ஸ்ரீ சூலினி ராஜதுர்கை

ஆடி மாதம் அம்பிகையின் அருள் வெள்ளத்தை ஆன்மிக பக்தர்கள் நாடிப்பெறும் மாதம். தர்மபுரி, கோட்டை கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சூலினி ராஜதுர்கை, தர்மர் முதல் அதியமான் வரை வழிபடப்பட்ட அன்னையாவாள்.
எதிரிகளின் படையெடுப்பு போன்ற ஆபத்து நேரிடும்போது, போருக்குச் செல்லும் முன்னால் ‘கொற்றவை’ என்று கொண்டாடப்பட்ட துர்கையை வழிபடும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே உண்டு. அப்படி வழிபடும்போது, தங்கள் நாட்டுக்கு வெற்றி கிடைக்க, தங்களையே பலியிட்டுக் கொண்ட வீரர்கள் குறித்தும் வரலாற்றுக் குறிப்புகளும் உண்டு.
அப்படி தம்முயிரைத் துறக்கும்போது, சூலம் ஏந்தியவளாக துர்கை தோன்றி அவர்களின் உயிரைக் காத்தாள் என்றும் சொல்வார்கள். இப்படி சூலத்தில் பாந்து தம்முயிரை துறக்கும் பழக்கமே நாளடைவில் எலுமிச்சை செருகும் பழக்கமாக உருக்கொண்டது. இக்காட்சியை சித்தரிக்கும் தூண், 2½ டன் எடையுள்ள தொங்கும் தூணாக இவ்வாலயத்தில் காட்சியளிக்கிறது.
ராகு கிரக அதிதேவதையான ஸ்ரீ சூலினி ராஜ துர்கையை கிருஷ்ணரின் ஆலோசனைப்படி வழிபட்டு தர்மர் இழந்த ராஜ்ஜியத்தைப் பெற்றார்.
ஸ்ரீ சூலினி ராஜதுர்கை மூவகை சூலங்களுடன் சங்கு ஏந்தி கொற்றவையாக மகிஷனை சம்ஹாரம் செய்யும் கோலத்தில் அருள்புரியும் காட்சி தமிழகத்தில் வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி. மூலஸ்தானத்தில் கிழக்கு நோக்கி அருள்கிறாள் அன்னை துர்கை.
ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய் கிழமை மாலை நான்கு முதல் ஐந்து மணிவரை அன்னை துர்கையின் முழு உருவை சந்தனக்காப்பு அலங்காரத்தில் நாம் தரிசித்து அருள் பெறலாம். வருடத்தில் ஒரு நாள் மட்டுமே முழு தரிசனம். மற்ற நாட்களில் திரையிடப்பட்டு திருமுக மண்டலத்தை மட்டுமே தரிசிக்க முடியும். அன்பும் அழகும் கருணையும் மிளிரும் துர்கை அம்மனை துதித்தால் போதும்; துன்பங்கள் பறந்தோடும். தர்மம் காக்கும் தாயவள் தரிசனம் கண்டால் போதும்; கர்ம வினைகளும் ஓடும். நம் வாழ்வில் சர்வ மங்கலங்கள் வந்து சேரும்.

Comments