பரசுராமேஸ்வரர்

பிருகு முனிவரின் வம்சத்தில் வந்தவர் ஜமதக்னி முனிவர். இவரது மனைவி ரேணுகா. கணவரே தெய்வமென்று வாழும் கற்பு நெறி மிக்க பெண்மணி. தினசரி ஆற்றுக்குச் சென்று சுடாத மண் பானையில் நீர் சுமந்து வருவார். நெருப்பு போன்ற அவரது கற்பு நெறி காரணமாக சுடாத மண் பானை, கொஞ்சம் கூட நீரில் கரையாது.
ஒரு நாள் ஆற்றிலிருந்து நீர் சுமந்து வரும்போது வானத்தில் கந்தர்வர்கள் செல்கிறார்கள். ஒரு விநாடி அவர்களின் அழகைப் பார்த்து சலனப்படுகிறார் ரேணுகா. அவ்வளவுதான். மண்பானை கரைகிறது, அதிர்ந்து போகும் ரேணுகாம்பாள் பிரமை பிடித்தவள் போல் ஆற்றங்கரையிலேயே அமர்ந்து விடுகிறாள். ஆற்றுக்குச் சென்ற மனைவி இன்னமும் திரும்பவில்லையே என்ற கவலையில் ஜமதக்னி, தனது யோக பலத்தின் மூலம் நடந்ததைத் தெரிந்து கொள்கிறார்.
கடும் கோபம் வருகிறது அவருக்கு. தனது முதல் மகனை கூப்பிட்டு தாயின் தலையைக் கொய்து வரும்படி சொல்கிறார். மறுக்கிறான் மகன். அவனை கல்லாக்கி விடுகிறார் ஜமதக்னி. அடுத்தடுத்து நான்கு மகன்களும் அம்மாவின் தலையை கொய்து வர மறுக்க, அனைவரும் முனிவரின் சாபப்படி கல்லாகிறார்கள். கடைசியாக, ஐந்தாவது மகனான பரசுராமனை கூப்பிடுகிறார் ஜமதக்னி. தந்தையின் சொல்லுக்கு சிறிதும் மறுப்பு சொல்லாத பரசுராமன் தாயின் தலையை கொய்து வருகிறான். பிரமித்து நிற்கும் முனிவர் பரசுராமனை அரவணைத்து நீ கேட்கும் இரு வரங்களை நிறைவேற்றித் தருகிறேன்" என்கிறார். சகோதரர்களுக்கும் தாய்க்கும் உயிர் தரும் படி கேட்டுக் கொள்கிறான் பரசுராமன். அதன்படியே செய்கிறார் ஜமதக்னி. இன்னும் தமிழ்நாட்டு அம்மன் கோயில்களில் ரேணுகாம்பாளின் தலையை மட்டுமே வழிபாடு செய்வது, இந்த புராண சம்பவத்தின் நீட்சிதான்.
ஜமதக்னி முனிவருக்கு மகனாகப் பிறந்த பரசுராமன், பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம். பல தேசங்களை ஆண்டுக் கொண்டிருந்த க்ஷத்ரிய மன்னர்கள் பிராமணர்களைக் கொடுமைப்படுத்தி வந்ததால் அவர்களை ஒழிக்க பிராமணனாக அவதாரம் எடுத்தவர் பரசுராமர். சிவனை வேண்டி பரசு (கோடாலி) வையும், பல அஸ்திரங்களையும் பெற்றவர். பரசுராமரின் வலிமையை சோதிக்க சிவனே அவருடன் போரிட்டார். அப்போது, பரசுராமரின் கோடாலி சிவனின் நெற்றியில் பட்டுவிட்டது. பரசுராமரால் காயம் பட்டதால் சிவனுக்கு ‘கண்ட பரசு’ என்ற திருநாமமும் உண்டு.
ஒருமுறை கார்த்தவீரியன் என்ற அரசன் ஜமதக்னியின் ஆஸ்ரமத்திலிருந்த காமதேனு பசுவை எடுத்துக் கொண்டு போய்விட்டான். அதையறிந்த பரசுராமன் அந்த அரசனைக் கொன்று காமதேனுவை மீட்டார். பின்னர் அரசனின் மகன் ஜமதக்னியை கொன்றான். வெகுண்டெழுந்த பரசுராமர் அரசனின் மகனைக் கொன்றது மட்டுமல்லாமல்; தொடர்ந்து க்ஷத்ரிய அரசர்களை அழிக்கும் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பரசுராமர் சிறந்த தவயோகி. மகாபாரத காலகட்டத்தில் பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோருக்கு குருவாய் இருந்தவர். மரணமே இல்லாத சிரஞ்சீவி வாழ்க்கைக்கு உரித்தானவர் பரசுராமர் என்கின்றன புராணங்கள். மகேந்திர பர்வதத்தில் ஆழ்ந்த தவத்தில் அவர் இருப்பதாக ஐதீகம்.
புராண சம்பவங்களிலிருந்து சமகாலத்துக்கு வருவோம். சங்ககாலத்தில் திருப்பகங்காடு என்ற பெயரிலும், ராஜேந்திர சோழன் காலத்தில் ராஜேந்திர சோழநல்லூர் என்ற பெயரிலும், பின்னர் பாலையூர் என்றும், தற்காலத்தில் பாலூர் என்றழைக்கப்படும் ஊர், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் பாலாற்றங்கரையில் அமைந்திருக்கிறது. சூரியன் வழிபட்ட பதங்கீஸ்வரர் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது. இந்தக் கோயிலுக்கு புஷ்ப கைங்கர்யம் உள்ளிட்ட பல கைங்கர்யங்களை செய்து வந்தது சோமநாதன் குடும்பம். பதங்கீஸ்வரர் கோயிலுக்கு ஒரு கி.மீ., தொலைவில் தாமரைத் தீர்த்தம் மற்றும் பாழடைந்த மண்டபங்களை சிறு வயதிலிருந்து பார்த்து வருபவர் சோமநாதன். வேலிகாத்தான் காடுகளுக்கு நடுவில் லிங்க பாணத்தின் மேல் பாகம் மட்டும் தெரியும்படியான அமைப்பையும் பார்த்திருக்கிறார் சோமநாதன்.
குளத்தை ‘பரசுராமன் குளம்’ என்று அழைத்து வந்தார்கள். மிகப் பிரம்மாண்டமான ஆலயம் அங்கி ருந்ததற்கான சுவடுகள் இருந்தன. பூமியைத் தோண்டி லிங்கத்தின் முழு வடிவத்தையும், பார்க்க வேண்டு மென்பது சிவனடியாரான சோமநாதனின் தீராத ஆசை. தேவப் பிரஸன்னம் பார்த்தபோது, பூமியில் சுயம்புவாக உறைந்திருக்கும் சுவாமியின் பெயர் பரசுராமேஸ்வரர் என்று தெரிய வருகிறது. ஜமதக்னியின் ஆஸ்ரமம் அங்கே இருந்ததாக பிரஸன்னம் சொல்கிறது. பரசுராமர் தனது பெற்றோர்களின் நினைவாக அங்கே லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்து வந்தாராம். பாலூர் ஒரு காலத்தில் பரசுராமேஸ்வரம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. தாயார் பெயர் மங்களாம் பிகை. சிவனடியார் திருக்கூட்டம் பூமியில் புதைந்திருந்த லிங்கத்தை முழுமையாகப் பெயர்த்தெடுக்க, அதன் கோமுகியின் எதிர்ப்புறம் சண்டிகேஸ்வரரும் இருந்திருக்கிறார்.
பரசுராமன் வழிபட்ட ஈஸ்வரர் தற்காலிகமாக ஓலைக் கொட்டகையில் வைக்கப்பட்டிருக்கிறார். தரிசிக்கும்போது கனத்துப் போகிறது மனசு. அமாவாசை, பௌர்ணமியில் அருகிலுள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றினால் பித்ரு தோஷம் பூரணமாக விலகும் என்று பிரஸன்னம் சொல்லுகிறது. மங்களாம்பிகையை தற்காலிகமாக பதங்கீஸ்வரர் கோயிலில் வைத்திருக்கிறார்கள். இப்படிப் புராண சிறப்புப் பெற்ற கோயிலை முழுமையான அளவில் புனர்நிர்மானம் செய்வது சிவனடியார்களின் தயாள சிந்தையில்தான் இருக்கிறது.
தொடர்புக்கு : சோமநாதன் - 90954 59585

Comments