அழிவை நோக்கி பாரம்பரிய பொக்கிஷங்கள்!

நமது கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; அங்கே பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களும், ஓவியங்களும் பாரம்பரிய பெருமைகளைச் சொல்லும் காலக் கண்ணாடிகள். அவற்றை அழிவிலிருந்து காக்க வேண்டியது நமது கடமை" என்கிறார் வரலாற்று ஆராய்ச்சியாளர் சித்ரா மாதவன். இது தொடர்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் அவரைச் சந்தித்தோம்.
பொதுவாக என் பேச்சில் மூன்று விஷயங்களைக் கையாள்கிறேன். பழம் பெருமை வாய்ந்த, புகழ்பெற்ற கோயில்களின் சிறப்புகளைச் சொல்வது; அடுத்து, காலங்கள்தோறும் கோயில் கட்டட மற்றும் சிற்பக் கலை வளர்ச்சி; அடுத்து அந்த பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டிய தன் அவசியம்.
உதாரணமாக தஞ்சை பெரிய கோயிலை எடுத்துக் கொள்ளுங்கள். கோபுரங்களும், விமானமும், சுற்றுச்சுவரும் ராஜராஜன் கட்டியவை. ஆனால், பாண்டியர்கள் காலத்தில் அம்மன் சன்னிதியும், நாயக்கர் காலத்தில் சுப்பிரமணிய சுவாமி சன்னிதியும், மராட்டியர் ஆட்சியின்போது, பிள்ளையார் சன்னிதியும் கட்டப்பட்டன. ஸ்ரீரங்கம் கோயில் சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் விஜய நகர அரசுகளால் மேம்படுத்தபட்டவை. பாண்டிய அரசன் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் கோயிலை தங்கத்தால் இழைத்தான். (பின்னர், மொகலாயர் படையெடுப்பில் தங்கம் பறிபோனது துயர வரலாறு) தென்னிந்திய கோயில்களை கட்டிக் காப்பாற்றி, மேம்படுத்தியதில் விஜய நகரப் பேரரசின் பங்களிப்பு மிக அதிகம்.
அதேபோல் நமது கோயில்களை சிற்பக் கலையின் உன்னத வெளிப்பாடாக மாற்றி பிரமிக்க வைத்தவர்கள் பல்லவர்கள். அவர்கள் சிற்பக் கலையின் உச்சக் கட்ட வெளிப்பாடு கைலாசநாதர் கோயில். நாயக்க மன்னர்கள் காலத்தில் நமது கோயில்களில் ஓவியக் கலையும் இடம் பெற்றது. ஸ்ரீரங்கத்தில் தாயார் சன்னிதி, ராமானுஜர் சன்னிதி, அழகிய சிங்கர் சன்னிதி ஆகிய சன்னிதிகளில் நாயக்கர் காலத்து ஓவியங்கள் ஓரளவு காப்பாற்றப்பட்டு வருகின்றன.
நமது கோயில்களில் உள்ள கல்வெட்டுக்களில் மக்களின் வாழ்க்கை, கலாசாரம், ஆட்சி முறை, மருத்துவம் மற்றும் தாவரங்கள் தொடர்பான நிறைய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவை நமது சரித் திரத்தை ஆதாரபூர்வமாகச் சொல்பவை. இப்படி நமது கோயில்களின் சிறப்பைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
காலத்தை காட்டும் இந்த கலைப் பொக்கிஷங்கள் அழிவைச் சந்திப்பது எப்படி?
இந்த விஷயத்தில் மாநில, மத்திய அரசுகளை நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை. இந்த இரண்டு அரசுகளின் தொல்பொருள் இலாகாக்கள் பராமரிக்கும் கோயில்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், மற்ற கோயில்களில் பழுதுபார்க்கும்போது ஆபத்து வருகிறது. கருங்கல் சுற்றுச்சுவர்கள் மற்றும் தூண்களிலுள்ள கிரந்த, வட்டெழுத்துக்களின்மீது, கலர் பெயின்ட் அடித்து விடுகிறார்கள். சில கோயில்களில் டைல்ஸ் பதிப்பது கொடுமை. இப்படிச் செய்தால் கோயில் எப்போது கட்டப்பட்டது என்றே எதிர்காலத்தில் தெரியாது. எந்தக் கோயிலை பழுதுபார்ப்பது என்றாலும், இனி ஒரு தொல்பொருள் இலாகாய் அதிகாரியின் ஆலோசனை பெற்ற பிறகே செய்ய வேண்டும். கோயில் நிர்வாகம் இப்படி கலைப் பொக்கிஷங்களை அழிக்கிறது என்றால், வழிபாட்டுக்கு வரும் பொதுமக்கள் விபூதி, குங்குமத்தை தூண்களில் கொட்டுவது; சிற்பங்களை, ஓவியங்களைச் சேதப்படுத்துவது; அசிங்கப்படுத்துவது என்று செயல்படுகிறார்கள்.
இன்னமும் ஒரு அநியாயம் நடக்கிறது. கருவறை மற்றும் அர்த்த மண்டபச் சுவர்களில், தங்கத் தகடுகளை அடித்தும் கல்வெட்டுகளை மறைத்துவிடுகிறார்கள். இது போன்ற செயல்களால், முக்கியத் தகவல்களைக் கொண்ட கல்வெட்டுகள் பல அழிந்துபோவிட்டன. இனிமேலாவது, இவற்றை சேதமின்றி பாதுகாக்க வேண்டியது நம் கடமை. உள்ளே குளிர்சாதன வசதிக்காக சகட்டுமேனிக்கு தூண்களையும், சுவர்களையும் சேதப்படுத்துகிறார்கள். இன்னமும் சில கோயில்களில் அலுவலகங்கள் அமைந்திருக்கும் இடங்கள் சரித்திரத்தை தாங்கி நிற்கும் கல்வெட்டுப் பகுதிகளாக இருக்கின்றன. எங்களைப் போன்ற வரலாற்று ஆர்வலர்கள் கூட அவற்றைப் பார்க்க முடிவதில்லை. பல கோயில்களில் கற்பூரம் காட்டுவதை நிறுத்தியது வரவேற்கத்தக்க மாற்றம்.
உங்கள் விழிப்புணர்வு பிரசாரம் எப்படி அமைகிறது?
பள்ளிகளில் ஏற்கனவே இருக்கும் வேலை அழுத்தத்தில், இந்த தலைப்பில் பேச சில பள்ளிகளே விருப்பம் காட்டுகின்றன. ஆனால், தொன்மையை காக்க விரும்பும் பல அமைப்புகள் பொதுமக்கள் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்கின்றன. எனது கூட்டங்களில் முதலில் ண்டூடிஞீஞு ண்டணிதீ. நமது கோயில்களின் பெருமைகளைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு காட்சிகள் இருக்கும். குறிப்பாக சிற்ப, கட்டடக் கலைக்கு பிரசித்திபெற்ற ஆவுடையார் கோயில், தாராசுரம், காஞ்சி கைலாசநாதர் போன்ற கோயில்களின் காட்சிகளைப் போடுவேன். பொதுமக்களால் அவைகள் எப்படி சிதைக்கப்படுகின்றன என்பதையும் காட்டுவேன். பள்ளிக்குழந்தைகள் மிக ஆர்வமாக என் உரைகளைக் கேட்கிறார்கள். அவர்கள் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறும்போது சந்தோஷமாக இருக்கிறது. கோயில்களுக்குச் சென்றால், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்குவேன். குறிப்பாக பிரசாதங்கள் சாப்பிடுவது, தேங்காய் உடைப்பது, விபூதி குங்குமத்தை கையாள்வது போன்றவற்றில் கோயில் சுற்றுச்சூழல் மற்றும் கலைச் செல்வங்கள் பாதிக்கப்படாமல் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைச் சொல்வேன். பள்ளி மாணவ, மாணவிகள் என் பேச்சைக் கேட்டு கலைந்து செல்லும்போது, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை அவர்கள் பேச்சுக்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. பொது மக்களுக்கு இப்போது கோயில்களைப் புனருத்தாரணம் செய்வதில் புதிய ஆர்வம் ஏற்பட்டிருப்பதைக் காண்கிறேன். காலத்தின் வீரியத்தால் புராதனக் கோயில்கள் அழிவைச் சத்திக்கின்றன. அந்தக் கோயில்களை பழுதுபார்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
வேறு எந்த வகையில் உங்கள் செயல்பாடு அமைகிறது?
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வழிகாட்டிகளுக்கு பயிற்சி கொடுக்கிறேன். அவர்களிடம் நான் வலியுறுத்தும் ஒரு விஷயம், ‘வரலாற்றை திரிக்காமல் சொல்லுங்கள். நமது பெருமையை சொல்கிறேன் என்ற பெயரில் பொத்தகவல்களை சொல்லாதீர்கள்’ என்பதுதான். நாட்டியக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து நமது கோயில்களின் சிறப்பை சொல்லும் நிகழ்ச்சிகளையும் செய்கிறோம். காஞ்சிபுரத்தின் சிறப்பை நான் சொல்ல, தொடர்ந்து நாட்டியக் கலைஞர் சமய இலக்கியங்களில் அந்த நகரின் சிறப்பை விளக்கும் பாடல்களுக்கு நடனமாடுவார். அதே போல், ஸ்ரீரங்கம் கோயிலின் பெருமையை நான் சொல்வேன். தொடர்ந்து பாடகர் அந்தக் கோயிலைக் குறித்து பாடுவார். இந்த நிகழ்ச்சிக்கு ‘ஷேத்திர சங்கீதம்’ என்று பெயர். இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பொதுமக்கள் மத்தியில் நமது கோயில்களையும், அதன்மூலம் பாரம்பரியத்தையும் காக்கவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுகிறது.

சரித்திரத்தை - குறிப்பாக இந்திய சரித்திரத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு என அனைத்திலும் சரித்திரத்தைப் படித்தவர் இவர். தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டுகள் குறித்து ஆராச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவர். நமது கோயில்களின் பெருமை குறித்து ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் மூன்று புத்தகங்கள் தென்னிந்திய விஷ்ணு கோயில்கள் பற்றியவை.

சித்ரா மாதவன்

Comments