பரமேஸ்வரமங்கலம் கைலாசநாதர்

வங்கக் கடலுக்கு இணையாக இருக்கும் கிழக்குக் கடற்கரை சாலையில் புதுச்சேரியை நோக்கிச் செல்லும்போது வருவது வாயலூர். கல்பாக்கத்தை அடுத்த இந்த ஊரில், பாலாற்றின் மேல் இருக்கும் நீண்ட பாலத்தைக் கடக்கும்போது, இடது பக்கம் ஆற்றின் நடுவில் சிறு குன்றின் மேல் புதுப் பூச்சு கோபுரத்துடன் அந்திச் சூரியன் பின்னணியில் கைலாசநாதர் கோயிலைப் பார்க்கும்போது ரம்மியமான இறை நேசத்துடன் மனது படபடக்கிறது.
ஒரு காலத்தில் கடலின் முகத்துவாரம் வாயலூரில் இருந்ததாகச் சொல்கிறார்கள். வாயில் ஊர் வாயலூராக மருவியிருக்கிறது. பாலத்தைக் கடந்தவுடன் காத்தான் கடை என்ற இடத்தில் இடதுபுறம் திரும்பி ஒன்றரை கி.மீ. போனால் வருகிறது பரமேஸ்வரமங்கலம். கைலாசநாதர் உடனுறை கனகாம்பிகை அம்பாள் கோயில் கொண்டுள்ள இந்த ஊரை நத்தம் - பரமேஸ் வரமங்கலம் என்றால்தான் தெரியும்.
1200 வருடங்களுக்கு முன்னர் பல்லவ மன்னன் நிர்யதுங்கவர்மன் கட்டிய கோயில் இது. பாலாற்றில் முன்பெல்லாம் வரும் வெள்ளப்பெருக்கினை தாங்கிக் கொண்டு, காலம் காலமாக பக்தர்களைக் காத்தருளி வருகின்றார் கைலாசநாதர். சில வருடங்களுக்கு முன் கோயில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கரையையும், கோயிலையும் இணைக்கும் சிறு பாலம் கட்டப்பட்டது. பாலம் இல்லாத நிலையில் வருடத்தில் இரண்டு மூன்று மாதங்கள், இடுப்பளவு தண்ணீரில் சென்று அன்றாட பூஜைகளை நடத்தி வருவாராம் குருக்கள்.
புதிய பாலத்தில் கோயிலை நெருங்கும்போது இடது பக்கம் பிரம்மாண்டமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தட்சிணாமூர்த்தியை வணங்கி உள்ளே செல்கிறோம். தட்சிணாமூர்த்தியின் பிரம்மாண்டத்துக்கு சற்றும் குறைவில்லாமல் காட்சியளிக்கிறார் நந்தி. குன்றின் மேல் இருப்பதால், இடவசதி இல்லாததன் காரணமாக அதிக சன்னிதிகள் கிடையாது. மூலவர் கைலாசநாதரை உள்வாங்கி, கண்மூடி தரிசனம் செய்துவிட்டு, வலது புறம் கனிவான பார்வையுடன் ரட்சிக்கும் கனகாம்பிகை அம்பாளையும் தரிசனம் செய்கிறோம்.
ஈஸ்வரனும் அம்பாளும் இந்த சிறு குன்றின் மீது கோயில் கொண்டது எப்படி என்பதை அறிய, ஒரு கி.மீ. தொலைவில் இருக்கும் நத்தம் கிராமத்தில் உள்ள சம்பகேஸ்வரர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கைலாசநாதர் மற்றும் சம்பகேஸ்வர் வரலாறு பின்னிப் பிணைந்தது. இது தொடர்பாகச் சொல்லப்படும் சம்பவங்கள் வாய்மொழி மூலமாக பல தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறது.
நத்தம் பகுதி ஒரு காலத்தில் செண்பகவனம் என்று அழைக்கப்பட்டதாம். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும், மேரு மலையை மத்தாக்கி, வாசுகி சர்பத்தை நாணாக்கி கடையும்போது, மலை சாய்கிறது. உடனே பெருமாள் கூர்மாவதாரம் எடுத்து, மலைக்கு அடியில் சென்று சாய்வை சரிசெய்து, சுழல் அச்சாக மேருவைத் தாங்கிக் கொள்கிறார். தேவர்களும், அசுரர்களும் தொடர்ந்து கடைகிறார்கள். வாசுகியின் வாயிலிருந்து விஷம் ஆறாகப் பெருக்கெடுக்கிறது. அதே சமயம் தண்ணீரும் விஷமாக மாறுகிறது. விஷமும், விஷமும் (ஆலம் + ஆலம்) சேர்ந்து கொடிய ஆலகால விஷமாகிறது. தேவர்கள் பயந்து பரமேஸ்வரனை வேண்ட, அவர் விஷத்தைப் பருக, பார்வதி விஷம் உடலின் உள்ளே போகாதபடி சுவாமியின் தொண்டையைப் பிடித்துக் கொள்கிறார்.
அதேசமயம் மலையின் கீழ் கூர்மாவதாரத்தில் இருக்கும் நாராயணன் உடல் முழுவதும் நீலமாகிப் போகிறது. உடலில் விஷ முடிச்சுகள் தோன்றுகின்றன. இதைக்கண்டு பயந்துபோன தாயார் லட்சுமி செண்பக வனத்துக்கு வந்து பெருமாள் உடலில் உள்ள விஷ முடிச்சுகள் போக வேண்டுமென்று, ஈஸ்வரனை வேண்டி தவமிருக்கிறார். ஈஸ்வரன் லட்சுமியின் வேண்டுகோளை ஏற்று, பெருமாளின் மேலுள்ள விஷ முடிச்சுகளை அகற்றுகிறார். அது மட்டுமல்லாமல், அங்கே தன்னுடன் உடனுறையப் போகும் பார்வதி, பாசம், அங்குசம் இல்லாமல் லட்சுமியைப் போல தாமரையும் தேவலோக புஷ்பமான நீலோற்பலமும் ஏந்தி பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் என்றும் சொல்கிறார். இப்போது நத்தத்தில் சம்பகேஸ்வரருடன் உடனுறையும் சௌந்தர்ய நாயகி தாமரையும் நீலோற்பலமும் ஏந்தி பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கும் பின்னணி இதுதான்.
செண்பக வனத்துக்கு ஈஸ்வரனைத் தேடிவரும் பார்வதி அங்கு அவர் இல்லாததால் அருகிலுள்ள குன்றுக்கு வருகிறார். அங்கே பரமசிவன் மேல் பால் சொரிந்து கொண்டிருக்கிறது பசு. பால் ஆறாகப் (பாலாறாகப்) போகிறது. பசுவுக்கு மேலே நாகம் குடை பிடிக்கிறது. அந்தக் குன்றில் ஈஸ்வரன் கைலாச நாதராகவும், பார்வதி கனகாம்பிகையாகவும் அமர்ந்து உலகத்தை ரட்சித்து வரத் தொடங்கினார்கள். கைலாசநாதர் கோயிலில் கருவறை சுவரை ஒட்டிய மகா மண்டபதில் லிங்கத்துக்கு பசு பால் சொரிவதும், நாகம் குடை பிடிப்பதும் சிற்பமாக வழிபடத்தக்க வகையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்வரனை தேடி பார்வதி முட்டி தரையில் படும்படி வந்தாராம். இதைச் சொல்லும் விதமாக வெளிப் பிராகாரத்தில் தரையில் முட்டி தடம் இருக்கிறது.
பரமேஸ்வரமங்கலத்துக்கு வருபவர்கள் நத்தத்துக்கும் சென்று சம்பகேஸ்வரரையும் வணங்க வேண்டும். அவருக்கு முன்னால் சௌந்தர்ய நாயகியை வணங்க வேண்டும். சம்பகேஸ்வரர் கோயிலில் தொன்மை வரலாற்றைச் சொல்லும் ஏராளமான கல்வெட்டுக்கள் இருக்கின்றன. சோழர்கள் காலத்தில் தரிசு நில மேம்பாடு, உள்ளாட்சி நிர்வாகம் குறித்த கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இரண்டு கோயில்களுக்கும் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் நிறைய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. காஞ்சிபுரம் அருகே கூரத்தில் முதலாம் பரமேஸ்வரவர்மன் கட்டிய முதற் கற்கோயிலுக்கு பரமேஸ்வரமங்கலம் தானமாக எழுதி வைக்கப்பட்டதாகவும் குறிப்பு இருக்கிறது.
தொடர்புக்கு:
சம்புகேஸ்வர குருக்கள் - 97860 58325

Comments