பராசர க்ஷேத்திரம்

ராசர க்ஷேத்திரம், ஹரிச்சந்திரன் வழிபட்ட சத்யகிரித் திருத்தலம், முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற புண்ணியம்பதி, பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரி, நக்கீரர் வாழ்ந்த ஊர், முருகனுக்குப் பரிகாரம் அருளிய மீனாட்சிசுந்தரபுரம், அறுபடைவீடுகளில் ஒன்று, தேவாரப் பாடல் பெற்ற ஊர், திருப்புகழ்த் தலம்,  இறைவனே மலைபோல் தோற்றம் தருவதால், 'பரங்கிரி’... இத்தனைப் பெருமைகளும் நிறைந்த அற்புதமான திருத்தலம், திருப்பரங்குன்றம்!
மதுரைக்குத் தென்மேற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம்.
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே...
திருப்பரங்குன்றைத் தொழுதவருக்கு நோயே இல்லை என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர். இவர் மட்டுமா?! சுந்தரரும், கச்சியப்பரும், வள்ளல்பெருமானும், அருணகிரிநாதரும் போற்றிப் பரவிய தலம் இது!
மதுரையிலிருந்து திருப்பரங்குன்றத்தை வெகு எளிதாக அடையலாம். கோயில் முகப்பு வரை வாகனங்கள் செல்கின்றன. சிவ ஸ்தலமாக இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு இது முருகனுடைய அறுபடைவீட்டுத் தலமாக மட்டுமே தெரிகிறது.
மைம்மலை துழனியும் வடிவும் பெற்றுடைக்
கைம்மலை பொழிதரு கடாம்கொள் சாரலின் அம்மலை
- என்று போற்றுகிறார் கச்சியப்ப சிவாச்சார்யர். இந்த மலையின் அடிவாரத்தில் நிறைய யானைகள் நிற்கின்றன; அந்த யானைகளைக் கண்டு வானத்து மேகங்களுக்கு மயக்கம்; தம்முடைய இனமோ இந்த யானைகள் என்று மேகங்கள் வியக்கக்கூடிய அளவு நிறமும் ஒலியும் (பிளிறல்) ஒத்திருக்கிற யானைகளின் மதநீர் பாய்ந்து பாய்ந்து செழித்திருக்குமாம் பரங்குன்றம்!
மலையடிவாரத்திலேயே கோயில் முகப்பு கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. உண்மையில், கோயிலின் கோபுர வாசலுக்கும் முன்பாக உள்ள மண்டபத்தையும், அதன் முகப்பையும்தாம் நாம் முதலில் எதிர்கொள்கிறோம். முகமண்டபமான இதற்குச் சுந்தரபாண்டியன் மண்டபம் என்றும் பெயருண்டு. வரிசைகட்டிப் புறப்படும் குதிரை வீரர்களும் ஏராளமான சிற்பங்களுமாகக் காட்சியளிக்கிறது, இந்த மண்டப வாயில்.
வாயில் பகுதியிலேயே, விநாயகர் மற்றும் துர்கை. மண்டபத்துக்கு உள்ளேயே பிரதட்சணமாக வருவதற்கு வகை செய்திருக்கின்றனர். கருப்பண்ணசுவாமியை வழிபடுவதற்கான ஏற்பாடு. ஆடல் வல்லானான ஸ்ரீநடராஜர், அருகே தாளம் கொட்டும் சிவகாமி, பார்த்துப் பரவசம்கொள்ளும் பதஞ்சலி- வியாக்ரபாதர், உக்ரதாண்டவர், கஜ சம்ஹார மூர்த்தி, சுப்பிரமணியர், பார்வதி- பரமசிவன்  மகாலட்சுமி- மகாவிஷ்ணு மற்றும் முருகன், தெய்வானை ஆகியோரின் தெய்வத் திருமணங்கள், குலச்சிறையார், உக்கிர பாண்டியன், ராணி மங்கம்மாள் என ஏராளமான சிற்பங்கள்!
கோயில் கடைகள் கொண்டதாக உள்ள சுந்தரபாண்டியன் மண்டபத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு, உள் வாயிலை நெருங்குகிறோம். இதுவே கோயிலின் ராஜகோபுர வாயில். ஏழு நிலை ராஜகோபுரம். திருப்பரங்குன்றப் புகைப்படங்களில், முகமண்டபத்திலிருந்து எழுந்தது போன்ற தோற்றத்துடன், பின்னால் இருக்கும் மலையுடன் போட்டிபோட்டபடி காட்சி தருவது இந்தக் கோபுரம்தான். இதைக் கடந்து, அடுத்த மண்டபத்துக்குள் நுழைகிறோம். இந்தக் கோயிலின் நுணுக்கமான சிறப்பு... ஒவ்வொரு மண்டபமும் முந்தையதைவிட சற்றே உயரத்தில் அமைந்திருப்பதுதான். மலையடிவாரக் கோயில் என்றே குறிப்பிட்டாலும், உண்மையில் மலையடிவாரத்திலிருந்து தொடங்கி, மலையின் உள்பகுதிவரை கோயில் வியாபித்திருக்கிறது.
இப்போது நாம் நிற்கும் இந்த மண்டபத்தில் இருந்து, ராஜ கோபுரம் அருகேயுள்ள லட்சுமி தீர்த்தத்துக்குச் செல்லும் வழி இருக்கிறது. பக்கத்திலேயே, பிரம்ம தீர்த்தம் (அல்லது பிரம்ம கூபம்). இதை சந்நியாசிக் கிணறு என்கிறார்கள். நோய்களைத் தீர்க்கும் குணமுடைய இந்தத் தீர்த்தத்திலிருந்துதான், முருகப்பெருமானுக்கு அபிஷேக நீர் எடுக்கப்படுகிறது.
மண்டபத்தின் இடதுபுறத்தில் தீர்த்தங்களும், தெப்பக் குளமும் அமைந்திருக்க, வலதுபுறமாக வல்லப கணபதி சந்நிதி. இந்த மண்டபத்திலும் ஏராளமான சிற்பங்கள். அங்கயற்கண்ணி அம்மை, ரதி- மன்மதன், வாராஹி, வியாக்ர பாதர், பதஞ்சலியார், சிவபெருமான், ஆலவாய் அண்ணல் என்று பரம்பொருளின் பற்பல வடிவ வெளிப்பாடுகள் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. இங்கேயும் சில கடை கள்; ஆலயத்தின் பிரசாத அங்காடி. துவார கணபதியை வணங்கி, துவார பாலகர்களிடம் அனுமதி பெற்று, ஒருசில படிகள் ஏறினால், கம்பத்தடி மண்டபத்தை அடைகிறோம். அழகான கொடிமரம்; அதற்கு முன்பாக மயில், நந்தி, மூஷிகம் என்று வாகனங்கள். இந்தத் தலத்தின் சிறப்புகளில், இவ்வாறு மூன்று தெய்வங்களுக்கான மூன்று வாகனங்களும் வரிசையாக அமைந்திருப்பதும் ஒன்றாகும்.
திருப்பரங்குன்றம், அடிப்படையில் ஒரு சிவ க்ஷேத்திரம். முருகப்பெருமானே இங்கு வந்து பரிகாரம் தேடினார்.
திரு ப் பரம் குன்றம் என்பது என்ன பெயர்? இந்த மலையை வானிலிருந்து பார்த் தால், சிவலிங்க வடிவில் தோற்றம் தரும். எனவே, பரம்பொருளே மலையானார் என்னும் பொருளில், இது பரங்குன்றம் ஆனது. இறைவனார், பரங்கிரிநாதர் என்று திருநாமம் பெறுகிறார்.
ஒருமுறை, வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களுக்குள் யார் பலசாலி என்று போட்டி. அப்போது, மேரு மலையைத் தங்களுடைய போட்டிக்களன் ஆக்கினார்கள். வாயுதேவன், தனது பலத்தையெல்லாம் உபயோகித்து மலையைப் பிடுங்கியெறியப் பார்த்தான். ஆதிசேஷன், அதை நகரவிடாமல் பிடித்து அமிழ்த்தி, தான்தான் பலசாலி என்று நிரூபிக்க நினைத்தான். இந்தப் போட்டியில், மேருவின் சில சிகரங்கள் தனியாகப் பிரிந்துவந்து நெடுந் தூரத்தில் விழுந்தன. அப்படிப்பட்ட சிகரங்களில் ஒன்று தான் பரங்குன்றம் ஆயிற்றாம். மேருவோடு இருந்தபோது, இதற்கு 'ஸத்பம்’ என்று பெயராம்.
அரிச்சந்திர மகாராஜா, பொய் சொல்லாமல் சத்தியம் காக்கப் படாதபாடுபட்டார். விஸ்வாமித்திரர் அவரைப் பொய் சொல்லும்படி தூண்டினார்; பல்வேறு சங்கடங்களுக்கும் உள்ளாக்கினார். நாடு இழந்து, மனைவி- மக்களை இழந்து வாடியபோதும், சத்தியத்தை மீறமாட்டேன் என்கிற உறுதியோடு இருந்த அரிச்சந்திரன், இந்தப் பகுதிக்கும் வந்தார். இங்கே பகவானே சத்யமாகவும் மலையாகவும் உறைவதை உணர்ந்து வழிபட்டார். சத்யமாக, உண்மையாக
இறைவன் உறையும் தலம் என்பதால், இந்தத் தலத்துக்கு 'சத்யகிரி’ என்றும், கடவுளுக்கு 'சத்யகிரீஸ்வரர்’ என்றும் பெயர்கள். சத்யத்தின் வழியில் தன்னை ஆற்றுப்படுத்திய ஆண்டவனுக்கு நன்றிக்கடனாக, கோயில் கட்டிப் பிராகாரங்களும் எழுப்பினார் அரிச்சந்திரன் என்கிறது சத்யகிரி மஹாத்மியம்.
ஒருமுறை, திருக்கயிலாயத்தில் பார்வதியாளுக்குப் பிரணவப் பொருளை உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவனார். அப்போது, தாயின் மடியில் சின்னப் பிள்ளை யாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார் முருகன். அன்னை, உபதேசத்தை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருக்க, குழந்தையும் அப்பா சொன்னதைக் கேட்டுத் தலையாட்டியதாம். என்னதான் சிவகுமாரன் என்றாலும், குரு வழியாகக் கேட்கவேண்டியதை, நேரடியாகக் கேட்பது என்பது குறுக்கு வழியைப் போன்றது. எதையும் முறைப்படி செய்யவேண்டும் என்பதே சிவனாரின் ஆணையல்லவா! அதனால், முருகப் பெருமானும் பரிகாரம் தேடினார். பூலோகத்தில் தவம் செய்வதற்கு தக்க இடம் தேடிய முருகன், பரங்குன்றமே பாங்கான இடம் என்று அறிந்து, இங்கு வந்து தவமியற்றினார். அப்போது அவருக்கு அம்மையும் அப்பனும் காட்சி தந்தனர். அவர் களே ஸ்ரீஆவுடைநாயகி- ஸ்ரீபரங்கிரிநாதர் என்றும் வழங்கப்பட்டனர்.
இப்போது, மலைச்சாரலில் ஸ்ரீதடாதகைப் பிராட்டியார் (மீனாட்சியம்மையின் பால திருநாமம்)- ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் இடமே, ஆதியில் முருகனுக்கு அம்மையும் அப்பனும் காட்சிகொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. கம்பத்தடி மண்டபத்திலிருந்து வலதுபுறமாகச் சென்றால், இந்த ஆலயத்தை அடையலாம். மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கியபின்னரே, முருகனைத் தரிசிக்கச் செல்லவேண்டும் என்பது மரபு. வெகு அமைதியாக இருக்கிறது ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய மண்ட பம்; சிலர், அமைதியாக அமர்ந்து தியானித்துக் கொண்டிருக்கின்றனர். அருகில் மடப்பள்ளி.
கம்பத்தடி மண்டபத்தின் தென்கிழக்குப் பகுதியில், 100 அடி நீள சுரங்கப் பாதையன்றும் காணப்படுகிறது. திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரை மீனாட்சியம்மை ஆலயத்துக்கும் ஆதிசொக்கேசர் ஆலயத்துக்கும் சுரங்கப் பாதைகள் இருந்ததாகவும், திருமலை நாயக்கர் வருவதற்காக இவை பயன்பட்டன என்றும் செவிவழிச் செய்திகள் நிலவுகின்றன. கம்பத்தடி மண்டபத்தில் இருந்து படிகளில் ஏறி அடுத்த நிலைக்குச் சென்றால், மகா மண்டபம்.
ஒரு பக்கத்தில் தட்சிணாமூர்த்தி; இன்னொரு பக்கத்தில் ஸ்ரீநடராஜ சபை. திருப்பரங்குன்ற முருகர் மூலஸ்தானம், வடக்கு நோக்கியது; எனவே, மகாமண்டப தட்சிணா மூர்த்தியும் நடராஜரும் மூலஸ்தானத்தைப் பார்த்த படி உள்ளனர். மகா மண்டபத்தின் வடமேற்குப் பகுதியில் உற்ஸவர் கோயில். சற்றே தள்ளி, ஸ்ரீஆவுடை நாயகியின் திருச்சந்நிதி. தேவஸ்தான ஒழுங்குமுறைக்காகவும் பக்தர்களின் வசதிக்காகவும், இரண்டு வழிகளில் சேவார்த்திகளின் வரிசைகளை அனுப்புகின்றனர். கம்பத்தடி மண்டபத்துக்கு வருவதற்கு முன்னதாகப் பார்த்தோமே ஒரு மண்டபம், அங்கிருந்து சர்வ தரிசன வழி புறப்படுகிறது. இது பிரதட்சிணமாகச் சென்று, முருகப்பெருமான் சந்நிதிக்கு அருகில் வருகிறது. சிறப்பு தரிசன வழியானது, மகா மண்டபத்துக்குள் நுழைந்து, சற்றே அப்பிரதட்சிண மாக, சத்யகிரீஸ்வரர் சந்நிதியை அடைந்து, பின்னர் முருகன் சந்நிதிக்குச் செல்கிறது.
மகாமண்டபத்தில், உக்ரதாண்டவரும் அண்டா பரணரும் (இவர்கள் இருவரும் ஆறுமுகக் கடவுளின் சேனைத் தலைவர்கள்) அனுக்ஞை விநாயகரும் காட்சி தருகின்றனர்.
இங்கிருந்து அர்த்த மண்டபத்துள் நுழையலாம். அடுத்தடுத்து நிறைய சந்நிதிகள் இருப்பதால், அர்த்த மண்டபம் என்பது அகலமாக அமைந்திருக்கிறது. பெரும்பாலான சந்நிதிகள் வடக்குப் பார்த்து உள்ளன. வலமிருந்து இடமாக, முதலில் கற்பக விநாயகர்; அடுத்து விஷ்ணு துர்கை; அதற்கும் அடுத்து தெய்வானை உடனாய முருகன். கற்பக விநாயகர் சந்நிதிக்கு அருகில், கிழக்கு நோக்கிய சந்நிதியில் சத்யகிரீஸ்வரர்; இவருக்கு நேர் எதிரே, முருகன் சந்நிதிக்கு அருகில், மேற்குப் பார்த்தபடி பெருமாள் சந்நிதி. அவருடைய திருநாமம் ஸ்ரீபவளக் கனிவாய்ப் பெருமாள்;

Comments