோ பண்ணிச்சு.  மேற்கொண்டு என்னால பாட முடியலை; மனசே நிறைஞ்சு போச்சு!'' என்று கண்ணீர் மல்கத் தெரிவிக்கிறார் அக்காரக்கனி.
''திருப்பாவைல முப்பது பாட்டு இருந்தாலும், பதினைஞ்சாவதா இருக்கிற அந்த ஒரு பாட்டைப் பாடினா, மொத்தப் பாடல்களையும் பாடினதுக்குச் சமம்னு அழகிய மணவாள மாமுனிகள் சொல்றார். அதுதான் திருப்பாவையோட மகத்துவம். பக்தன் என்பவன் எப்படி இருக்கணும்; அவன் எப்படி நடந்துண்டா, பகவானை அடையலாம்னு ரொம்ப அழகாச் சொல்லியிருப்பா, ஆண்டாள்!
மார்கழி மாசத்துல, சில்லுன்னு குளிர் இறங்குற அதிகாலை வேளைல, குளிச்சு முடிச்சு, பூஜையறையில உட் கார்ந்து, திருப்பாவை பாடல்களைச் சொல்லி, ரங்கமன்னாரையும் ஸ்ரீஆண்டாளையும் மனசாரப் பிரார்த்தனை பண்ணினா, நாம வேண்டினது நிச்சயம் நிறைவேறும். அந்த ஆண்டாள் விரும்பினபடி ஆண்டவனே கிடைச்சது போல, நல்ல குணமுள்ள கணவனை அடைவார்கள், பெண்கள்'' என்று உறுதிபடத் தெரிவிக்கிறார் உபன்யாசகர் அக்காரக்கனி ஸ்ரீநிதி.

Comments