கந்தசாமி

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில் அமைந்துள்ளது கந்தசாமி கோயில். சிவபூத வேதாள கணங்களால் இத்தல முருகப்பெருமான் வழிபடப்படுகிறார். சிவ பெருமானின் சேய் ஆனதால் ‘சேயூர்’ என்றாகி, நாளடைவில் மருவி செய்யூர் ஆயிற்று என்கிறார்கள்.
சிக்கலில் அம்பாளிடம் வேல் வாங்கி, செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார் கந்தக் கடவுள். அதனால் ஏற்பட்ட தோஷம் தீர, பல தலங்களுக்கும் சென்று லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்படி வழிபட்ட தலங்களில் ஒன்றுதான் செய்யூர் தலம்.
இங்கு முருகப்பெருமான், தினமும் அர்த்த ஜாமத்தில் சோமநாதரையும், மீனாட்சி அம்மனையும் வழிபடுகிறார். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் பலர் இக்கோயிலை நாடி வந்து நலம் பெறுகின்றனர்.
வெளிப்பிராகாரத்தில் உள்ள விநாயகரை வணங்கி ஆலயத்துக்குள் நுழைந்தால் மேற்கு நோக்கி சூரிய பகவான் அருள்பாலிக்கிறார். அவருக்கு நேர் எதிரில் முருகப்பெருமான் தினமும் பூஜிக்கும் சோமநாதர் கிழக்கு நோக்கியும், மீனாட்சி அம்மன் தெற்கு நோக்கியும் அருள்புரிகிறார்கள்.
சோமநாதர் சன்னிதியின் வடபுறம் உள்ள வாசல் வழியே சென்றால் ஆலய பிரதான மண்டபத்தையடுத்து உள்ளது கருவறை. மூலஸ்தானத்தில் கந்தசுவாமியாக வள்ளி- தெய்வானையுடன், ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் வேலும் மயிலும் கொண்டு அபய ஹஸ்தம் காட்டி அருள்பாலிக்கிறார்.
கருவறை வாசலில் துவாரபாலகர்களாக சுவீரனும், சுஜனனும் உள்ளனர். கருவறை வெளிச்சுற்று கோஷ்டங்களில் முருகப்பெருமானே பஞ்சகோஷ்ட மூர்த்தியாக அருள் புரிகிறார். (நிருத்திய கந்தர், பாலகந்தர், பிரம்ம சாஸ்தா, சிவகுருநாதர், வேடுவர் (புளிந்தர்) இவர்களே பஞ்ச கோஷ்ட மூர்த்திகளாவர்.)
கருவறை வலம் வரும்போது பிரதான மண்டபத்தின் வாயிலில் பைரவரும், சூரியனும் உள்ளனர். பைரவர் மூலவர் கந்தசுவாமியை நோக்கியவாறு இருப்பது சிறப்பு. பைரவரின் நேர் எதிரில் கஜலட்சுமி உள்ளாள். மூலவர் கந்தசுவாமியின் எதிரே கல்லால் ஆன வேல் உள்ளது. வெளிப்பிராகாரத்தில் மூலவருக்கு எதிரில் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. கொடிமரத்துக்கு வடக்கில் மயில் மண்டபத்தில் அம்மன் சன்னிதி உள்ளது. இங்கு தனித்தனி சன்னிதிகளில் வள்ளியும், தெய்வானையும் தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். கொடிமரத்தின் பின்னால், மூலவருக்கு எதிரில் நவக்கிரகங்கள் உள்ளன. ஆலய வாசலில் ஐயப்பன் சன்னிதி இருக்கிறது. இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைபூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகியவை விசேஷ நாட்கள்.
செல்லும் வழி:
சென்னை - திண்டிவனம் சாலையில் மேல்மருவத்தூரிலிருந்து 19 கி.மீ. கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கம் தாண்டி எல்லையம்மன் கோயில் பஸ் நிறுத்தத்தில் இருந்து 4 கி.மீ.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 11 வரை. மாலை 6.30 முதல் 8.30 வரை.
தொடர்புக்கு : 94447 29512.

Comments