அவதார ஒற்றுமை

ராமாவதாரத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் ரசிக்கத்தக்க வேற்றுமைகள் உண்டு. ராமன் நவமியில் பகல் வேளையில் அரண்மனையில் அவதாரம் செய்தான். கிருஷ்ணன் அஷ்டமியில் அர்த்த ராத்திரியில் சிறையில் அவதாரம் செய்தான். எண்களில் ஒன்பதை எப்படிப் பெருக்கினாலும் அதுதன் நிலையில் மாறாது. அதைப் போன்றவன் ராமன்.
எட்டு என்ற எண், தன் நிலையில் பெருக்கும்போது குறுகிக் கொண்டே வந்து இறுதியில் மாயமாகி விடுகிறது. அதைப்போல தன்னை ஒளித்தும், நிதானம் காட்டி பின்னர் மாயையை விரட்டி தர்மத்தை நிலை நாட்டினான் கிருஷ்ணன். ஆகவேதான், ‘பகவத் கீதை’ என்ற உபதேசத்தை யுத்த பூமியில் விஜயனை முன்னிட்டு நமக்கெல்லாம் உபதேசம் செய்தான்.
ஒருவருக்கு நால்வராய் வாய்த்தது ராமாவதாரம். நால்வருக்கு ஒருவராய் நின்றது கிருஷ்ணாவதாரம். அதாவது, பிள்ளை இல்லையே என்று வருந்திய தசரதனுக்கு ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னன் என்று நால்வராக வாய்த்தது ராமாவதாரம். வசுதேவர், தேவகி, நந்தகோபர், யசோதை என்கிற நால்வருக்கும் - கண்ணன் என்ற ஒருவனே, மகவாய் வாய்த்தது கிருஷ்ணாவதாரம்.
ராமாவதாரத்தில் சீதைக்குப் புகழ் அதிகம். சிறையிலிருந்து புகழ் பெற்றாள் சீதை. அதைத் தோற்கடிக்கும் விதமாக பிறக்கும்போதே சிறையில் பிறந்து சாதனை செய்தது கிருஷ்ண சாமர்த்தியம்.
தூதுபோய் அனுமன் புகழ் பெற்ற சரிதம் ராமாயணம். அந்த தூதுப் புகழும் தனக்கே என்பதைக் காட்டியது கிருஷ்ணாவதாரம்.
எல்லாவற்றையும் விட மிக முக்கியம், இராமன், மனிதன் தெய்வமாகலாம் என்பதன் விளக்கம். கிருஷ்ணன், தெய்வமே மனிதனாக வரலாம் என்பதன் சுருக்கம். அதனால்தான் ராமனுக்கு விஸ்வரூபம் என்று எதுவும் இல்லை. கண்ணனுக்கு விஸ்வரூபம் என்பது சர்வ சாதாரணம்.
சூட்சுமமாகப் பார்த்தோமானால் கிருஷ்ணன் என்பது ஒரு சுவையான அனந்த நிலை, உத்சவ உற்சாகம், மன மோகன ஸ்வரூபம்.
கிருஷ்ணனுக்குப் பூப்போட்டு வணங்குவது மட்டும் பக்தியில்லை. தன்னையே ஒரு பூவைப் போல லேசாக்கிக் கொள்ளுதலே கிருஷ்ண அனுபவம். அவன் குணங்களில் ஈடுபடுவதே ஒரு பேரானந்தம். அவனுடைய பிள்ளை விளையாட்டில் நெஞ்சைப் பறிகொடுத்தவர் பெரியாழ்வார்.
அவர் மகள் ஆண்டாளோ, அவனுடைய வாலிபக் குறும்புகளில் ஆட்பட்டாள். அவனை நினைத்து அவள் மனம்விட்ட வெப்பப் பெருமூச்சே ‘நாச்சியார் திருமொழி’ என்று பாசுரங்களாக, பாமாலைகளாக மாறியது. நீலக் கடல் சூரிய வெப்பத்தில் ஆவியாகி மலையில் மோதி மழையாவதைப் போல, நீலக் கண்ணனாகிய கடலைத் தன் மோக வெப்பத்தில் ஆவியாக்கி மனமலைகளில் மோத விட்டுக் கவிதை மழை பொழிந்தவள் ஆண்டாள் நாச்சியார்.
ஆழ்வார்களில் பலர் கண்ணனின் புல்லாங்குழலில் காற்றாக நுழைந்து அவனை அனுபவித்தனர். ஆண்டாளோ அந்தக் குழல் மீது குவியும் கண்ணனின் கொவ்வை இதழின் அமுத வெள்ளத்தில் கரைந்து கண்ணனை அனுபவித்தாள்.
ஆயர்பாடி மக்கள் கண்ணன் பிறப்பைக் கொண்டாடுவதை, தம் வார்த்தைகளால் கொண்டாடினார் பெரியாழ்வார்.
குழந்தையைக் குளிப்பாட்டும் அழகைச் சொல்கிறார். யசோதையின் முழங்கால் மீது கொழுகொழு கிருஷ்ணன். தொந்தியும் தொப்பையும் குழந்தைகளின் சொத்து.
கொழு கொழு கண்ணனை மாவு பிசைகிற மாதிரி எண்ணெய் தேய்த்துப் பிசைகிறாள் யசோதை. இப்படிச் செய்தால்தான் குழந்தை கொஞ்ச நேரம் தூங்கும். தூங்கினால்தான் நன்கு வளர முடியும். அதனால்தான் தூக்கத்தைக் ‘கண்வளரா’ என்று பாடினார்களோ!
குட்டிக் கண்ணனைத் தொட்டிலில் போடுவதே ஒரு அழகு. தொட்டிலில் பாட்டு கேட்டுக் கொண்டே தூங்குவது குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கிய அனுபவம். ‘தால்’ என்றால் தொங்குவது என்று பொருள். நமது வாயில் தொங்குகிற நாவை அசைப்பது தால் + ஆட்டு = தாலாட்டு. வீட்டு உத்தரத்தில் தொங்குகிற தொட்டிலை அசைப்பதும் தாலாட்டு.
அதுசரி, பெரியாழ்வார் போட்ட தொட்டில் எப்படி இருக்கிறது? தங்கத் தொட்டில்; இடையிடையே கண்ணைப் பறிக்கும் வைரம். மாணிக்கமும் ஒளி வீசுகிறது. செய்த ஆசாரி யார்? உலக ஆசாரி பிரம்மா. அவர் தயாரித்த பிரத்யேகமான தொட்டில் அது. பெரியாழ்வார் எப்படிப் பாடுகிறார்? பார்ப்போமே...
‘மாணிக்கம் கட்டி வைரம்
இடைகட்டி
ஆணிப்பொன்னால் செய்த
வண்ணச்சிறு தொட்டில்’

யார் செய்த தொட்டில்? ‘பேணி உனக்குப் பிரம்மன் விடுதந்தான்’ என்று பாடுகிறார் பெரியாழ்வார்.
குழந்தைக்குத் தொட்டில் போட்டது சரிதான் என்றுதானே தோன்றுகிறது. அடுத்தும் சொல்கிறார்.
‘இவன் சாதாரண குழந்தை இல்லை என்று பிரம்மனுக்கு எப்படித் தெரியாமல் போனது. தெரிந்தேதான் இந்தத் தொட்டிலை அமைத்தானா?
இவன் என்ன சாதாரணக் குழந்தையா? ஒன்றும் அறியாத பால கனைப்போல் வந்து மூன்றடி நிலத்தை அன்று மகாபலியிடம் யாசித்தான் இல்லையா? குழந்தைதானே என்று கொடுத்து முடிப்பதற்குள் விஸ்வரூபத்தால் வியாபித்து வையம் அளந்தவன் இல்லையா?
பிரம்மன் இதை மறந்து விட்டானா? அல்லது பாலகனா துலங்கும் இந்த மாயன் மறைக்கிறானா?’ என்கிற வியப்பெல்லாம் தொக்கி நிற்கின்றன.
அது மட்டுமல்ல, ‘எதாய் இருந்தால் என்ன, இந்தக் குழந்தை இப்போது அமைதியாகத் தூங்கட்டும்’ என்று தாலாட்டு தொடர்கிறது.
‘மாணிக்குறளனே தாலேலோ, வையம் அளந்தான் தாலேலோ’
தொங்குகிற நாக்கை உதட்டில் படிய விட்டு ‘லூ லூ லூ, லோ,லோ லோ’ என்று ஒலி எழுப்புவதால் தாலாட்டு என்று பெயர்.
ஆழ்வாரின் கற்பனையில்தான் என்ன சுகமான விசாலம். ‘தங்கத் தொட்டில்; மாணிக்க வேலை; பிரம்ம ஆசாரி..." அடடா... ஆழ்வார் கற்பனையில் நம்மை இழந்து விடுகிறோம்.

Comments