இஷ்ட காமேஸ்வரி

இஷ்ட காமேஸ்வரி - நம் நியாயமான கோரிக்கைகளை, அபிலாஷைகளை நிறைவேற்றும் தேவி. ஸ்ரீ சைலகே்ஷத்ர வனத்தின் நடுவே பூமிக்கு அடியில் காட்சியளிக்கிறாள் இந்த அற்புததேவி. கோயில் காட்டுப் பகுதியில் புலிகள் சரணாலயத்தின் நடுவே இருப்பதனால் இங்கு செல்ல வனத்துறையின் அனுமதி தேவை. ஒரு நாளைக்கு பத்து ஜீப்களில், தலா ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஜீப்களில் செல்வதற்கு முந்தைய நாளே பதிவு செய்து கொள்வது உசிதம்.
அடர்ந்த காட்டுப் பகுதி, முறையான சாலைகளோ, உணவுப் பொருட்களோ கிடையாது. காட்டுக்கு நடுவே இயல்பாக ஏற்பட்டுள்ள பாதைகள் வழியே 11 கி.மீ., பயணம். தூரம் என்னவோ 11 கி.மீ.,தான். ஆனால், செல்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகிறது. தண்ணீர், உணவுப் பொருட்கள், பூஜை சாமான்கள் எல்லாம் காட்டுக்குள் செல்வதற்கு முன் கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும்.
காலையில் 9.30 மணிக்குதான் ஜீப்கள் காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. ஜீப்கள் நகரத் துவங்கியதும் நம் கண்முன் விரியும் இயற்கையின் அழகு நம்மை மெய்மறக்கச் செய்யும். ஆளரவமற்ற காடு, பருத்து, உயர்ந்து சூரியனையே மறைக்கும் மரங்கள், சட்டென்று நம் கண்முன் தோன்றும் குரங்குகளும், நரிகளும், எங்கேயாவது புலிகளும் இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். ஆறடி உயர புற்றுகளும் ஆங்காங்கே உண்டு. பாறைகள் நிறைந்த பாதையில் ஜீப்கள் குதித்து குதித்து செல்லும்போது பாதுகாப்பு கம்பிகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இயற்கையை ரசிக்கும் த்ரில்லே தனிதான்.
ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்குமேல் ஜீப்கள் செல்ல பாதையில்லை. பயணிப்பவர்கள் இறங்கி குழுவாக நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. வழியில் வழுக்கும் பாறைகளும், சிறிய குட்டைகளும் உண்டு. இவற்றைக் கடக்க காலணிகள் அணிவது மிக முக்கியம்.
கோயிலுக்குச் செல்லும் வழியில் இங்கு வாழும் வேடர்களான செஞ்சுக்களை காண முடிகிறது. இவர்கள் காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடி வாழ்பவர்கள். கோயிலுக்கு வருபவர்களுக்குக் காட்டில் விளையும் பழங்கள், தேன் போன்றவற்றை விற்கின்றனர். செஞ்சு சிறுவர்கள் வில்களோடும், அம்புகளோடும் பழங்களை அடித்து வீழ்த்த பயிற்சி எடுப்பதை நாம் பார்க்க முடிகிறது.
திடீரென்று நம் கண்முன்னே மரங்கள் இல்லாத ஒரு திறந்தவெளி. இங்கு தரை மட்டத்தில் ஒரு கோயில் விமானம் தென்படுகிறது. இந்த விமானத்தின் கீழே, பூமிக்கு அடியில் வீற்றிருக்கிறாள் இஷ்ட காமேஸ்வரி தேவி. அன்னையை தரிசிக்க செல்லும் முன், ஆலயத்தின் அருகே சலசலத்து ஓடும் ஆற்றில் இறங்கி கை, கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும்.
உயரமான பாறைகளில் கவனமாக இறங்கிச் செல்ல வேண்டும். நம்மைச் சுற்றி ரம்மியமான இயற்கை எழில். வண்ணப்பாறைகளிடையே சலசலத்து ஓடும் குளிர்ந்த நீரை அள்ளி முகம் கழுவ, சில்லென்ற புத்துணர்ச்சி. மீண்டும் பாறைகள் மீது கவனமாக கால் வைத்து ஏறி வந்தால், ஒரு கீற்றுக் கொட்டகையே அர்த்த மண்டபம். அதில் ஒரு புறம், பழைமையான சிலைகள்; இன்ன உருவமென்றே கண்டுபிடிக்க இயலாதவாறு நிற்கின்றன. மற்றொரு புறம், கோயிலுக்குள் இறங்கும் துவாரம். ஒரு நேரத்தில் நான்கு பேர் மட்டுமே செல்ல முடியும்.
வரிசையில் சென்று கோயிலின் துவாரம் வந்தவுடன் தவழ்ந்து உள்ளே செல்ல வேண்டும். சென்றால் அங்கே அருள்பாலிக்க காத்திருக்கிறாள் இஷ்டகாமேஸ்வரிதேவி. சன்னிதியின் உள்ளே சம்மணமிட்டு அமரக்கூடிய அளவுக்கு இடவசதி உள்ளது. தேவியின் மிக அருகில் அமரும்போது மெய்சிலிர்ப்பது நிஜம். பூஜாரி நம்மை பிரார்த்தனை செய்து, அம்மன் நெற்றியில் குங்குமம் வைக்கச் சொல்லுகிறார். காற்று, வெளிச்சம் இல்லாத பாதாளத்தில் நாளெல்லாம் இவர் அமர்ந்திருப்பது அன்னையின் அருளே.
இதோ, வந்துவிட்டது; நாம் காத்திருந்த தருணம். கண்களை மூடி மனதார பிரார்த்தித்துவிட்டு, அன்னையை தரிசனம் செய்து, குங்குமத்தை அன்னையின் நெற்றியில் வைக்கும்போது மெய்சிலிர்க்கிறது. இளம் சூட்டுடன், நம் மனித உடலில் கைவைக்கும் உணர்வு. இதுவே இவ்வாலயத்தின் அதிசயம். அன்னை நம்மில் வாழும் தெய்வமாக விளங்கி அருள்பாலிக்கிறாள். அன்னையின் நெற்றி ஸ்பரிசத்தில், மனம் நெகிழ்ந்து கண்களில் நீர்பளிக்கும்.
பூசாரி குங்குமமும் வளையல்களும் பிரசாதமாகத் தருகிறார். மீண்டும் வெளியில் வந்து நடை, ஜீப் பயணம்... என கானகத்திலிருந்து வெளியே வந்துவிட்டாலும் நம் மனக்கண்ணில் நீக்கமற நிறைந்திருப்பாள் இஷ்ட காமேஸ்வரி தேவி.
முதுகுவலி பிரச்னை உள்ளவர்கள் ஜீப்பில் செல்லும்போது தகுந்த பெல்ட் அணிந்து கொள்ள வேண்டும். காலணிகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் முக்கியம். குறிப்பிட்ட நாட்களில் பாதுகாப்பு கருதி வாகனங்களை அனுமதிப்பதில்லை. எனவே, தகவலறிந்து செல்வது நலம். ஒவ்வொருவரும் வாழ்நாளில் தரிசிக்க வேண்டிய உன்னத தலமிது.
செல்லும் வழி:
ஸ்ரீசைலத்திலிருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ளது கோயில். இதில் 11 கி.மீ., புலிகள் சரணாலயத்துக்கு உள்ளே செல்ல வேண்டும்.

 

Comments