கடைத்தேற வழி...

ஆசார்ய சங்கரர் என்றதும் அவர் உபதேசித்த அத்வைதம் என்கிற தத்துவம்தான் நினைவுக்கு வரும். அந்தப் பெரும் விஷயத்தை மட்டும் தானா அவர் சொன்னார்? பல்வேறு தெய்வ மூர்த்திகளின் மீது, பல்வேறு தோத்திரங்களையும் அருளியுள்ளார்.
ஞானம் வசப்பட்டவர்களுக்கு அத்வைதம் என்றால், பக்தர்களுக்கு அவர்கள் சொல்லித் துதிப்பதற்கான தோத்திரங்கள். சரி; நம்மைப்போன்ற தோத்திரம் சொல்லத் தெரியாத - மிக ஆழ்ந்து பக்தி செலுத்தத் தெரியாதவர்கள் என்ன செய்வது? நமக்கெல்லாம் கடைத்தேற என்ன வழி? நாம் நிம்மதியாக வாழ அவர் வழி எதுவும் காட்டவில்லையா? இருக்கிறது. அதையும் அவர் சொல்லியிருக்கிறார். அதுதான், ‘ப்ரச்னோத்ர ரத்னமாலிகா.’
கேள்வியும் பதிலுமாக அமைந்த அந்த நூலில் நம்முடைய கவலைகள், துன்பங்கள், பிரச்னைகள் எல்லாவற்றையும் துவைத்து உலர்த்திக் கண்ணெதிரே பளிச்சென்று காட்டுகிறார். தவிர, அதைத் தவிர்க்கவும் வழி சொல்கிறார். அவற்றில் சில இந்த சங்கர ஜயந்தி நன்னாளில் நம்முடைய சிந்தனைக்கு.
கேள்வி: யாருக்குத் துயரம் வராது?
பதில்: கோபம் கொள்ளாதவனுக்கு!
கேள்வி: எது சுகம்?
பதில்: மன நிறைவு!
கேள்வி: எது மரணத்தைவிட துன்பம் தருவது?
பதில்: கெட்ட பெயர்!
கேள்வி: கடவுளுக்குப் பிரியமானவன் எவன்?
பதில்: தானும் கோபப்படாமல், பிறருக்கும் கோபம் ஊட்டாமல் இருப்பவன்!
கேள்வி: தீண்டத்தகாதது எது?
பதில்: கடன்!
கேள்வி: மகாபாதகச் செயல் எது?
பதில்: மற்றவர்களைத் துன்புறுத்துதல்!
கேள்வி: பலமான பகை எது?
பதில்: காமம், ஆசை!
கேள்வி: துன்பத்திலிருந்து காப்பாற்றக் கூடியவை எவை?
பதில்: கடமையுணர்ச்சி கொண்ட மனைவி, தைரியம்!
கேள்வி: யார் பரிதாபத்துக் குரியவன்?
பதில்: வசதி இருந்தும் கொடுக்க மனம் இல்லாதவன்!
கேள்வி: எது தானம் ?
பதில்: கேளாமலும், பிரதிபலன் எதிர்பாராமலும் கொடுப்பது!
கேள்வி: யார் உண்மையான நண்பன்?
பதில்: பாவச் செயல்களிலிருந்து விலக்குபவன்!
கேள்வி: எது நரகம்?
பதில்: அடிமைத்தனம்!
கேள்வி: உண்மையான பகைவன் யார்?
பதில்: முயற்சியின்மை!
கேள்வி: செய்யத்தகாத காரியம் எது?
பதில்: பலராலும் நிந்திக்கத் தக்க செயல்!
இது, ஒவ்வொருவரின் நடைமுறை வாழ்வுக்கும் தேவையான அடிப்படை விஷயம்தானே? இதைச் சொன்னதன் மூலம், இதைச் சரியாகச் செய்தாலே நமக்குக் கடவுளின் அனுக்ரகம் வாய்க்கும் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஆசார்யர். இவற்றை உணர்ந்து பின்பற்றுவதுதான், நாம் ஆசார்ய ஜயந்தியை கொண்டாடுவதன் உண்மையான பொருளாக அமையும்.

Comments