தூது சென்ற திருநீறு

என்னடி? காலெல்லாம் கடுக்கிறதே! எவ்வளவு நேரம்தான் நின்று கொண்டே இருப்பது?"
அடி, சுந்தரி! வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போகிறாய்? வானொலியிலும் பத்திரிக்கைகளிலும் கழியப் போகிற பொழுது வீண் பொழுதடி!" - இது தோழி சுந்தரியின் பதில்!
தொலைவில் பெருங்கூட்டம் வருவதற்கான ஆரவாரம் கேட்கிறது!
‘ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!’ என்ற சங்கர கோஷம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது. அந்த இடமே பரபரப்பாகிறது. சட்டென்று அமைதி தழுவுகிறது.
அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே வருகிறது. அதன் அம்பாரியில் ஆதிசங்கரரின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், ஒட்டகம், தொடர்ந்து மாட்டு வண்டிகள் வந்தன. அதனைத் தொடர்ந்து காவியுடை அணிந்த சீடர்கள் பின்தொடர, மிக மெதுவாக ஒரு கூட்டம் சூழ, மேனா(பல்லக்கு) ஒன்று வருகிறது. இதுவரை இருந்த பரபரப்பெல்லாம் அடங்கி உள்ளுக்குள் ஒரு அமைதி பரவுகிறது சுந்தரிக்கு!
அவளது கைகள் தன்னிச்சையாகக் குவிகின்றன! அங்குள்ள பெண்கள் கூட்டத்தோடு சேர்ந்து அவளும் சங்கர கோஷத்தை எழுப்புகிறாள்!
பல்லக்கின் திரை விலக்கப்படுகிறது. உள்ளிருந்து அருள் கனிந்த முகமலர் காட்சி தருகிறது. தெய்வமே மனித உரு எடுத்த திருவுருவம்! கைகூப்பிக் கும்பிடுபவர்களுக்கு அமைதி தரும் முறையில் ஆசி கூறும் தளிர்க்கரங்கள்! பிரம்மன் படைத்த உலகத்தார்க்குக் காவலாகக் கனிவுப் பார்வை தரும் அருட்கண்கள்!
காண்பார்தம் மனக் கிலேசங்களை மாற்றுகின்ற மலர்ப்பாதங்கள்! நீறு தரித்த நெற்றியும், திருமேனியும் வெயில் தணிந்த மஞ்சள் வானமாய்க் காட்சி தர, சங்கர கோஷத்துடன், அந்த உலா அக்கூட்டத்தைக் கடக்கிறது.
அங்கே கடந்து சென்றது அடியார் கூட்டம் மட்டுமல்ல; சுந்தரியின் சுகந்த மனசும் தவமுடையான் தடந்தேடி பயணித்து விட்டது.
சுந்தரி... சுந்தரி..." என்ற தோழியின் உலுக்கலில் அலமலந்து விழிக்கிறாள்! திருக்கூட்ட அடியார்கள் கொஞ்சங்கொஞ்சமாய் மறைகிறார்கள். அவளது மனமேடையில் ஐயனது திருக்கோலம் விசுவரூப தரிசனமாகிறது! தண்மையான குளிர் காற்றால், தணலும் குளிர்வது போல, அந்த அருட்பார்வையால் அவளது கலி நீங்கியதே! அவளது நெஞ்சத்து வெப்பம் சிதைந்து, அந்தப் பிரான் பற்றியே நினைவு சுழல்கிறது!
ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரசுவதி ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளின் (காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஆசாரியரான) மதுரை விஜயத்தின்போது நிகழ்ந்த நிகழ்வே மேலே நாம் கண்ட காட்சி!
மேலூரிலிருந்து மதுரை வரும் பாதையில் சுவாமிகள் மேனா பல்லக்கிலிருந்தபடி அருள்புரிந்த காட்சி அது! அதனைக் கண்ட ஆயிரக்கணக்கான மக்களோடு மக்களாக நின்று அந்த நடமாடும் தெய்வத்தைத் தரிசித்த அந்த சுந்தரி யார்? அவர்தான் பொற்கிழிக்கவிஞர், சொல்லோவியர் சொ.சொ.மீ. சுந்தரம்.
பக்திச் சவை நனி சொட்டச் சொட்டத் தமிழ்வழி ஆன்மிகம் வளர்க்கும் அந்தக் கல்லூரிப் பேராசிரியர், தாம் குருவை தரிசித்த அந்த அருட்காட்சியை தூது விடுத்துச் சுகம்காண மேதினியில் ஏதும் துணையின்றி ஏங்குகிறேன் என்று விவரித்து, அந்தப் பெருமானின் கருணை பெறத் தூது விட ஏங்குகிறார்.
கங்கை ஆற்றினைத் தலைமேல் தரித்த சங்கரன் என்ற நாமம் பெற்றதோடு, அந்தச் சங்கரனாக - சிவமாக வாழ்கின்ற சித்த மூர்த்தியிடம் தன் நெஞ்சம் சென்றதை விவரித்துப் பேசும் ஆசிரியர், அவரிடம் தூதனுப்ப யோசிக்கிறார்? யாரைத் தூதுவிட?
கிளியைத் தூதுவிட்டால், பூஜை, ஆரவாரம் என எப்போதும் நடைபெறும் காஞ்சி மடத்துக்குள் செல்லத் தயங்கும். நெஞ்சத்தைத் தூது விட்டால், புலன் ஐந்தும் வென்ற அவர் முன்பு நெஞ்சம் தன்னையிழக்கும்(இறந்துவிடும்). தாமரையைத் தூதுவிட்டால் சூரியனைப் போன்று ஒளிவிடுகின்ற சங்கரனாரைக் கண்டு மருவி நிற்கும்.
அன்னத்தைத் தூதாய் அனுப்பலாம் என்றால், அது ஏற்கெனவே அந்தப் பொன்னையன் சன்னிதியில் பொய் உரைத்துள்ளது. தன்னைத் தரிசிக்கும் பக்தர்களுக்குப் பெரு முகிலாய் அருள் மழை பொழியும் பெரியவர் சன்னிதியில் மேகத்தைத் தூது விட்டால் அது வெட்கி நிற்கும். தென்றலோ மன்றமெல்லாம் வீசிச் செல்லும். ஆனால், காமத்தை வென்ற காஞ்சிப் பெரியவரின் நாமம் கேட்டாலே நலிந்துவிடும். செந்தமிழைத் தூது விட்டால் காஞ்சிப் பெருமானின் காலடியில் நின்றுவிடும். எழில் மானைத் தூதுவிட்டால் - எம்மான் திருமுன், அம்மான் அரற்றி மயங்கி விடும். திருவாரூர் சுந்தரர் போல், சொக்கலிங்கரைத் தூதுவிடலாம் என்றால், சிவனுக்குத் தூது சிவனேயா?
இப்படித் தூதுவிடப் பொருள் தேடி துணையின்றி தவித்ததால், திருநீறை தூதுவிட மனம் கொண்டேன்" என்று, திருநீறை தூதுப் பொருளாக தீர்மானிக்கிறார் ஆசிரியர். சரி; அப்படியென்ன பெருமை திருநீறுக்கு?
செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வமாய் - விபூதி என்னும் நாயகமாய், என்றைக்கும் காக்கும் இரட்சையாய், சூலையினை மாற்றும் சுடர் மருந்தாய், வெள்ளை நிறம் பெற்ற வேதியனாய், சிவச்சின்னமாய் விளங்கும் தெய்வப் பொருளே! திருநீறே! என் நெஞ்சும், என் வளையும், என்னுயிரும் தான் கொண்ட பொன்னார்ந்த மேனி பிரானிடத்தில், நெஞ்சத்தார் கூற்றும் நிறை சாமிநாதனிடத்து (பெரியவரின் பிள்ளைத் திருநாமம்) திகழ் காஞ்சியில் அருள் புரியும் நீறு அணிந்த வள்ளல் இடத்து நீ தூது செல்ல வேண்டும்" எதை வேண்டி தூது செல்ல வேண்டும்? அதையும் தொடர்ந்து விவரிக்கிறார்:
அவரிடம் பணச் செல்வம் வேண்டவில்லை. பதச் செல்வம் வேண்டுகிறேன். கண்ணார அவரைக் காண வேண்டுகிறேன். நெஞ்சக் கனவு வழி தஞ்சம் அடைய வேண்டுகிறேன். சீருலகம் பேசுகின்ற சிற்றின்பத்துக்காக உன்னைத் தூது விடவில்லை. பேரின்பமே நாடிப் பிதற்றுகின்றேன். குருவாய் நிற்கின்ற அந்தத் தலைவன் செஞ்சரணம் காட்டி என்னை ஆண்டதும், அருட்சோதி கரம் நீட்டி உரையாடல் நிகழ்த்தியதும், அவரது மாட்சியுறும் நெற்றியிலே வாழ்ந்திருந்த சாட்சியாகிய உனக்கே நன்றாகத் தெரியும். உன் தூதால் மட்டுமே எனக்கு மீட்சி கிடைக்கும்!"என்று, திருநீற்றுக்கு அதனுடைய சிறப்பை போதிக்கிறார். சரி; காஞ்சிக்கு எப்படிப்போவது? அதற்கு வழியும் கூறுகிறார்:
அங்கையற்கண் அம்மையுடன் ஆலவாய் அப்பன் உறையும் செங்கமலக் கூடல் (மதுரை) நகரிலிருந்து புறப்பட்டு, குன்றுடைய சீராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி) செல். இஞ்சிசூழ் தஞ்சைப் பெருவுடையாரைத் தொழுது, பஞ்சநதத்து அம்மையப்பன் (திருவையாறு) பாதம் சிந்தி" என்று தொடர்கிறார்:
மதுரையிலிருந்து கிளம்பி, திருச்சி, தஞ்சை, திருவையாறு, திருவலஞ்சுழி, சுவாமிமலை, கும்பகோணம், மாயவரம், சிதம்பரம், கடலூர் வழியாக காஞ்சிபுரத்துக்கு வழியமைத்துத் தருகிறார். சரி; காஞ்சிபுரம் வந்தாயிற்று. அடுத்து என்ன செய்ய வேண்டும்?
‘என் வணக்கத்தை அவர் கழலிணையில் பணித்திடுவாய். உன்னை விரும்பி நெற்றியிலே எடுத்து அணியும் போது, இந்தப் பெண் வேறொன்றும் வேண்டாள். உங்கள் கையால் வெண்ணீறு ஒன்றே வேண்டுகிறாள்’ என்கிற தன் நெஞ்சத்தைக் கூற வேண்டும். அவரது திருக்கரத்தால், திருநீறே உன்னை விரைந்து அளிக்க வேண்டுகிற எனது கண்ணீர்க் கதையுரைப்பாய்’ என்று சொல்லி அதன் பெருமையையும் கூறுகிறார்.
சூலை நோய்க்கு ஆட்பட்ட நாவுக்கரசரை மீட்டது நீறு; பாண்டிய மன்னனின் வெப்பு நோய் நீக்கியதும் அதுதான். எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதமும் அது செய்ததுதான். அது மட்டுமா?
நெருப்பிட்டால் எல்லாப் பொருளும் மாறி நிற்கும். நீறு மட்டும்தான் வெண்மை நிறம் மாறாமல் மின்னும். இறைநிலை என்றைக்கும் மாறாது என உண்மைப் பொருளாய் உணர்த்தும். இப்படிச் சொல்லி தன் கருத்தையும் இறுதியில் வலியுறுத்துகிறார்.
தென்மதுரை நற்பசுவைச் சீர்காஞ்சி மாபதிபால்
இன்பமுற மீண்டும் இணைத்திடுவாய் அதன் அடையாளமாக,
கள்ளமிலா வெண்ணீறே! காஞ்சியிலே தூதுரைத்து
வள்ளலிடம் மாலை பெற்று வா!

என்று முடிக்கிறார்.
குருவின் மூலமாக இறைவனை அடைகிற குறியீட்டு இலக்கிய வகையாக அமைவது, தூது. ‘சந்திரசேகரர் திருநீறு விடு தூது’ என்கிற இந்த நூலில், சொல்லோவியர் சொ.சொ. மீ.சுந்தரம், குருவான காஞ்சிப் பெரியவரை இறைவனாக, பதியாகக் கண்டு பசுவாகிய தன்னை உய்விக்க வேண்டுகிறார். நடமாடும் தெய்வமாய் நம்மோடு வாழ்ந்த பெரியவரின் பாதம் பணிந்து நாமும் உய்வோமாக!

Comments