குடும்ப ஒற்றுமை ஓங்க...

குடும்ப உறவுகளிடையே ஒற்றுமையும், சந்தோஷமும் பெருகச் செய்யும் திருத்தலமாகத் திகழ்கிறது பெரம்பலூர், மதனகோபால சுவாமி திருக்கோயில். அழகிய சுதைச் சிற்பங்களோடு கூடிய ஐந்து நிலை ராஜகோபுரத்தின் முன்பு நெடிதுயர்ந்த தீபஸ்தம்பம் - அதன் கீழ் சிறிய திருவடி அனுமன்.
திருக்கோயிலின் உள்ளே பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னிதிகளை தரிசித்துச் சென்றால், அடுத்துள்ளது கருவறை முகப்பு மண்டபம். ஜெய - விஜயர்கள் காவல் நிற்க, உள்ளம்கவர் கள்வனாக மூலவர் மதனகோபால சுவாமி காட்சி தருகிறார்.
இக்கோயிலில் தும்பிக்கை ஆழ்வார், ஆழ்வாராதி கள், ஹயக்ரீவர், நரசிம்மர், பாமா - ருக்மணி சமேத வேணுகோபாலர், ஆண்டாள், தன்வந்திரி, ஸ்ரீனிவாசர், அலர்மேலு மங்கைத்தாயார். சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், கோதண்டராமர், கஜலட்சுமி, கூத்தனூர் சரஸ்வதி, கல்யாண விநாயகர் ஆகியோருக்கு தனித்தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன.
வலப்புறம் தனிச்சன்னிதியில் மரகதவல்லித் தாயார் அருள்பாலிக்கிறார். தாயாரை மனமுருகி வேண்டி வழிபட, திருமணத் தடைகள் அகலும். ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
துர்வாசரின் சீடர் ஒருவர், கவனக் குறைவால் தம் குருநாதரின் கமண்டல நீரைத் தட்டிவிட்டார். கோபமடைந்த முனிவர், அவரைப் புலியாக மாற சபித்தார். பதறிய சீடர், தம்மை மன்னிக்கும்படி வேண்டினார். “புலியாக நீ வாழும் இப்பகுதிக்கு பஞ்சபாண்டவர்கள் வருவார்கள். அப்போது பீமனின் கதையால் நீ அடிபடுவாய். அச்சமயம் உன் சாபம் விலகும்!” என சாப விமோசனம் அளித்தார் துர்வாசர். புலியாக மாறிய சீடன், பூர்வ ஜென்ம வாசத்தால் பெருமாளையே துதித்து வந்தான்.
பாண்டவர்களின் வனவாச காலத்தில் ஒரு நாள், நீர் எடுத்துவர ஆற்றுக்குச் சென்ற பாஞ்சாலி, பதற்றத்துடன் ஓடி வந்தாள். பீமன், அவளது பதற்றத்துக்கான காரணத்தைக் கேட்க, ‘புலி ஒன்று துரத்தியதுதான் தமது கிலிக்குக் காரணம்’ என்றாள் பாஞ்சாலி. கதையுடன் அவ்விடத்துக்குப் புறப்பட்ட பீமனின் மீது பாய்ந்தது புலி. அடுத்த கணம், பீமன் புலியின் தலையில் கதையால் ஓங்கி அடிக்க, மரண ஓலம் எழுப்பியபடி புலி கீழே விழுந்து, சட்டென்று ஒரு முனிவராக மாறியது.
புலி முனிவராக மாறியதும் அதிர்ந்த பீமன், முனிவரிடம் மன்னிப்பு வேண்டினான். முனிவர், பீமன் மூலம் தமது சாபம் விலகிய கதையைச் சொன்னார். தமக்கு சாப விமோசனம் தந்த அவனது வீரம் பன்மடங்காகப் பெருக வரம் அளித்தார். ‘வியாக்ரம்’ என்றால் புலி என்று பொருள். முனிவர் புலி வடிவில் இருந்ததால், அத்தலம் ‘வியாக்ரமபுரம்’ என்றானது. பெரும்புலிவனம் என்று அழைக்கப்பட்ட அவ்வூர் பெரும்புலியூர் ஆகி, அதுவே மருவி பெரம்பலூர் ஆனது என்கிறார்கள்.
இத்தல இறைவனை புலி வடிவில் வழிபட்ட வியாக்ரம ரிஷி புலிக்காலுடன் விமானத்தில் சுதை வடிவிலும், சாபம் நீங்கிய முனிவராக கற்சிலை வடிவில் பிராகாரத்திலும் காட்சியளிக்கிறார். அனுமன் சன்னிதியின் மேல் அவரது தந்தை வாயுவின் வாகனமான மான் இருப்பது வித்தியாசமான அமைப்பு. பாண்டவர்களுக்குத் தனிச் சன்னிதி இருக்கிறது. கருவறைச் சுவர் முழுதும் கல்வெட்டுகளைக் காண முடிகிறது.
தம்மைப் போற்றி வழிபாடு செய்து வந்த பாண்டவர்களுக்கு வரம் தர வந்தார் வாசுதேவன். ‘வினை தீர்க்க வந்த வேணுகோபாலா, எங்களது இத்துன்பங்களுக்குக் காரணம், எமது உறவுகளிடையே ஒற்றுமை இல்லாமல் போனதுதான். எனவே, இத்தலத்தில் நீங்கள் நிரந்தரமாக வாசம் செய்து, உம்மை வணங்குவோரின் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க அருள வேண்டும்’ என பாண்டவர்கள் வேண்டினர்.
குடும்ப ஒற்றுமை வேண்டி பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறப் பெற்றவர்கள் துளசி மாலை சாத்தி தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள். சுவாமிக்கு புரட்டாசி சனிக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும்.
பிரம்மோற்சவம், ராம நவமி, புரட்டாசி சனிக் கிழமைகள், பங்குனி உத்திரம், சித்திரை தமிழ் வருடப் பிறப்பு, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி, திருக் கார்த்திகை, தனுர் மாதம், திருவாதிரை, மாசி மகம் ஆகியவை விசேஷ தினங்கள்.
செல்லும் வழி:
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது கோயில்.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 12 வரை. மாலை 4.30 மணி முதல் 9 வரை.

 

Comments