ஸ்ரீரமண மகரிஷி -'நான்' யார்?

ஆத்மாவிலிருந்து தோன்றுகின்ற ஓர் அற்புதமான சக்தியே மனம். மனம்தான் நினைவுகளைத் தோற்றுவிக்கிறது. இவர் நல்லவர், அவர் கெட்டவர், இது சரி, அது தவறு, இது உயர்வு, அது தாழ்வு என்று விதம்விதமான நினைவு அடுக்குகள் இருக்கின்றன. அந்த நினைவுகளை நீக்கினால், மனம் என்ற ஒரு பொருள் அறவேயில்லை. நினைவுகளின் அடுக்குதான் மனம்.
அந்த நினைவுகள் உன்னால் சிருஷ்டிக்கப்பட்டவை. நினைவுகளின் ஊடாகவே நீ இந்த உலகத்தைப் பார்க்கிறாய். ஆழ்ந்த தூக்கத்தில் நினைவுகள் இல்லை. எனவே, உலகமும் இல்லை. சிலந்தி தன்னிடமிருந்து நூலைப் பிரித்து எப்படித் தனக்குள் இழுத்துக்கொள்கிறதோ, அதேபோல உன் நினைவுகளால், உன் மனதால் உலகத்தை சிருஷ்டி செய்கிறாய். பிறகு, நீயே அதை உனக்குள் இழுத்துக்கொள்கிறாய். 'இதுதான் உலகம்’ என்று நினைக்கிறாய். அவர்கள் நல்லவர்கள், இவர்கள் கெட்டவர்கள் என்று இரண்டு விதமாகப் பிரிப்பது நீயே! உண்மையில் அவர்கள் யார் என்று நீ பார்ப்பதேயில்லை. நீ தீர்மானிப்பது பல தீர்மானங்களை உருவாக்குகிறது. நல்லவர்- கெட்டவர் என்று சிருஷ்டித்து, இன்னும் பன்மடங்கு பெருகி, இந்த உலகம் அதன் இயல்பாக இல்லாமல் உன் உலகமாக, நீ சிருஷ்டித்த உலகமாக மாறுகிறது. நீ கெட்டவர் என்று தீர்மானித்ததை வேறு ஒருவர் நல்லவர் என்று தீர்மானிக்கிறார். அவருடைய உலகம், நீ நல்லவர் என்று சொல்பவரைக் கெட்டவராகக் கருதுகிறது.
ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமான உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு, உண்மையான உலகத்தைப் பார்க்க முடியாமல் அவஸ்தைப் படுகிறார்கள். தன் மனத்தை ஒடுக்கிய ஞானியால் மட்டுமே உள்ளதை உள்ளவாறு பார்க்க முடிகிறது.
இந்த நினைவுகள் எங்கிருக்கின்றன? 'நான்’ என்பது எங்கே இருக்கிறது? 'நான்’ என்று சொல்லுமிடத்தில்தான் மனம் இருக்கிறது. அந்த 'நான்’ ஹ்ருதயத்தில் இருந்து வெளிவருகிறது. இந்த ஹ்ருதயம் வலப்பக்கத்தில் இருக்கிறது. அது தோலாலான துருத்து அல்ல. மார்பின் வலப்பக்கத்தில் சூட்சுமமாய் இருக்கின்ற ஆன்ம இதயத்தில் இருந்து வெளிவருகிறது. மார்புக் குழியிலிருந்து ஒரு விரல் நுனி தள்ளி இருக்கின்ற இடத்தில்தான் 'நான்’ என்கிற எண்ணம். 'நான்’ என்பதுதான் மனம்.
'நான்’ இல்லையெனில் மனம் இல்லை. தன்மை தோன்றிய பிறகே முன்னிலை, படர்க்கை. தன்மை இல்லாமல் முன்னிலை, படர்க்கை இல்லை.
'நான் யார்’ என்ற விசாரணையில் மனம் அழியும். மனமே இந்த மனதை நீ யார், என்ன செய்கிறாய் என்று உற்றுக் கவனித்து விசாரித்து, அப்படி விசாரிக்கின்ற நானும் அழிந்துபோகும்.
பிணத்தைப் புரட்டி புரட்டிச் சுடுகின்ற தடி, பிணம் முற்றிலும் எரிந்துபோன பிறகு, அதுவும் நெருப்பில் போடப்படுவது போல, விசாரித்த மனமும் காணாது போகும். எண்ணங்களோடு போகாமல், எண்ணங்களை எப்படிச் செயலாக்குவது என்று சிந்திக்காமல், எண் ணங்களின் விளைவு பற்றி ஆராயாமல், யாருக்கு இந்த எண்ணங்கள் தோன்று கின்றன என்று விசாரித் தால், மனம் தன் ஆரம்ப நிலைக்கு வந்துவிடும். அந்த எண்ணமும் அடங்கும். இவ்வாறு பழகப் பழக, மனம் உதித்த இடத்தில் ஒடுங்கியிருக்கின்ற சக்தி அதிகரிக்கின்றது. 'நான்’ என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாத இடமே அற்புதம். அதுவே மௌனம். அதுவே ஞானதிருஷ்டி. அதுதான் நம் உண்மை இருப்பு. அதுதான் ஆன்ம சொரூபம். மற்றதெல்லாம், அது பற்றி மனம் செய்து கொள்ளும் கற்பனைகளே!
மனத்தை இப்படி அடக்குவதற்கு 'நான் யார்’ என்று விசாரிப் பதைத் தவிர, வேறு வழியே இல்லை. வேறு சில தந்திரங்களைக் கையாண்டால், மனம் அடங்கியிருப்பது போல் அடங்கியிருந்து, மறுபடியும் எழுந்துவிடும்.
பிராணாயாமத்தால் மனம் அடங்கும். உண்மைதான். ஆனால், சுவாசக் கட்டுப்பாடு இருக்கும்வரை மனம் அடங்கி, பிறகு அது தாறுமாறாய் ஓடத் துவங்கிவிடும். மனமும் மூச்சும் ஒரே பிறப்பிடத்தைக் கொண்டவை. அகங்காரம், அதாவது 'நான்’ எங்கு உற்பத்தியாகிறதோ, அங்குதான் மூச்சும் கிளம்புகிறது.
தூக்கத்தில் மனம் அடங்கியிருந்தபோதிலும், மூச்சு அடங்கவில்லை. இறந்துபோய்விட்டார் என்று நினைத்துக் கொள்ளாதபடிக்கு இயற்கையின் கருணை யால் மூச்சு மட்டும் நகர்ந்துகொண்டிருக்கிறது.மனதில் ஸ்தூல ரூபம் பிராணன். மரண காலம் வரை மனம் பிராணனை உடலில் வைத்துக்கொண்டிருந்து, மரிக்கையில் அதைக் கவர்ந்துகொண்டு போகிறது. பிராணாயாமம் மனதை அடக்க வழியேயன்றி, மனதை முற்றிலும் ஒடித்துவிடாது.
தியானம், மந்திர ஜபம் போன்றவை மனதை அடக்கச் செய்யும் தந்திரங்கள். யானையின் துதிக்கை சதா அலைந்து கொண்டிருக்கிறது. அப்படி அலையும் துதிக்கையில் சங்கிலி கொடுத்தால் யானை அந்தச் சங்கிலியைப் பற்றிக் கொண்டேயிருக்கும். அதேபோல, மந்திர ஜபம் எனும் சங்கிலி, மனம் என்கிற யானைக்குக் கொடுக்கப்படுகிறபோது, அதைப் பிடித்துக்கொண்டு நிற்கிறது. மந்திர ஜபம் நழுவ, மனம் மறுபடியும் அலையத் துவங்கும். ஆனால் மந்திர ஜபம், ஒரு ஏகாக்கிரகத் தன்மையைக் கொடுக்கிறது. மந்திர ஜபத்தால் பலமடைந்த மனதை, 'நான் யார்’ என்ற விசாரத்தால் முற்றிலும் அழித்துவிடலாம்.
குறைவான ஆகாரத்தால், அமைதியான குணம் பெருகி அதுவும் மனதுக்குப் பலத்தைக் கொடுத்து, ஆன்ம விசாரத்துக்கு அழைத்துப் போகிறது. காரசாரமான அதிக உணவு உடம்பை அயரவைத்து, கனவுகளாலான தூக்கத்தை ஏற்படுத்துகிறது. பிறகு, ஆன்ம விசாரம் வராது. ஆன்ம விசாரம்தான் மனம் அழியக் காரணமாக இருக்கிறது. இவையெல்லாம் உதவியே அன்றி, 'நான் யார்’ என்கிற விசாரமே உண்மையில் மனதை அழிக்கும். எண்ணங்கள் தோன்றும்போதே, அதை ஆழ்ந்து கவனித்துவிட வேண்டும். யாருக்குத் தோன்றுகின்றன என்று ஆழ்ந்து பார்க்க வேண்டும். அப்படி விசாரிக்கிறபோது, மனம் அந்த எண்ணத் தைக் கைவிட்டு வெறுமே நிற்கும்.
கோட்டைக்குள்ளிருந்து எதிரிகள் வெளியே வரவர வெட்டி வெட்டி வீழ்த்துவதுபோல, எந்தவித எண்ணம் வெளியே வந்தாலும், அந்த நினைவுகளை அழித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது 'நான் யார்’ என்கிற தெளிவு நிச்சயம் உண்டாகும்.
மனம் அடங்கி, அதை முற்றிலும் ஒடித்தவரே குரு. கடவுளும் குருவும் வேறல்ல. புலி வாயில் சென்ற மாமிசம் எப்படி திரும்பாதோ, அதே போல குருவின் பார்வையில் பட்டவர்கள் நிச்சயம் ரட்சிக்கப்படுவார்கள். ஆனால், குருவை இறுகப் பற்றிக்கொண்டு, அவர் காட்டிய வழியில் நடக்க முயற்சிக்க வேண்டும்.
பிரபஞ்சத்தின் எந்த விஷயத்திலும் சுகம் என்பது இல்லை. சுகம் என்பது ஆத்மாவை அறிவதே. அந்தச் சொரூபத்தைத் தரிசிப்பதே. உலகிலுள்ள பொருள்கள் சுகமாகத் தெரிவதேன்? அந்தப் பொருள்களை அனுபவிக்கும்போது மனம் ஆத்மாவை தரிசித்துவிட்டு, வெளியே வருகிறது. அதைத் தரிசிக்கிற நேரம் சுகமாக இருக்கிறது. தாகத்துக்கு நீர் குடிப்பதும், பசிக்கு உணவு அருந்துவதும், வெயிலில் இருந்து நிழலுக்குப் போய் உட்கார்ந்து கொள்வதும், கூடலும் அவ்விதமே! ஒரு க்ஷண நேரம் இந்த விஷயங்களில் மனம் ஆத்ம தரிசனம் பெறுகிறது. 'அப்பாடா... என்ன சுகம்!’ என்று உணர்கிறது. மறந்துவிட்டு, அந்தச் சுகத்தை விட்டு நீங்கி, மறுபடியும் அடுத்த அனுபவத்தைத் தேடிப் போகிறது. இந்தப் பொருள்களில் சுகமில்லை, ஆத்மாவை உணர்வதிலேயே சுகமிருக் கிறது என்பதை விவேகமுள்ளவன் கண்டுகொண்டு, பொருள்களை உதறித் தள்ளி, விஷயங்களை விலக்கி விட்டு, ஆத்ம தரிசனம் பெறுவதற்கு இடையறாது உழைப்பான்.
எல்லா மதங்களும் இந்த மனம் நாசமடைவதையே, மனமற்றுப் போவதையே விதம்விதமாய்ச் சொல்லு கின்றன. தெரிந்த பிறகு, திரும்பத் திரும்ப புத்தகங்களைப் படிப்பதில் என்ன லாபம்? மனதை அழிக்க 'நான் யார்’ என்று விசாரிக்க வேண்டும். எல்லா காலமும் மனதை விசாரித்து ஆன்மாவில் திளைப்பதே 'ஆன்ம விசாரம்.’ விசாரம் செய்யாமல் வெறுமே தத்துவங்களை அளந்துகொண்டு இருப்பதில், திரும்ப திரும்பப் பேசிக் கொண்டிருப்பதில் எந்த லாபமுமில்லை. தத்துவப் பேச்சுகள் மேலும் மனதைக் குப்பையாக்கத்தான் உதவும்.
மனம் அழிந்த நிலையில், பிறர் எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களை வெறுக்கத் தோன்றாது. எத்தனைத் துன்புறுத்தினாலும் எதிர்க்கத் தோன்றாது. துன்புறுத்தப்பட 'நான்’ இல்லையே என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும். துன்பப்படாதவரைக் கண்டு உலகம் பயப்படும்.
பிற விஷயங்களில் மனதைச் செலுத்தக்கூடாது; பிறருடைய காரியத்தில் பிரவேசிக்கக்கூடாது. தன்னிடமிருப்பதை பிறருக்குக் கொடுப்பது மிகச் சிறந்தது. பிறருக்குக் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் என்றால், யார்தான் கொடாது போவார்கள். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை உண்டு. மனம் அடங்கியிருந்தால் எங்கேயும் இருக்கலாம்.
| சிவப்பிரகாசம் பிள்ளையின் கட்டுரையின் விஷயங்கள் இவை. விதவிதமான படிப்புகளாலும், பழக்கங்களாலும் மனத்தை நாலாப்புறமும் அலையவிட்டிருக்கின்ற நம் போன் றோருக்கு ரமணருடைய வழி எளிதல்ல. உலக விஷயங்களைப் பற்றிக்கொண்டு துக்கப்படுகிறபோது, ரமணரின் விஷயம் புரிபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏன் இந்தத் துக்கம் என்று விசாரிப்பதுகூட, 'நான் யார்’ என்கிற விசாரத்திற்கு அருகே கொண்டு போய்விடும். தொடர்ந்து இடையறாது அதில் உறைந்தால், மனம் அடங்கியிருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. வெற்றி தோல்வி, வாழ்க ஒழிக என்று பிரித்துக் கொண்டு கோஷமிடுகிறபோது, மனம் செய்த கற்பனைகளில் மாட்டிக் கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கிறோம்.
உண்மையைத் தேடுகின்ற ஆவலும், முயற்சியும் எல்லோருக் கும் ஏற்படுவதில்லை. ஆவல் ஏற்படின், முயற்சி செய்ய விருப்பம் இருப்பின், வழிகாட்ட பகவான் ஸ்ரீரமணர் உண்டு.

Comments