அருளொடு பொருளும் அருளும் அகத்தீஸ்வரம் !

'தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!’ என்று சிவபெருமானை நாம் போற்றுகிறோம். அப்படி, தென்னாடு உடையவராக சிவபெருமான் போற்றப் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? தமிழர்க்குத் தண்பொருநையைத் தனிப்பெருங்கொடையாக அருளிய தமிழ் முனிவர் அகத்திய முனிவர்தான்! ஈசனின் மணக் கோலம் தரிசிக்க அனைவரும் கயிலையில் கூடி இருந்த நிலையில், தென்திசை உயர்ந்து, வடதிசை தாழ்ந்தது; உலகம் சமநிலை  பெறும்பொருட்டு, சிவபெருமானின் கட்டளைக்கு இணங்க தென் திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியர், தாம் பயணித்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்படி அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்து வழிபடப் பெற்ற தலங்களில் எல்லாம் சிவனாரின் திருப்பெயர் அகத்தீஸ்வரர் என்றே அமைந்திருக்கிறது. அதன் காரணமாகவே சிவபெருமானை தென்னாடு உடையவராகப் போற்றுகிறோம்.
அப்படி அகத்தியர் பெயரால் அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு ஈசன் அருள்புரியும் ஒரு திருத்தலம் பராமரிப்போ, வழிபாடுகளோ இன்றிப் பாழ்பட்டுக் கிடக்கிறது என வாசக அன்பர் ஒருவர் மூலம் தெரிய வந்து, பதறிப்போய், அந்த ஆலயத்தைக் காணச் சென்றோம். வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்துக்கு அருகில் உள்ள ஓச்சேரியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் அமைந் துள்ள உத்தரம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது அந்தக் கோயில். கோயிலின் நிலைமையைப் பார்த்ததும் நம் மனம் அடைந்த வேதனை சொல்லி மாளாது. ஊரின் எல்லையில், சிதைந்த நிலையில் காணப்படும் அந்தக்  கற்கோயிலில், லிங்கத் திருவுருவில் அருட்காட்சி தருகிறார் சிவபெருமான். அவருடைய சந்நிதிக்கு எதிரில் திறந்தவெளியில் நந்தி பகவான் காட்சியளிக்கிறார்.
திருப்பணிக் கமிட்டி உறுப்பினர் வெங்கடகிருஷ்ணன் என்பவரிடம் இந்தக் கோயில் குறித்து விசாரித்தபோது, ''கோயிலின் பெயர் அகத்தீஸ்வரர் ஆலயம், சுவாமியின் பெயர் அகத்தீஸ்வரர் என்பதைத் தவிர, வேறு தகவல்கள் எதுவும் எங்களுக்குத் தெரியாது'' என்றார். முந்தைய தலைமுறையினர் இந்தக் கோயிலைப் பற்றித் தங்களுடைய சந்ததி யினருக்குச் சொல்லாமலேயே சென்றுவிட்டது வருத்தத்துக்கு உரிய விஷயம்தான்.
கோயிலின் கட்டட அமைப்பைப் பார்க்கும்போது, 15ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கும் முன்னதாகவே இங்கே அகத்தீஸ்வரர் ஆலயம் செழிப்பாக இருந்து, சிதிலம் அடைந்த நிலையில், பிற்காலத்தில் அப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
கோயில் அமைந்துள்ள இடம், ஊரின் வடகிழக்கு எல்லையாக உள்ளது. நகர அமைப்பு சாஸ்திரத்தின் படி கோயில் என்பது வடகிழக்கு எல்லையில் அமைந்திருக்க வேண்டும். ஆகையால், இந்த இடத்தில் ஒரு நகரம் இருந்திருக்கிறது என்பதை நாம் அறியலாம். பிற்காலத்தில் அந்நியர்களின் படையெடுப்பால் அந்த நகரம் அழிந்திருக்கக்கூடும் என்று ஊர்ப்பெரியவர்கள் சொல்கிறார்கள்.
கோயிலைப் பற்றிய தகவல்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், வெங்கட கிருஷ்ணன் காட்டிய ஓர் ஆதாரம், 1905ம் ஆண்டு வரை அந்தக் கோயிலில் வழிபாடுகளும் திருவிழாக்களும் சிறப்பாக நடந்துவந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. 1892ம் வருடம், கோயில் குளத்தில் இருந்த படிகளில் சில படிகள் திருட்டு போகவே, வழக்கு பதியப்பட்டு, 1905ம் ஆண்டு வரை அந்த வழக்கு நடைபெற்றிருக்கிறது. அந்த ஆவணத்தின் மூலம், 1905ம்
ஆண்டு வரை கோயில் சிறப்பான நிலையில் இருந்து வந்திருந்ததை அறியமுடிகிறது. அதுமட்டுமல்ல, கோயிலுக்கென்று நிறைய நிலங்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஒருகாலத்தில் சீரும் சிறப்புமாக இருந்த சிவனாரின் ஆலயம் இன்றைக்குச் சிதிலம் அடைந்து கிடப்பதைக் கண்டு, இனியும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாக, ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு திருப்பணிக் கமிட்டியை அமைத்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இங்கே நான்கு கால பூஜைகளை நடத்தி வருவதுடன், இந்த வருடம் ஜனவரி மாதம் 26ம் தேதி பாலாலயம் செய்து, பூமிபூஜையுடன் திருப்பணிகளைத் தொடங்கியுள்ளார்கள். தொடக்க நிலையில் உள்ள திருப்பணிகள் நிறைவடைந்து, சிவனாரின் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்றால், ஊர்மக்களுடன் நாமும் பெருமளவு பங்குகொண்டு நம்மால் ஆன உதவிகளைச் செய்யவேண்டும் அல்லவா? அதுதானே நம்மையெல்லாம் வாழ்வாங்கு வாழவைக்கும் சிவனாருக்கு நமது நன்றியுடன் கூடிய காணிக்கையாகும்!
முனிவர்களும் ரிஷிகளும் வழிபட்ட திருக்கோயில் திருப்பணிகளுக்கு நாம் வழங்கும் பொருளுதவி, ஒன்றுக்கு நூறாக நமக்கு நன்மைகளை அள்ளித் அருளுவதுடன், நம்மையும் நம் சந்ததியையும் காலமெல்லாம் காப்பாற்றும் கவசமாகவும் அமையும். அதிலும், இந்தக் கோயிலில் உறையும் இறைவன், நமது அகத்திய தமிழ் மாமுனியால் ஸ்தாபிக்கப்பட்ட அகத்தீஸ்வரர். நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சொல்லவும், அழிந்து போன வரலாற்றை மீட்டெடுக்கவும், ஆன்மிகச் சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைச் சீர்படுத்த நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம்; அகத்தீஸ்வரரின் அருளுக்கும், அகத்திய மாமுனியின் பெருங்கருணைக்கும் பாத்திரமாவோம்!

Comments