அட்டமா ஸித்தி அருளிய பட்டமங்கலம்

அம்பா, துலா, நிதர்த்தளி, அப்ரகேந்தி, மேகேந்தி, வர்த்யேந்தி ஆகிய ஆறு பெண்களுக்கும் சிவனாரிடம் அட்டமா ஸித்திகளை உபதேசம் பெறவேண்டும் என்று விருப்பம். இவர்கள் வேறு யாருமில்லை; சரவணப் பொய்கையில், முருகப் பெருமானுக்குப் பாலூட்டி, சீராட்டி வளர்த்த அதே கார்த்திகைப் பெண்கள்தான்!
அறுவரும் சிவனாரை வணங்கி, தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். சிவனார், ''உமாதேவியிடம் பிரார்த்தியுங்கள்; அருள்புரிவாள்'' என்றார். ஆனால், இதற்கு அவர்களின் கர்வம் இடம் கொடுக்கவில்லை. சிவனாரே தங்களுக்கு நேரடி உபதேசம் நல்க வேண்டும் என்று, உமையவளைத் தவிர்த்தனர்; இதனால் சாபத்துக்கு ஆளாகி, கதம்ப வனம் ஒன்றில் ஆலமரத்தடியில் கல்லாகிப் போனார்கள்.
காலங்கள் கழிந்தன. குரு வடிவாக அந்த மரத்தடிக்கு வந்த சிவனார், ஆலம் பழங்களால் மூடப்பட்டுக் கிடந்த கற்களின் அருகில் அமர்ந்தார். கற்கள் உயிர் பெற்றன. சுய உரு பெற்ற கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமா ஸித்திகளையும் உபதேசித்தார் சிவனார். அத்துடன், அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க, அங்கேயே குடிகொண்டார்.
கதம்பவன புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்கள் விவரிக்கும் இந்தத் தலத்தின் பெயர் பட்டமங்கலம். இது சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரராக கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில், ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தியாகவும் அருள்கிறார் ஆதிசிவன். கிழக்குப் பார்த்த ஆலயம்; குரு தட்சிணாமூர்த்தியும் கிழக்கு நோக்கி இருப்பது, இந்த ஆலயத்தின் விசேஷம் என்கின்றனர் பக்தர்கள். இங்கு வந்து, சிவனாரையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வழிபட, சகல தோஷங்களும் நீங்கும்; சந்தோஷம் நிலைக்கும்.
பதவி உயர்வு தரும் திட்டை குரு பகவான்!
தேவர்களுக்கெல்லாம் குரு எனும் உயர்ந்த பீடத்தில் இருந்த குரு பகவானுக்கு இன்னும் உயர்வு பெற வேண்டும் என்று  ஆவல் எழுந்தது. தனது விருப்பத்துக்கு இறையருளே கைகொடுக்கும் என்று முடிவு செய்தவர், அடர்ந்த வனப்பகுதியை அடைந்தார். அங்கு கோயில் கொண்டிருந்த இறைவனை மனத்தில் இருத்தி கடும் தவத்தில் மூழ்கிப் போனார். அவரது தவத்துக்கு அருள் வழங்கத் திருவுளம் கொண்ட சிவப்பரம்பொருள், குருபகவானுக்கு திருக்காட்சி வழங்கினார். அதுமட்டுமா? நவகிரக பதவியையும் வழங்கி, பிரகஸ்பதியை ஆசீர்வதித்தார்.
இங்ஙனம், தேவகுருவான பிரகஸ்பதி, கிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு பெற்ற தலம் திட்டை. தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இது. அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் குடியிருக்கும் திட்டை திருக்கோயிலில், ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவே தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார் குரு பகவான். சிறந்த வரப்பிரசாதி!
திருமணம் கைகூட, குருபலம் கூடிவர வேண்டும் என்பது சிவ வாக்கு. அப்படியான ஒரு வரத்தை அருளக்கூடியவர் இவர். அதுமட்டுமின்றி, இங்கு இவருக்குப் பதவி உயர்வு கிடைத்ததால், இங்கு வந்து இவருக்கு அர்ச்சனை செய்து வழிபடும் அன்பர்களுக்கு உயர்பதவி யோகமும் கிடைக்கும்.
அமிர்த வாழ்வு தரும் ஆலங்குடி!
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்திருக்கும் தலம் ஆலங்குடி. கும்பகோணத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவு. சிவபெருமான், ஆலகால விஷத்தை அருந்தி தேவர்களைக் காப்பாற்றியதால், இத்தலத்து இறைவனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் என்று திருநாமம். அம்பாளின் திருநாமம் ஸ்ரீ ஏலவார் குழலியம்மை.
கலங்காமற்காத்த விநாயகர் அருளும் தலம்; திருமால், பிரம்மா, லட்சுமி, கருடாழ்வார், ஐயனார், வீரபத்திரர் ஆகியோர் தனித் தனியே லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட க்ஷேத்திரம்; விஸ்வாமித்திரர், அகத்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகபிரம்மம் ஆகிய முனிவர்களும், அஷ்டதிக் பாலகர்கள், முசுகுந்த சக்கரவர்த்தி, சுந்தரர் ஆகியோரும் வணங்கி அருள் பெற்ற திருக் கோயில்; ஞானசம்பந்தர் பாடிப் பரவிய புண்ணிய பூமி எனச் சிறப்புகள் பல கொண்ட இந்தத் திருத்தலத்தின் நாயகன் குரு தட்சிணாமூர்த்திதான்.
தன் அன்னை விநதையை அடிமைத்தளை யில் இருந்து மீட்பதற்காக, தேவலோகத்தில் இருந்து அமிர்தக் கலசத்தை வென்று வந்த கருட பகவான், அந்த அமிர்தத்தால் அபிஷேகித்து வழிபட்ட ஸ்வாமி இவர். வியாழக்கிழமைகளில் இத்தலத்துக்கு வந்து, இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், அமிர்தமயமான வாழ்க்கை அமையும்.
குரு வழிபட்ட திருவலிதாயம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குரு திருத்தலம் திருவலிதாயம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து (சுமார் 6 கி.மீ. தொலைவு) ஆவடி, அம்பத்தூர் (ஓ.டி.) செல்லும் பேருந்தில் ஏறி, பாடி லூகாஸ் டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். இங்கிருந்து ஐந்து நிமிட நடைதூரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஜகதாம்பிகை சமேத திருவலிதாய ஸ்வாமி திருக்கோயில்.
மேனகையின் சாபத்தால் குருவியாக மாறிய பரத்வாஜ முனிவர் இந்தத் தலத்துக்கு வந்து, பல்லாண்டு காலம் சிவ வழிபாடு செய்து விமோசனம் பெற்றார் என்கிறது தலபுராணம். அவர் மட்டுமின்றி, இந்திரன், பிரம்மன், விஷ்ணு, சூரிய சந்திரர், அக்னி, அனுமன் மற்றும் நட்சத்திர தேவதையரும் இங்கு வந்து வழிபட்டு, அருள் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, குருபகவானும் சிவபூஜை செய்து வழிபட்ட தலம் இது என்பதால், திட்டை, ஆலங்குடி, திருச்செந்தூர் போன்று இதுவும் குரு பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
இங்கே அருள்பாலிக்கும் குரு பகவான் கொள்ளை அழகு! இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, முல்லைப் பூவால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வணங்குங்கள்; அத்தனை தோஷங்களும் விலகும் என்கின்றனர்.
ராஜ யோக அருளும் திருவேங்கைவாசல்!
ஈஸ்வரன் புலியாக வந்து, காமதேனுவின் சாபம் நீக்கியருளிய திருத்தலம் திருவேங்கைவாசல். புதுக்கோட்டைகீரனூர் சாலையில், புதுக்கோட்டையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். திருவேங்கைவாசலில் உள்ள இறைவனின் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம்  ஸ்ரீ பிரகதாம்பாள்.
இத்தலத்தின் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, விசேஷ கோலத்தில் அருள்பாலிக்கிறார். அபய ஹஸ்தம் தாங்கி, ஒரு கையில் ருத்திராட்சமும் இன்னொரு கையில் சர்ப்பமும் கொண்டு காட்சி தருகிறார். யோக நிலையில் இருந்து கண்விழித்து, பக்தர்களுக்கு அருள்வதற்காக எழுந்து வருவது போலான இவரது திருக்கோலம், வேறெங்கும் காண்பதற்கு அரிது!  குருப்பெயர்ச்சியின்போது இங்கே சிறப்பு ஹோமங்கள் மற்றும் பரிகாரங்கள் விமரிசை யாக நடைபெறுகின்றன. அந்த நாளில் இங்கு வந்து ஹோமத்தில் பங்கேற்று, ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசித்தால் குரு பலம் கூடும்; ராஜ யோகம் பெறலாம்; நஷ்டத்தில் உள்ள தொழில் மளமளவென ஏற்றம் பெறும். குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்; கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.
குரு வீற்றிருந்த குருவித்துறை!
மதுரையில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான். இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குருவித்துறை. குருவின் பெயராலேயே அமைந்த தலம்; குரு பகவான் திருமாலின் அருள்பெற்ற தலம் இது.
பெண்ணொருத்தி தந்த சாபத்தால், சப்த மலை களாலும் சூழப்பட்டு, இந்திரலோகம் செல்ல முடியாமல் சிறையுண்டு கிடந்தான் கச்சன்.அவனை மீட்க வழி தெரியாமல் கலங்கிய
அவனுடைய தந்தை, நாரதரிடம் ஓடினார். நாரதரின் வழிகாட்டலின்படி வேகவதி நதிக் கரையில் தனக்கெனப் படித்துறை அமைத்து, அந்த நதியில் நீராடி, ஆற்றங்கரையில் கடும் தவம் மேற்கொண்டார். இதில் மனம் பூரித்த திருமால், அவருக்குத் திருக்காட்சி தந்தார். அதுவும் எப்படி?! சித்திரை மாதத்தில், ஆயிரம் சித்திரங்கள் கொண்ட ரதத்தில் வந்து திருக்காட்சி தந்தார். அத்துடன், அவரின் கோரிக்கையை ஏற்று, அவருடைய மகன் கச்சனையும் மீட்டுத் தந்தருளினார்.
அன்று முதல், அந்தத் தலத்தில் இருந்தபடி அனைவருக்கும் அருள்பாலிக்கலானார் திருமால். அவருக்குச் சித்திர ரத வல்லப பெருமாள் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல், கச்சனின் தந்தையும் அங்கே தனிச்சந்நிதியில், தனிக்கோயிலாகவே அமர்ந்து அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார். அந்தத் தந்தை, குரு பகவான்! மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகில் உள்ள அந்தப் பகுதி, குருவித்துறை என்றே அழைக்கப்படுகிறது. குரு வீற்றிருந்த துறை என்பதால் இந்தப் பெயரே ஊர்ப் பெயராகவும் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம்.
குரு பகவான் குடிகொண்டிருக்கும் தலத்தில், குருப்பெயர்ச்சியின் போது சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடை பெறுகின்றன. இந்த யாகத்தில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தொழில் சிறக்கும், கல்விகேள்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்!
குருவருள் சுரக்கும் புதுக்கோட்டை!
புதுக்கோட்டை என்றதும் நினைவுக்கு வருவது ஸ்ரீ பிரகதாம்பாள் திருக்கோயில்தான். சிற்ப அற்புதங்கள் நிறைந்த இந்த ஆலயத்தின் சிவனார் திருநாமம் ஸ்ரீ கோகர்ணேஸ்வரர். 
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்தின் இன்னொரு அற்புதம்... ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி. சிவனாரது சந்நிதியின் கோஷ்டத்தில் இருந்தபடி அருள்வதுதானே, ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் வழக்கம்? ஆனால் இங்கே, விநாயகருக்கு அருகில் இருந்தபடி அருள்கிறார் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி.
குருப்பெயர்ச்சி நாளில், ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, முல்லைப் பூ மாலை அணிவித்து வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்; எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியைத் தேடித் தரும்; குருவின் பேரருள் கிடைக்கப் பெற்று, கல்வி கேள்விகளிலும், தொழில் மற்றும் வேலையிலும் முன்னுக்கு வரலாம் என்கின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீ சிவயோக ஹரி குரு அருளும் திருவையாறு!
மகாவிஷ்ணுவுக்குக் குருவாக இருந்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம், திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில். இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி. 
திருவீழிமிழலையில் கண்மலரிட்டு வழிபட்டு சக்கராயுதம் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றாராம். எனவே, இந்தத் தலத்தின் தட்சிணாமூர்த்திக்கு, ஸ்ரீ சிவயோக ஹரி குரு தட்சிணாமூர்த்தி என்று திருநாமம். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரை; இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கி, அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி. இங்கேயுள்ள தியான மண்டபத்தில், வடக்கு நோக்கி அருளும் ஸ்ரீ ஆதிவிநாயகரைத் தரிசித்துவிட்டுத்தான் தட்சிணாமூர்த்தியை வழிபடவேண்டும் என்பது ஐதீகம்!
குரு ஸ்தலம் எனப் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், மாதந் தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில், குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் கலந்துகொண்டு, அபிஷேகம் செய்து, ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் நிலைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

Comments