தொண்டர் தம் பெருமை

நாரதர் ஒரு சமயம் வைகுண்டம் கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது பக்தன் ஒருவன் நாரதரை வழி மறித்து, எனக்குத் திருமணமாகி பல ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், குழந்தை இல்லை. இறைவனை நேரில் பார்த்துப் பேசும் பாக்கியம் பெற்ற தாங்கள், எனக்கு புத்திர பாக்கியத்தை அருள வேண்டும்" என்று வேண்டினான்.
நாரதர், என் செயல் எதுவும் இல்லை,எல்லாம் நாராயணன் செயல். வைகுண்டம் சென்றதும் நிச்சயம் உனது குறையை பெருமாளிடம் கூறுகிறேன்" என்று உறுதி அளித்தார்.
வைகுண்டத்தில் பெருமாளை சேவித்த நாரதர் அந்த பக்தனின் மனக்குறையைக் கூறினார். அதற்கு பகவான், இந்தப் பிறவியில் அவனுக்கு மகப்பேறு இல்லை" என்றார். திரும்பி வந்த நாரதரும் பக்தனிடம் அதைச் சொல்லிச் சென்று விட்டார்.
ஆண்டுகள் பல சென்றுவிட்டன. ஒரு நாள் நாரதர் அந்த பக்தனின் வீட்டின் வழியே செல்ல நேரிட்டது. அப்போது அந்த வீட்டு வாசலில் ஐந்தாறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். விசாரித்ததில் அவை அந்த பக்தனின் குழந்தைகள் என்று தெரிய வந்தது. பகவான் சொன்னது நினைவுக்கு வர, உடனே வைகுண்டம் நோக்கிச் சென்றார்.
அந்த பக்தனுக்கு இந்தப் பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை என்றீர்களே! எப்படி அவனுக்கு குழந்தைகள் பிறந்தன?" என்று கேட்டார்.
அதற்கு பரந்தாமன், அதை அந்த பக்தனிடமே கேட்டுத் தெரிந்துகொள்" என்று கூறினார்.
பூலோகம் திரும்பிய நாரதர் பக்தனிடம் கேட்க, நாரதரே! ஒரு சமயம் என் வீட்டுக்கு எழுந்தருளிய திருமால் அடியார்களை நான் நன்கு உபசரித்தேன். அவர்களிடம் என் மனக் குறையைக் கூறினேன். அவர்கள் புறப்பட்டுச் செல்லும்போது எனக்கு விரைவில் குழந்தைப் பேறு கிடைக்க ஆசீர்வதித்துச் சென்றனர்" என்றான்.
‘இறைவனைக் காட்டிலும் இறையடியார்கள் அத்துணை உயர்வானவர்களா?’ என்ற எண்ணத்துடன் மீண்டும் வைகுண்டம் சென்றார் நாரதர்.
நாரதரின் உள்ளக் குறிப்பை அறிந்து, நாரதரே! நான் விதிகளை மீறி எதுவும் செய்ய இயலாது. ஆனால், என் அடியார்கள் பேராற்றல் கொண்டவர்கள். அடியவர்கள் அருள்பாலிப்பதை, என்னால் தடுக்க இயலாது" என்று கூற, அடியவரின் பெருமையை உணர்ந்தார் நாரதர்.
ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணோ: ஆராதனம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதனம் பரம்.
எல்லா ஆராதனங்களிலும் விஷ்ணுவின் ஆராதனம் சிறந்தது. அதைக் காட்டிலும் விஷ்ணு பக்தர்களுக்கு அன்னமளித்து ஆராதிப்பது மிகவும் மேம்பட்டதாகும்.
- உபன்யாசத்தில் கேட்டது

Comments