குருவாயூரில் ஒரு மோகினி

குருவாயூர் - குருவும் வாயுவும் சேர்ந்தமைத்த இறைவன் - உலகெங்கிலுமிருந்து தேடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வாரி வழங்கும் அப்பன்! அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் சாரி சாரியாக மக்கள் குருவாயூரப்பனின் நிர்மால்ய தரிசனம் காண காத்திருக்கும் ஒழுங்கைக் காணக் கண்கோடி வேண்டும். துலாபாரமும், சீவேலியுமாக கோலாகல மக்கள் கூட்டத்தினிடையே திளைக்கும் ஆலயத்துக்கு அருகிலேயே உள்ளது அரியன்னியூர் என இன்று அழைக்கப்படும் ஹரிகன்னியூர்.
குருவாயூரப்பன் கோயிலுக்கு அருகே கேட்டால் கூட, பலருக்கும் இவ்வூரையும் அங்கு அமைந்துள்ள அற்புத ஆலயத்தையும் பற்றித் தெரியவில்லை.
ஆட்டோ ஓட்டுனர்களின் தயவை நாடினால் கிட்டத்தட்ட பத்து நிமிடங்களில், வயல்களையும், சிறு வீடுகளையும் கடந்து இவ்வாலயத்தை அடையலாம்.
சிறு குன்றின் மேல் அமைந்தது போல் தோற்றமளிக்கிறது இவ்வாலயம். சரிவான மேட்டுப்பாதையில் ஏறிச் சென்றால் உள்ளே ஆள் அரவமே இல்லை. மரமும் செங்கல்லும் கொண்டு இழைத்து இழைத்து கேரளத்தின் மாபெரும் சிற்பியான பெருந்தச்சனால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கலைப் பொக்கிஷம்!
முதல்முறை கோயிலுக்கு வருபவர்கள் உள்ளே செல்லும் வழி எது எனத் தெரியாமல் திகைப்பது உறுதி. நான்கு பக்கமும் அடைத்ததுபோல் தோற்றமளிக்கும் இவ்வாலயத்தின் முன் வாசல், அருகே தாழ்வான சுவரைத் தாண்டியே உள்ளே செல்ல முடியும். இது விலங்குகள் உள்ளே செல்வதைத் தடுக்கவா அல்லது அன்னியர் படையெடுப்பின் பொழுது கோயிலின் உள்ளே உள்ள கலைப் பொருட்களைப் பாதுகாக்கவா என வியக்க வைக்கும் கட்டடக்கலை.
மிகப் பிரம்மாண்டமான பலிபீடத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கேரள கோயில்களுக்கே உண்டான நாலம்பலம்! நாலம்பலத்துக்கு நடுவே நாம் காண வந்த அரிய தெய்வம்.
ஆம்; கண் கூசும் அழகிய வடிவமாய் மோகினி அவதார ரூப மஹாவிஷ்ணு! இதழோரப் புன்னகையுடன் நம்மை நோக்கும் அழகை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். மேலிரு கரங்களில் சங்கும், சக்கரமும் ஏந்தி, கீழ் வலது கரத்தில் அமிர்த கலசம் தாங்கி, இடது கரத்தை ஒயிலாக இடுப்பில் வைத்து நிற்கும் அழகில், பாற்கடல் கடைந்த அசுரர்கள் என்ன, நாமும்கூட மயங்குவது நிச்சயம். கர்ப்பகிரகத்துக்கு முன் கூரையில் திருப்பாற்கடல் கடையப்படும் தத்ரூபமான சிற்பம்; நம் கண்முன்னே அந்த நிகழ்வு நடந்து திருமால் மோகினியாக தோன்றியதைப் போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
பிராகாரத்தில் தனி சன்னிதியில் விநாயகர். தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் இக்கோயிலில் ஆங்காங்கே காரை பெயர்ந்து உள்ளே செங்கற்கள் காட்சியளிக்கின்றன. சுற்றுச் சுவர்கள் எங்கும் கேரள பாணி வண்ண ஓவியங்களில் விஷ்ணு அவதாரங்களும், யானைகளும் எழில் கொஞ்சுகின்றன. மோகினியான ஹரிகன்யகா பகவதியை வழிபடுவதன் மூலமாக பல இளம் பெண்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் இனிதே நடைபெறுகிறது. பிறகு தம்பதி சமேதராக வந்து மோகினி விஷ்ணுவின் அருளைப் பெறுகின்றனர்.
சித்திரை மாதம் பதினைந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய அம்சம் ஹரிகன்யகா பகவதியின் சீவேலியாகும். பல யானைகள் உள்ள புன்னத்தூர்கோட்டாவிலிருந்து வரும் பெண் யானைகள் மட்டுமே ஹரிகன்யகா பகவதியை சுமந்து செல்லும் உரிமை பெற்றவை என்பது ஆச்சரியமான செய்தி. இக்கோயில் கட்ட பெருந்தச்சன் பயன்படுத்திய உளிகள் இங்கேயே அலங்காரமாக வைக்கப்பட்டுள்ளன. காண்போர் வியக்கும் அளவுக்கு அவை பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கின்றன.
ஒரு காலத்தில் முப்பத்திரெண்டு தேசங்களின் தலைநகரமாக விளங்கிய ஹரிகன்னியூர், இன்று குருவாயூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் சிறிய கிராமமாகக் காட்சியளிக்கிறது. குருவாயூரப்பன் கோயில் இருக்கும் கிழக்கு நடையிலிருந்து குருவாயூர் - சூண்டல் சாலை நோக்கிச் சென்றால், ஐந்து கி.மீ. தொலைவில் வலப்புறம் காணப்படுகிறது இவ்வாலயம்.
தரிசன நேரம்: காலை 5.30 மணி முதல் 9.30 வரை.
மாலை 5.30 மணி முதல் 7.30 வரை.

Comments