பாஷாண லிங்கேஸ்வரர்

வேலூர் மாவட்டம், திமிரி கோட்டையிலுள்ளது சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் திருக்கோயில். விஜயநகரப் பேரரசில் சிற்றரசராக திம்மி ரெட்டி, பொம்மிரெட்டி ஆகியோர் வேலூர் கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர். அவர்கள் வம்சத்தில் வந்த சதாசிவராயர் என்பவர் இப்பகுதியை ஆண்டு கொண்டிருக்கும்போது தன் நாட்டில் வறுமை, பிணி இவை நீங்க வேண்டும் என பெரிதும் விரும்பினார். உடனே தனது அரச சபை வைத்தியரான மந்திரவைத்திய கேசரி என்று புகழப்பட்ட கன்னிகாபரமேஸ்வரர் என்பவரிடம் அதற்கான வழியைக் கண்டறியும்படி ஆணை பிறப்பித்தார்.
வைத்தியரின் 12 ஆண்டுகள் உழைப்பின் பயனாக தன்வந்திரி வைத்திய முறையில் நவபாஷாணத்தில் ஒன்றான திமிரி பாஷாணத்தைக் கட்டென ஆக்கி தெய்வ அம்சமும், மருத்துவ குணமும் பொருந்திய சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத் தருளினார்.
இதன் உயரம் ஆறு அங்குலம்தான். கி.பி. 1379ம் ஆண்டு தை மாதம் திருவாதிரை தினத்தில் திமிரி நகரின் கோட்டைப் பகுதியில் அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12வது பட்டம் சங்கராச்சாரியார் ஆசீர்வாதத்துடன் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
காலப்போக்கில் ஆற்காடு நவாப் படையெடுப்பின் போது வேலூர் கோட்டையும் பிடிபட்டது. புராதன சின்னங்களையும் ஆலயங்களையும் மொகலாயர் கொள்ளையிட்டனர். இந்த அபூர்வ பாஷாண லிங்கத்தை, அரிதாக உருவாக்கிய கன்னிகா பரமேஸ்வரர், லிங்கத்தின் மீது தேன் மெழுகு பூசி, வேதியியல் கலவையிலான கூர்ம (ஆமை) வடிவ கவசத்துள் மறைத்து வைத்து ஆலயத் திருக்குளத்தில் கி.பி. 1454ல் புதைத்து விட்டார்.
தப்பிக்கும் பொழுது அவரைக் கைது செய்து திமிரிக்கு அடுத்த ஆனை மல்லூர் ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம் முன் கொணர்ந்த மொகலாய சிப்பாய்கள், அவரை யானை காலால் மிதிபடச் செய்தனர்.
உயிர் நீங்கும் தருணத்தில் எனக்கு மற்றொரு பிறவி இருக்குமேயானால், அப்பிறவியில் என் கைகளாலேயே அந்த லிங்கத்தை மீண்டும் எடுத்துப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்" என பிரார்த்தித்து இறந்து போனார் கன்னிகா பரமேஸ்வரர்.
500 ஆண்டுகள் கடந்தன. 1985ம் ஆண்டு- திமிரி கோட்டைப் பகுதியில் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் என்பவர் ஐயப்பன் கோயில் கட்ட ஆரம்பித்தார். நிதிவசதி இருந்தும் முற்றுப்பெறாத வித்தியாசமான சூழல். வேலூரில் ஒருவரிடம் கந்தர்நாடி எனும் ஓலைச் சுவடியைப் பார்த்தார்.
அதில் பாஷாண லிங்கத்தைப் புதைத்த அரச வைத்தியரே ராதாகிருஷ்ணன் என தெளிவுபடுத்திற்று. மற்றும் பாஷாண லிங்கம் புதைக்கப்பட்ட குளம், எடுக்க வேண்டிய வழிமுறைகளையும் உணர்த்திற்று.
குற்றாலம் ஸ்ரீ செண்பகாதேவி கோயில் அருகில் புற்றில் முத்து ஒன்று கிடைக்கும். அதை வெள்ளி மோதிரத்தில் பதித்து அணிந்து கொண்டு லிங்கத்தை எடுத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது எனவும் வழிகாட்டியது. அதன்படி, திமிரி கோட்டை சோமநாத ஈஸ்வரர் ஆலய திருக்குளத்தில் 32 அடி ஆழத்தில் புதைந்து இருந்த பாஷாண லிங்கத்தை 14.6.1985 அன்று வெளிக் கொணர்ந்தனர்.
500 ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்புக் கருதி உபயோகித்த தேன்மெழுகு, மால்பச்சை, ஆமை வடிவ மேற்கவசம் ஆகியவை இந்த அபூர்வ லிங்கத்தை அதேநிலையில் காப்பாற்றி வந்தது ஆச்சரியமே!
மிகவும் அரிதாக கண்ணாடியால் உருவாக்கப்பட்ட இரண்டரை அடி உயர ஆவுடையார் - லிங்க வடிவமைப்புக்குள் பாஷாண லிங்கேஸ்வரர் பொதுமக்கள் ஒத்துழைப் புடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது திமிரி கோட்டையில் உள்ள பழைய சோமநாத ஈஸ்வரர் குளக்கரை அருகே புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
5.9.2005 திருக்குடமுழுக்கு நடைபெற்றது. தினசரி காலை, மாலை நித்திய வழிபாடுகள் உண்டு. தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படுகிறது. பௌர்ணமி நாட்களில் தேன் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் உண்டு. சித்திரை, கார்த்திகை, தை, பங்குனி சிறப்பு பௌர்ணமி நாட்கள்.
இங்குள்ள அபூர்வ லிங்கத்துக்கு ‘சந்திரகாந்த பாஷாண லிங்கம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. இங்கு கொடுக்கும் அபிஷேகத் தீர்த்தம், தேன் போன்றவற்றை முறையாக அருந்தி வந்தால் சரும நோய்கள், மனநோய்கள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் நரம்பு சம்பந்த நோய்களும் தீர்கின்றன. அபிஷேக தீர்த்தம், அபிஷேக தேன் போன்றவை சீல் வைக்கப்பட்ட குப்பிகளிலும் கிடைக்கிறது.
தஞ்சாவூரில் பிரபல வழக்கறிஞர் வெங்கடேசன். அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ள புறப்படும் தருணம். ஆனால், மருத்துவ ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தடங்கல்கள் ஏற்பட்டு மிகவும் கவலையுற்றனர். உறவினர் ஒருவர் சொல்படி, ‘ஜீவ அருள் நாடி’ பார்த்தனர்.
அதில், ‘திமிரி பாஷாண லிங்க அபிஷேக தீர்த்தப் பிரசாதமே இந்த இடையூறைத் தீர்க்கும் மருந்து’ என குறிப்பு வந்தது.
அதன்படியே திமிரியைத் தேடி வந்து அபிஷேக தீர்த்தப் பிரசாதம் பெற்றுச் சென்று வெங்கடேசனுக்கு அளித்தனர். அவர் இன்றும் நலமுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்லும் வழி
G.S.T. சாலையில் மாமண்டூரை அடுத்து படாளம் சந்திப்பிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது அரசர் கோவில். ஆற்காட்டிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் 8 கி.மீ.
தரிசன நேரம்: காலை 6.30 மணி முதல் 1 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.
தொடர்புக்கு: 9344730899

Comments