அதிசய ராமர்

குடகு மலையில் தோன்றி கர்நாடகத்தில் பயணித்து, தமிழகத்தின் வயல்வெளிகளில் பொன்னொளிரச் செய்ததால், ‘பொன்னி’ என்று போற்றப்படுகிறது புனித நதியான காவிரி. இந்தப் பெருநதியில் உள்ள அருவிகள் என்று சொன்னால், சிவசமுத்திரம் மற்றும் ஒகேனக்கல் என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், இவை தவிர, அழகான ஒரு அருவியும் காவிரியில் உண்டு. அதை நாம் காண்பது சுஞ்சனகட்டே (Chunchanakatte) என்னும் இடத்தில்.
கர்நாடக மாநிலம், கிருஷ்ணராஜ நகர் தாலுகாவில் அமைந்த பகுதி இது. மேற்கு மலைத் தொடரில் 60 அடி உயரத்திலிருந்து சுமார் 300 அடி அகலத்துக்கு பேரிரைச்சலை எழுப்பியபடி பாய்கிறது பெருவெள்ளம். சுமார் பத்தடி தொலைவுக்கு நீர் பாய்ந்து விழுகிறது என்றால், அருவியின் வேகமும், வெள்ளத்தின் தன்மையும் ஓரளவு உணரத்தக்கதாக இருக்கும். காற்றிலேயே நீர்த் திவலைகளை சிதறடித்தபடிப் பெருகும் அந்தப் பகுதியில், நீர் மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
கடினமான மலைப்பாறை, பசுமையான மரங்கள், வேகத்துடன் பாயும் நீர், அதனால் எழும்பும் இரைச்சல்... என அபூர்வமான இயற்கைச் சூழல். அழகு கொஞ்சும் இந்தப் பிரதேசத்தில்தான் அமைந்திருக்கிறது கோதண்டராமருக்கான எழிலார்ந்த கோயில்.
வனவாச காலத்தில் ராமர் - சீதை - லட்சுமணன் ஆகியோர் இங்கு வந்தபோது இம்மலையில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த செஞ்சா, செஞ்சி எனும் தம்பதிகள் இவர்களை வரவேற்று உபசரித்துள்ளனர். (ஆந்திர மாநிலம் அஹோபிலத்தில் தாயாருக்கு செஞ்சுலட்சுமி என்றே திருநாமம். செஞ்சு என்பது மலையில் வாழும் பழங்குடி இனத்தவரை குறிக்கும் சொல்.)
சீதைக்கு ஒரே அசதி. அதனால் தாகமும், குளிக்கும் ஆசையும் எழுந்தது. அதை உணர்ந்த ராமன் லட்சுமணனிடம் மலைத் தொடரில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி அம்பு எய்யும்படி கூறினார். லட்சுமணனும் அம்பு எய்ய, அங்கிருந்து தண்ணீர் வெள்ளமாய் பெருகியது. சீதையும் நீராடி மகிழ்ந்தாள். அந்த சமயம் ஒரு ரிஷி ராமரை தரிசிக்கிறார். அவர் கேட்டுக் கொண்டபடியே தம் வலப்புறம் பிராட்டியைக் கொண்டவராகத் தரிசனமளிக்கிறார் ராமர். அதையடுத்து, வலப்புறம் சீதாப் பிராட்டி இருப்பது போன்றே ஆலயமும் உருவானது என்கிறார்கள்.
அழகிய மதில் சுவருடன் அமைந்திருக்கிறது திருக்கோயில். முக்கியமான விஷயம் என்னவென்றால், மூலஸ்தானத்தில் ராமனுக்கு வலப்புறம் சீதை, இடப்புறம் இலக்குவன். இவ்வளவுதான். வலப்புறம் பிராட்டியுடன் காட்சி தரும் கோலத்தை கல்யாண கோலம் என்பது மரபு. அதனால், கோதண்டராமனை கல்யாணராமனாகவே எண்ணி மகிழலாம். இப்படி கல்யாணக் கோலத்தில் அமைந்த மூர்த்திகள், ஆற்றங்கரையோரம் அமைந்த சன்னிதிகள் எப்போதும் விசேஷ அனுக்ரகம் வாய்ந்தவை. உள்ளார்ந்த பக்தியுடன் இப்படிப்பட்ட தலங்களில் பிரார்த்தனைகளைச் செய்வது மிகச் சிறந்த பலனளிக்கும். ஆச்சர்யமாக, மூலஸ்தானத்தில் அனுமனுக்கு மூர்த்தம் இல்லை. ஆனால், அனுமன் தனியே சன்னிதி கொண்டிருக்கிறான். கோயிலில் மட்டுமல்ல, அருவிக் கரையிலும் அனுமனுக்கு சன்னிதி உண்டு.
மற்றொரு அதிசயமும் இங்கு உண்டு. கோதண்டராமர் கோயிலின் உள்ளே செல்வது வரை அருவியின் பேரிரைச்சல் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், கர்ப்பக் கிரகத்தினுள் நுழைந்துவிட்டால், சப்தமே கேட்பதில்லை. இந்த அதிசயம் எப்படி என்பது இன்றுவரை புரியாத புதிர். இதனை ரசித்து உணர்வதற்காகவே இன்றும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்குச் செல்கிறார்கள்.
செல்லும் வழி
மைசூரில் இருந்து ஹாசன் செல்லும் நெடுஞ்சாலையில், 57 கி.மீ. தொலைவில் உள்ளது கே.ஆர் நகர் என்னும் கிருஷ்ணராஜ நகர். இங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் கோயில்.
தரிசன நேரம்: காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை.

Comments