என்ன வரம் கேட்பது?

தன்னைச் சரணடைந்தவர்களை இறைவன் என்றுமே கைவிட்டதுமில்லை, கைவிடப் போறது மில்லைங்கறதைத்தான் நம்மோட புராணக் கதைகள் நமக்குக் காட்டிக் கொடுக்கிறது. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சரி, நம்மைப் படைத்த அந்த இறைவன் நம்மைக் கை விடவே மாட்டான். எப்படியும் துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுவான்ங்கற அசைக்க முடியாத நம்பிக்கையை நாம் அவன் மீது வைக்க வேண்டும். விஷ்ணு புராணத்தில், பராசரர் மைத்ரேயருக்கு உபதேசம் பண்ணிய பிரகலாத சரித்திரம் இதைத்தான் காட்டுகிறது” என்றார் தம் சொற்பொழிவில் வீழிநாதன்.
“இறைவனின் ஸ்மரணையிலேயே சதா சர்வ காலமும் இருப்பவர்களுக்கு யாரையும் பகைவர்களாகவே பார்க்க தெரியாது. என்னுள் உறையும் அந்த நாராயணன்தானே எல்லாருக்குள்ளும் உறைகிறார். அப்படி இருக்கும்போது நான் எப்படி மற்றொருவரை பகைவராகப் பார்க்க முடியும் என்ற முதிர்ச்சியோடு, தனக்கு உணவில் விஷம் சேர்த்து கொடுத்தவர்களையும், தன்னை தீயில் பொசுக்கிட வேண்டும் என நினைத்து அக்னி வளர்த்த புரோகிதர்களையும் அன்பாகவும், கருணை உள்ளத்தோடும் பார்த்தார் பிரகலாதன்.
அக்னி தானாகவே அணைந்து விடுகிறது. அக்னியை வளர்த்த புரோகிதர்கள் குழந்தை பிரகலாதனைப் பார்த்து, ‘நீ சகல க்ஷேமத்தோடும், புத்திர, பேரப் பிள்ளைகளோடும் நீடுழி வாழணும்’னு வாழ்த்தறா. ஹிரண்ய கசிபுவுக்கு ஒரே ஆச்சரியாமாகி விடுகிறது. எந்த மாயம் பண்ணியும் இந்தப் பிள்ளையை ஒண்ணுமே செய்ய முடியலியேன்னு நினைத்துக் கொண்டே, ‘ஏம்பா குழந்தே, நீ என்ன ஏதாவது மந்திரம் தந்திரம் செஞ்சுண்டு இருக்கியா?’ன்னு கேட்கறார்.
உடனே, பிரகலாதன் அப்பாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, ‘அப்பா நான் மந்திரம், ஜபம் பண்ணதால இப்படி ஆகல. இயற்கையாகவும் இப்படி எல்லாம் நடக்கக்கூடிய வித்தையை அறியல. யார் யார் இதயத்திலெல்லாம் அந்த நாராயணன் இருக்கிறானோ அவர்களை எல்லாம் அந்த பகவானே சகல ஆபத்துலேர்ந்தும் காப்பாற்றுவார். அதேதான் எனக்கும் நடந்திருக்கு’ என்கிறார் பவ்யத்தோடு.
ஒருத்தருக்கு சொல்லால், செயலால் மட்டுமல்ல; மனசாலும் நாம் பாவத்தை செய்யக் கூடாது. ஒருத் தரை அடிக்கறது, மனசால கெட்டுப் போகணும்னு நினைக்கறது, இன்னொருத்தரை விட்டு அடிக்கச் சொல்றது இது எல்லாமே பாவங்கள்தான். எது புண்ணியம்? ஒரு ஏழை ஏதோ உதவி கேட்டு வர்றார்னா நம்மால முடிஞ்சா, நாமே அவருக்கு உதவி செய்யறது ஒரு வகை. நம்மால முடியலியா? சரி வேறு ஒரு பணக்காரர்கிட்ட அவரை உதவிக்குன்னு அனுப்பறது இன்னொரு வகை. சரி அதுவும் செய்யலியா, அந்த ஏழைக்கு எங்கேயோ உதவி கிடைச்சு அவர் நல்லா இருக்கட்டும்ன்னு நினைக்கறது இன்னொரு வகை. பிரகலாதன் என்ன பண்ணார்? ஒருத்தருக்கும் நான் பாவம் செய்யவும் மாட்டேன், சொல்லவும் மாட்டேன், மனசால் நினைக்கவும் மாட்டேன்னு இருந்தவர். சிறுவன் பிரகலாதன். இந்த உயரிய குணங்களாலேயே மிகப் பெரியவராகி விட்டார்.
உயரமான மலையிலிருந்து குழந்தையை தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்தான் ஹிரண்ய கசிபு. குழந்தை தன் மார்பை பிடித்துக்கொண்டே இருக்கிறான். அங்கே வசித்துக் கொண்டிருக்கும் விஷ்ணுவே இவனைப் பிடித்துக் கொண்டு விட்டார். பூமி தேவியே ஓடோடி வந்து குழந்தையைத் தாங்கிக் கொண்டு விட்டாள். ஒரு எலும்பு கூட முறியல. ஒரு காயம் கூட படல.
அடுத்தது, சகல மாயையும் தெரிந்த சம்பரத்தைக் கூப்பிட்டு மாயையை சிருஷ்டி பண்ணச் சொல்லி பிரகலாதனை அழிக்கச் சொன்னான் ஹிரண்யகசிபு. பகவான் சக்கரத்தை விட்டு மாயையை ஒண்ணுமே இல்லாம பண்ணிட்டார். நாகபாசத்தால. குழந்தையைக் கட்டி, பக்கத்துல கல்லும் வெச்சு தூக்கிக் கடலில் வீச சொன்னான். தன் இருதயத்தில் இருக்கும் பகவானை நமஸ்காரம் பண்ணிக்கொண்டே, ‘நமஸ்தே புண்டரீகாக்ஷ, நமஸ்தே புருஷோத்தமா, நமஸ்தே சர்வ யோகாத்மன், நமஸ்தே திக்ம சக்ரிணே’ ன்னு சொல்லிக் கொண்டே, ‘பகவானே என்னை உன் கண்ணால் பார்த்து அனுக்ரஹம் செய்’ன்னு வேண்டிக் கொண்டே இருந்தார் பிரகலாதன். அவரைப் பார்த்து, நாராயணர், ‘என்ன வரம் வேணும் கேள்’ என்கிறார். ‘நான் எத்தனை பிறவிகள் எடுத்தாலும், உன்கிட்ட மட்டுமே தான் எனக்கு பக்தி இருக்கணும். உன் மீது மட்டுமே தான் ஈடுபாடு கொள்ளணும்’னு கேட்டார் பிரகலாதன்.
‘அடுத்து என்ன வரம் வேண்டும்?’னு பகவான் கேட்க,‘உங்களை அடியேன் ஸ்தோத்திரம் பண்ணதால் அப்பாவுக்கு என் மீது துவேஷம் வந்து எனக்கு சகல விதமாக கெடுதல்களும் செய்தார். அதனால் அவருக்கு ஏற்பட்ட தோஷங்களிலிருந்து அவரை விலக்கிடணும்’னு கேட்டார். ‘சரி, அடுத்தது என்ன வரம் வேணும்?’ன்னு பெருமாள் கேட்க, ‘ஜகத்ரக்‌ஷகனான உன்னைப் பக்தி செய்யறதால, மோட்சமே என் கைல இருக்கே. எனக்கு வேற என்ன வேணும்’ன்னு பிரகலாதன் கேட்டது பக்தியின் ஹை லைட்.
கருடன் சர்பத்தை பிடிக்கறா மாதிரி பகவான் ஹிரண்யகசிபுவை பிடிச்சு சம்ஹாரம் பண்ணினார். அவருடைய கோபம் அடங்கல. பிரகலாதனைப் பார்த்ததும்தான் அந்த நரசிம்மமூர்த்தியின் கோபம் தணிய ஆரம்பிச்சுது.
பாகவதத்தில் அருமையாக இது சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி என்றால், ப்ரீதியுடன் பெருமாள் பிரகலாதனைப் பார்த்து, ‘என்ன வரம் வேணும் கேள்’ எனக் கேட்க, பிரகலாதன், “ஸ்வாமி உம்மிடம் வரம் கேட்டால் அவன் பக்தனே இல்ல. அவன் ஒரு வியாபாரிக்கு சமமானவன். எனக்கு எந்த விருப்பமும் கிடையாது. நான் உன் பக்தன். எனக்கு வரம் தருவதாக இருந்தால் ஒரே ஒரு வரம்தான் வேண்டும். அது எந்தவிதமான விருப்பமும் என் இருதயத்தில் உண்டாகவே கூடாது என்கிற வரம்தான் வேண்டும்” என்கிறார்.
பல்லாண்டுகள் வாழ்ந்து புண்ய, பாவம் எல்லாம் நீங்கி மோட்சத்தை அடைந்தார் பிரகலாதன். ஆக, பிரகலாத சரித்திரமே பக்த பிரபாவம்தான். பகவானிடம் என்ன வரம் கேட்பது, எப்படி வரம் கேட்பது என்பதற்கான வழியையும் பிரகலாதனே நமக்குக் காட்டித் தருகிறான்.
இந்த சரித்திரத்தைக் கேட்டாலே சகலவிதமான பாவங்களும் போய்விடும். எல்லா ஆபத்துகளிலிருந்தும் நாம் விடுபடுவோம் என்பதும் நிச்சயம்.”

 

Comments