மிச்சம் இல்லாமல் தர்மம் செய்!

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகில் உள்ள சின்னஞ் சிறிய கிராமம் சுவாமி தோப்பு. இந்த ஊரில்தான் அய்யா வைகுண்ட சுவாமிகள் திருக்கோயில் திருப்பதி உள்ளது.
கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20ஆம் நாள் திருச்செந்தூர் கடலில் இருந்து சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும், ஒரு மூர்த்தியாக  வைகுண்ட பரம்பொருளாக அவதரித்து வெளியே வந்தார் அய்யா வைகுண்ட சுவாமி. மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் கலி என்னும் மாய அரக்கனை அழித்து, அவர்களை தர்மயுக வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வந்த நாராயணன் எடுத்த அவதாரமே வைகுண்ட அவதாரம். அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் பூஜையோ, பூசாரியோ கிடையாது. அய்யா வைகுண்டரின் சிந்தாந்தம் 'நீ தேடும் சிவன் உனக்குள்ளேயே இருக்கின்றான்' என்பதுதான். அதை குறிப்பால் உணர்த்துவதுதான் இந்த வழிபாட்டு முறை. இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்ததும் அய்யா வைகுண்டர்தான். மகாவிஷ்ணுவின் அவதாரமாக அய்யா வைகுண்ட சுவாமிகள் இருந்தபோதும் தனது அவதார திருப்பணி நிறைவுறும்வரை 'சிவனே அய்யா... அய்யா சிவ சிவ சிவ சிவ அரஹரா அரஹரா...’ என ஈசனையே போற்றி துதித்தார். 'அரசனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கிரீடம்’ என்று ஆண்களைத் தலையில் தலைப்பாகை கட்ட வைத்தார் அய்யா வைகுண்ட சுவாமிகள்.
அய்யா வழி பக்தர்கள் புருவ மத்தியில் இருந்து நெற்றியில் மேல் நோக்கி திருமண்ணால் நாமம் இட்டுக் கொள்வார்கள். இந்தத் திருமண், பூமிக்கு அடியில் உள்ள தூய்மையான வெள்ளை மண்ணில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
சுவாமிதோப்பு பதியில், கருவறையில் ஒரு கண்ணாடி இருக்கும். அதை பார்த்து தெய்வத்தை தன்னுடைய உருவமாக நினைத்து வழிபட வேண்டும். இங்கே தினமும் மூணு வேளை சமபந்தி அன்னதானம் நடக்கும். 'பிச்சை எடுத்து மிச்சம் இல்லாமல் தர்மம் செய்’ இதுதான் அய்யா வைகுண்ட சுவாமியின் தத்துவம்.
இத்தகு மகிமைகள் மிக்க சுவாமிதோப்பில், ’ வைகாசி' திருவிழா இனிதே நடைபெற்றது.

நந்தியை வழிபடும் முறை!
சிவாலயங்களில் நந்திகேஸ் வரரை வழிபடும்போது அவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, வெல்லம் கலந்த பச்சரிசியை நைவேத்தியமாக படைத்து நெய்விளக்கு ஏற்றி, வில்வ இலைகளால் அலங்காரம் செய்து, அருகம்புல் மாலை சாத்தி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். ’பிரதோஷ’ நாளில் வழிபடுவது மிகச் சிறந்ததாகும்.
நந்திகேஸ்வரர் ’ருத்ரன்’ என்ற திருநாமம் கொண்டும் அழைக்கப் படுகிறார். ’ருஹ்’ என்றால் துயரம் ’த்ரன்’ என்றால் ’விரட்டுபவன்’ என்று பொருள். அதாவது ’துயரங்களை விரட்டுபவன்’ என்று பொருள்படும்படியாக அருள்கிறார் நந்தி! ரிஷப தேவர், இடப தேவர் என்ற பெயர்களிலும் இவர் வழங்கப்படுகிறார்.

தருமன் செய்த தவறு!
மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறிய பிறகு, பகவான் கிருஷ்ணரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம். 

''கிருஷ்ணா, நீ பாண்டவர்கள் மேல் அளவில்லா அன்பு கொண்டவன். அவர்கள் நலனில் அக்கறை உள்ளவன். அப்படி இருக்க, பாண்டவர்கள் சூதாடி,  நாட்டை இழந்து நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள். நீ நினைத்து இருந்தால் இதை தடுத்து இருக்க முடியாதா?''
இதற்கு கிருஷ்ணன் சொன்ன பதில் இதுதான்:
''சூதாடுவது என்பது அரச தர்மம். ஆகவே, தருமன் சூதாடியதில் தவறில்லை. ஆனால், துரியோதனன் சூதாட அழைத்தபோதே 'என் சார்பாக மாமா சகுனி ஆடுவார்’ என்று சொல்லி விட்டான். தருமனோ, 'தான்’ என்ற எண்ணம் கொண்டு தானே ஆட முனைந்தான். அவன் தனது சார்பாக என்னை அறிவித்திருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். எனவே, தருமன் செய்த தவறுதான் இந்த நிலைமைக்குக் காரணம்'' என்றார்.

Comments