திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் அவசியம்தானா?

ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது சாஸ்திரத்தின் கட்டாயமல்ல. சகுனங்கள் மூலமாகவும் தீர்மானிக்கலாம். அதாவது, குல தெய்வத்தின் சன்னிதியில் பூ போட்டு பார்த்து உத்தரவு கேட்டல்; திருமண சம்பந்தமான முயற்சியின்போது, சுற்றிலும் இருப்பவர்கள் பேசும் பேச்சு; அங்கே நடக்கும் நிகழ்வுகள், முதன் முதலாக ஒருவருக்கொருவர் எதிர்பாராமல் சந்திக்கும்போது இருக்கும் சூழ்நிலை, போன்ற சில நிமித்தங்கள் மூலமாகவும் திருமணம் நடத்தலாமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கலாம்.
மேலும், ஹோமங்கள், யாகங்கள் செய்யும் பகுதியிலுள்ள மண்; விவசாய பூமியின் மண்; எதுவுமே விளையாத உவர் மண்; சுடுகாட்டு மண் என்பதாக நான்கு விதமான மண் கட்டிகளை நான்கு பாக்கெட்டில் அடைத்து வைத்து, அவற்றை ஆணையோ, பெண்ணையோ விட்டு தொடச் சொல்ல வேண்டும். அந்த நான்கில் முதல் இரண்டு விதமான மண் பாக்கெட்டைத் தொட்டால், அவருடன் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும், 3,4 எண்ணிக்கையுள்ள கடைசி இரண்டு விதமான மண்ணைத் தொட்டால், அவருடன் திருமணம் வேண்டாம் என்றும் தீர்மானிக்கலாம் என்கிறது ஒரு நிமித்த சாஸ்திரம்.
மேலும் திருமணத்துக்கு பலவித ஜாதக பொருத்தங்கள் பார்க்க வேண்டும் என்று சொன்ன ஆபஸ்தம்ப மஹரிஷி, இறுதியில் தீர்மானமாகச் சொல்கிறார்: அதாவது பையனுக்கு பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் போதும், பெண்ணுக்குப் பையனைத் தேர்ந்தெடுக்கும் போதும், ‘பந்து சீல லக்ஷ்ண ஸம்பன்ன மரோகா முபயச்சேத’ என்று. அதாவது, அவர்களின் உறவினர், ஒழுக்கம், அழகு,நோயற்ற தன்மை, படிப்பு ஆகிய ஐந்தை மட்டுமே பரிசீலித்துத் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் கூறும்போது, இதுகூடத் தேவையில்லை. ‘யஸ்யாம் மநஸ் சக்ஷுஷோர் நிபந்த: தஸ்யாம் ருத்தி: - நேதரத் ஆத்ரியேத’ என்பதாக, ஒருவருக் கொருவர் கண்ணுக்கும் மனத்துக்கும் பரஸ்பரம் பிடித்துவிட்டால், அவர்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைக்கலாம். மற்ற எந்தப் பொருத்தமும் பார்க்கத் தேவையில்லை என்றும் சொல்கிறார் ஆபஸ்தம்பர்.
புண்ணிய நதிகளில் நீராடுவதால் பாவம் தீருமா?

ஒர் மலைப்பகுதியிலிருந்து உருவாகி, குறிப்பிட்ட அளவு அகலத்தில் - ஓர் யானை முழுகும் அளவுக்கும் அதிகமான அளவு ஆழத்தோடு - சில மைல் தூரம்வரை பிரவகித்து (ஓடி), இறுதியில் சமுத்திரத்தில் சென்று ஒன்றாகக் கலக்கும் நதிகளே புண்ணிய நதிகள் எனப்படுகின்றன.
இப்படிப்பட்ட புண்ணிய நதிகளில் (தலை முழுவதும் நனையுமாறு) நீராடுவதால், அறியாமல் செய்த அனைத்து பாபங்களும் நிச்சயம் முழுமையாக விலகிவிடும். உதாரணமாக, வீதியில் நடந்தோ - வாகனத்தில் செல்லும்போதோ, செல்லும் வழியில், துறவி, பசுமாடு, அரசன் (ஊர்த் தலைவர்) போன்றவர்கள் குறுக்கிட்டால் அல்லது ஆலயம் இருந்தால், அப்போது அவர்களை - அந்த ஆலயத்தை - வலமாகச் சுற்றிச் (பிரதக்ஷிணமாக) செல்ல வேண்டும். கர்ப்பிணிப் பெண் - சுமை தூக்கிச் செல்பவர் முதலானோர் வந்தால், அவர்களுக்கு முதலில், வழிவிட வேண்டும். இதுபோன்ற செயல்கள் புண்ணியத்தைத் தேடித் தரும். இந்த விபரங்களை அறியாமல், அவர்களுக்கு இடப்புறமாகச் (அப்ரதக்ஷிணமாக) சென்றால், அதனால் (தெய்வங்களை அவமதித்த குற்றம்) பாபம் ஏற்படலாம். இதுவே அறியாமல் செய்த பாபம் எனப்படும். இதைப்போல் அறியாமல் செய்த பலவிதமான பாபங்களும், புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று, ஆலயங்களை தரிசிப்பதாலும், புண்ணிய நதிகளில் நீராடுவதாலும் நிச்சயம் விலகிவிடும்.
ஆனால், ‘பாபங்களை போக்கிக் கொள்ள புண்ணிய நதிகள்தான் இருக்கின்றனவே? பாபம் செய்துவிட்டு புண்ணிய நதியில் குளித்துவிட்டால் போயிற்று’ என்னும் (தவறான) எண்ணத்தில் ஒருவன் பாபம் (குற்றம்) செய்வானேயாகில், அந்த பாபம், புண்ணிய நதியில் நீராடுவதாலும் மற்ற பரிகாரங்களாலும் விலகாது. அதற்கான பலனை பாவம் செய்தவனோ, அல்லது அவரது வம்சத்தைச் சேர்ந்தவர்களோ அனுபவிக்க நேரிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வாஸ்து தேவதையை வீட்டில் பூஜிக்கலாமா?

ஒவ்வொரு முறையும் நிலத்தில் கட்டடம் கட்டும்போதும், கட்டடத்தை மாற்றி அமைக்கும் போதும், கட்டிய வீட்டில் மூன்று வருடத்துக்கு ஒருமுறையும் வாஸ்து பூஜை நடத்த வேண்டும். அல்லது வாஸ்துவின் படத்தை வைத்து (வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்களில்) பூஜையாவது செய்வது சிறந்தது.
ஒரு சதுர வடிவத்தை 81 கட்டங்களாகப் பிரித்து அமைத்து, அதன் நடுவில் பிரம்மா இருப்பதாகவும், மற்ற கட்டங்களில் எட்டு திசைகளுக்கும் அதிபதிகளான அஷ்டதிக் பாலகர்கள் முதலான பல தேவர்கள் இருப்பதாகவும் அமைத்து, அதன் நடுவில் அமைந்திருக்கும் ஒன்பது கட்டங்களில் வாஸ்து புருஷன் கால்களை நீட்டிக்கொண்டு, குறுக்காக இருக்கும்படியான வாஸ்து படம் - அதாவது வாஸ்து மண்டலத்தின் நடுவில் வாஸ்து புருஷன் இருக்கும் படம், சாஸ்திரப்படி பூஜைக்குரியது. அந்தப் படத்தை பூஜிப்பதால், பூமி சம்பந்தமான தோஷங்கள் - பிரச்னைகள் - குழப்பங்கள் விலகி நன்மை ஏற்படும்.

Comments