கல் உப்பும் அகல் விளக்கும் !

தேனி நகரில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெரியகுளம். இவ்வூரில், வராஹ நதிக் கரையில் கோயில் கொண்டிருக்கிறாள், ஸ்ரீ கெளமாரியம்மன்.
முற்காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெரியதொரு குளத்துடன் திகழ்ந்ததால், இவ்வூர் குளந்தை மாநகர் என்ற பெயருடன் திகழ்ந்தது. ஒருமுறை பெருமழை பொழிய, பெரிய குளம் கண்மாய் நிரம்பி வழிந்து, ஊரை வெள்ளம் சூழ்ந்தது. அதனால் மக்கள் ஊரை காலி செய்துவிட்டு, கிழக்கே வனப் பகுதிக்கு இடம்பெயர்ந்து, அங்கே கோயில் கொண்டிருந்த காட்டுமாரியைச் சரணடைந்தனர். அன்று முதல், காட்டுமாரியம்மன் கெளமாரியாக திருப்பெயர் கொண்டு, அந்த மக்களைக் காத்து வருகிறாள். ஊரும் பெரியகுளம் என்று பெயர் ஏற்றது.
கிழக்கு நோக்கிய கோயிலுக்குள், அம்மன் சந்நிதி முன் சிம்ம வாகனத்துக்குப் பதிலாக நந்தி அமைந்திருப்பது, தனிச்சிறப்பு. அதேபோல், கோயிலுக்கு வெளியே அல்லாமல், பிராகாரத்திலேயே கொடிமரம் அமைந்திருப்பதும் விசேஷம் என்கிறார்கள். மேலும், ஆனிப் பெருந்திருவிழாவுக்கு சில நாட்கள் முன்னதாக, கோயிலின் பரம்பரைப் பூசாரிகளால் கோயிலின் முன்பு பித்தளைக் கொடிக்கம்பம் ஒன்றும் நடப்படுகிறது. அப்போது, பக்தர்கள் அந்தக் கொடிக்கம்பத்துக்குத் தீர்த்தம் ஊற்றி வழிபடுவார்கள்.
ஆனித் திருவிழாவில் அக்னிச் சட்டி எடுக்கும் பக்தர்கள், வீட்டிலேயே அம்மனை நினைத்துக் கூழ் படைத்து வழிபடுகின்றனர். பின்னர், அக்னிச் சட்டி எடுத்து வந்து கோயிலில் வழிபட்டபிறகு, வீட்டுக்குத் திரும்பி, அம்மனுக்குப் படைத்த கூழை அருந்தி விரதம் முடிக்கின்றனர். குழந்தை இல்லாதவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து, ஸ்தல விருட்சமான அரச மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், திருமண வரம் வேண்டுவோர், அரச மரத்தடியில் வீற்றிருக்கும் நாகம்மாளை
11 முறை வலம் வந்து மஞ்சள் கயிறு கட்டிப் பிரார்த்திப்பதுடன், கெளமாரியம் மனையும் வேண்டிச் செல்கிறார்கள். ஸ்ரீ கெளமாரியம்மன், ஸ்ரீ நாகம்மாள் மட்டுமின்றி, சிவன், அக்னி, வீரபத்திரர், விநாயகர், முருகர் மற்றும் நவகிரகங்களையும் இங்கே தரிசிக்கலாம்.
மேலும், கைகால்களில் தேமல், முகப் பரு, அகோர வடுக்கள் உள்ளவர்கள், கொடிமரத்தில் கல் உப்பு சமர்ப்பித்து, அகல் விளக்கில் நெய் தீபமேற்றி வழிபட்டால், விரைவில் பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், கால் வலியால் நடக்க இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து, கால் போன்ற உருவங்களைச் சமர்ப்பித்து வழிபட்டால், கால் வலி நீங்கும்; அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தீர்த்தம் பெற்றுச்சென்றால், நோய் விரைவில் குணமடையும் என்கிறார்கள் பக்தர்கள்.
இதோ, அருளும் பொருளும் அள்ளித் தரும் கெளமாரியம்மன் கோயிலின் பிரசித்திபெற்ற ஆனித்திருவிழா, ஜூலை6  துவங்கி நடைபெற்று வருகிறது. நாமும் இந்த விழாவில் கலந்துகொண்டு, அன்னையின் திருருளைப் பெற்றுவருவோம்.

Comments