ஒருவர் வாழும் ஆலயம்

கடலூர் திருவஹீந்திரபுரம் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது எங்கள் வாகனம். இருமருங்கிலும் அடர்ந்த புதர்களைத் தவிர வேறு எதுவுமில்லை. ஆள் நடமாட்டமில்லாத சாலையில் எங்களுக்கு வழிகாட்ட கௌசிக் என்ற இளைஞரும் அவரது நண்பரும் உடன் வந்து கொண்டிருந்தனர். இருவர் கைகளிலும் அரிசி, பருப்பு மற்றும் உடைகள் அடங்கிய பைகள். பாலூர் சாலையில் வண்டி இடப்புறமாகத் திரும்பியது. குறுகலான பாதையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்த செடிகளும் கொடிகளும்.
“இதுக்கு மேல வண்டி போகாது. இங்க நிறுத்திக்கோங்க” என்கிறார் கௌசிக். வண்டி ஒரு மேட்டின் அருகே நிற்கிறது. நிமிர்ந்து பார்க்கிறோம். ஒரு காலத்தில் மிக பிரம்மாண்டமாக விளங்கி இருந்திருக்கும் நதி. அதன் நீளமும் அகலமும் இப்பொழுதும் பிரமிக்க வைக்கின்றது. இன்று நீரின்றி புதர் மண்டி பீர் பாட்டில்களும் குப்பைகளும் ஆங்காங்கே இறைந்து கிடக்க, பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றது. சுற்றிலும் இயற்கையின் பாழ் கோலம். நதி மட்டுமல்ல; ஒரு காலத்தில் மிகப்பெரும் ஆலயமாக இருந்திருக்ககூடிய ஆலயம் இன்று ஒற்றை சன்னிதியுடன் பாழடைந்து கிடக்கிறது. ஒரு பிரம்மாண்டமான ஆவுடையார் தரையில் சாய்ந்து கிடக்கிறது. உடைந்த கூரையின் கீழ் ஒரு சிலை. வானம் பார்த்த விநாயகரும் நந்தியும்.
வேதனையுடன் இறங்குகிறோம். “கோயில் பிரசாதங்களையும் எடுத்துகோங்க” என்கிறார் கௌசிக். நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோயிலில் கொடுக்கப்பட்ட புளியோதரை, தயிர்சாத பொட்டலங்களை எடுத்துக்கொண்டு கௌசிக்கின் பின்னே செல்கிறோம். இன்று பாழடைந்துக் கிடக்கும் நதியும் கோயிலும் ஒரு காலத்தில் எப்படி இருந்திருக்கும்? எண்ணங்கள் பின்னோக்கி விரைகின்றன.
திரிபுரங்களை சிறு சிரிப்பால் எரித்து நிற்கிறார் சிவபெருமான். தேவர்கள் பூமாரி பொழிகின்றனர்.
சிவனாரைக் குளிர்விக்க எண்ணி கெடில நதியை உருவாக்குகிறார் உமையம்மை. இருவரும் ஏகாந்தமாக நீராடுகையில் சிவனாரின் முடியிலிருந்த கங்கை கெடில நதியில் கலக்க அந்நதி தென்கங்கை என்ற பெயர் பெறுகிறது. இந்த தென்கங்கை நதிக்கரையில் மிக அரிதான மூலிகைகள் இருப்பதைக்கண்டு இங்கு சிவனாரின் திருமேனியை லிங்கத்திருமேனியாய் அமைத்து தென்கங்கை நீரினால் அபிஷேகித்து மகிழ்ந்தாள் அம்பிகை. சிவனாரும் உடல் வெப்பம் குளிர்ந்து மனமகிழ்ந்து அருளினார்.
காலங்கள் உருண்டோடின. இப்பகுதியை ஆண்ட ஒரு மன்னனுக்கு வெம்மை நோய் கண்டது. அரண்மனை வைத்தியர்கள் பல மருந்துகளைக் கொடுத்தும் பயனளிக்கவில்லை. அப்போது அறந்தாங்கி நல்லூர் என அழைக்கப்பட்ட இப்பகுதியிலுள்ள மூலிகைகளைப் பற்றி கேள்விப்பட்ட அரசன், இங்கு வந்தான். புதர் மண்டிய இடத்தில் ஈசனைக் கண்டு வணங்கினான். தென் கங்கை நீரில் குளித்து, மூலிகைகளை உட்கொண்டு நோய் தீர்ந்தான். நோய் தீர்த்த இறைக்கு கோயில் ஒன்றை அமைத்து தென்கங்கை நீர் அதன் வாசல் வரை வர வாய்க்கால் அமைத்தான். வெம்மை நோய் தீரும் அற்புதத்தை அறிந்த மக்கள் பலரும் தென்கங்க புரீச்வரரை வணங்கி பலன் பெற்றனர்.
மேலும் பல ஆண்டுகள் உருண்டோடின. அன்னியர் படையெடுப்பில் அறந்தாங்கி நல்லூர் உருத் தெரியாமல் போயிற்று. வீடுகளும் மாளிகைகளும் தரை மட்டம் ஆயின. கோயிலும் பெருமளவில் பழுதுபட்டது. எஞ்சி இருந்த மக்களும் புலம் பெயர்ந்து செல்ல, நரிகள் மட்டுமே மிஞ்சிய நரிமேடு ஆனது இவ்வூர். இன்றும் வெறும் ஐம்பது வீடுகளையே கொண்ட சிற்றூராக விளங்குகிறது.
பெருமூச்சுடன் நிகழ் காலத்துக்கு திரும்புகிறோம். நண்பகல் வெயிலில் கண்களைக் குறுக்கிக் கொண்டு பார்த்தால், அர்த்த மண்டபத்தில் கோவணம் மட்டும் கட்டிய ஒரு முதியவர் மற்றும் இரண்டு நாய்கள் அருகருகே படுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
உள்ளே சென்ற கௌஷிக்கும் அவர் நண்பரும் முதியவரை கைத்தாங்கலாக எழுப்பி வேட்டியை அணிவிக்கின்றனர். கிட்டத்தட்ட எண்பத்தைந்து வயது இருக்கும் அம்முதியவருக்கு. கண்கள் இரண்டிலும் புரை முற்றி பார்வை மிக மங்கலாகத் தெரிகிறது. என்னைக் கண்டவுடன், “அம்மா, போ... போ. அப்பாவுக்கு வௌக்கு ஏத்து” என்கிறார். படுத்திருக்கும் இரண்டு நாய்களைத் தாண்டி கருவறைக்குள் நுழைகிறேன். மிக பிரம்மாண்டமான ஈசன். ஒற்றை ஆடையில் எவ்வித அலங்காரமும் இன்றி அமர்ந்திருக்கும் கோலம் கண்டு கண்கள் தானாகக் கலங்குகின்றன. பிசுக்கு பிடித்த விளக்கில், இருந்த எண்ணையை ஊற்றி, அருகிலிருக்கும் பிளாஸ்டிக் பைகளை துழாவி திரியையும், தீப்பெட்டியையும் கண்டுபிடித்து விளக்கு ஏற்றுகிறேன்.
மௌனமாக பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வரும்பொழுது, அர்த்த மண்டபத்தில் ஒரு திரிசூல கல்வெட்டுடன் பெரியவர் கண்ணன் சுவாமிகளின் புகைப்படம். இக்கோயில் ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருந்தாலும், இங்கு கிடைக்கப்பட்ட கல்வெட்டு சற்று பிற்காலத்தியது. 14ம் நூற்றாண்டில் ஆறாம் மாறவர்ம விக்கிரம பாண்டியரின் அமைச்சராக இருந்த அபிமான துங்க பல்லவராயர் இக்கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் குறித்த கல்வெட்டாகும்.
கௌசிக் உணவுப் பொட்டலங்களை பெரியவர் கண்ணன் சுவாமிகளிடம் கொடுக்கிறார். “புளி சாதமா?” என்று கேட்ட அவர், அதைப் பிரித்து தட்டில் கொட்டி நாய்களை அழைக்கிறார். “தயிர் சாதம் பைரவருக்கு ஒத்துக்காது. அப்பறம் நான் சாப்பிட்டுக்கறேன்” என்று இன்னொரு பொட்டலத்தை வாங்கி ஓரிடத்தில் வைக்கிறார்.
இப்படியும் ஒருவரா? தான் சாப்பிட்டு எத்தனை நாள் ஆயிற்றோ? இருப்பினும் தான் வளர்க்கும் பிராணிகளுக்கு முதலில் உணவளிக்கும் அவரை அதிசயமாகப் பார்க்கிறோம். “கண்ணன் சுவாமிகள் இந்த கங்கபுரிஸ்வரருக்காக தன் குடும்பத்தைவிட்டு வந்து ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது” என்கிறார் கௌசிக். “யாராவது கொடுத்தால் உணவு, இல்லாவிடில் அவருக்கு சிவன் காவல், சிவனுக்கு அவர் காவல்” என அவர் கூற, பிரமிக்கிறோம்.
கண்ணன் சுவாமிகள், வெய்யிலுக்கு கையை மறைத்துக்கொண்டு, “அம்மா, நான் இருக்கறதுக்குள்ள அப்பாவுக்கு ஊடு கட்டிடணும். மறந்திடாத தாயி” என்று இறைஞ்சுகிறார். மனம் விம்முகிறது. ‘பூசலார் நாயனார் இப்படித்தான் இருந்திருப்பாரோ?’ என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே, நாம் எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்கிறார் கண்ணன் சுவாமிகள். கௌசிக் கட்டி விட்டிருந்த புது வேட்டியை உருவி அவரிடமே கொடுக்கிறார். “இந்தா, இதை நீயே எடுத்திட்டு போ. இங்க என்ன வச்சாலும் தூக்கிட்டு போயிடரானுங்க. எனக்கு எதுக்கு வேட்டி? இந்தக் கோவணமே போதும். வேற யாருக்காச்சும் தேவைப்படும். அவங்களுக்குக் குடு” என்று சொல்லிவிட்டு தள்ளாடி உள்ளே நடக்கிறார்.‘நான் இருக்கறதுக்குள்ளே அப்பாவுக்கு ஊடு கட்டிடணும்’ என்கிற வார்த்தைகள், மனத்தில் கனமாய் பரவுகின்றன.
செல்லும் வழி
கடலூரிலிருந்து 15 கி.மீ., பண்ருட்டியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. கடலூர்- திருவஹீந்திர புரம் சாலையில் பாலூரில் இடப்புறம் திரும்பினால் கோயிலை அடையலாம்.
தொடர்புக்கு: 98947 03148 / 96009 20767.

Comments