பழையவர் மூவர்

“ஆழ்வார்களுக்கு ‘திவ்ய சூரிகள்’ என்றே ஒரு திருநாமம் உண்டு. ஸ்வாமி தேசிகன் ஆழ்வார்களை, ‘அபிநவ தசாவதாரங்கள்’ என்றே தம்முடைய ‘ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸார’த்தில் தெரிவித்திருக்கிறார். எம்பெருமானுடைய மறு அவதாரமும், எம்பெருமானுடைய நித்யசூரிகளுமாய் பார்க்கவும் போற்றவும் படுபவர்களே ஆழ்வார்கள்” என்றார், ‘பாட்டுக்கு உரிய பழையவர் மூவர்’ என்ற தம் சொற்பொழிவில் ஸ்வாமி ராகவ ந்ருசிம்ஹன்.
‘திவ்யசூரி சரிதம்’ என்ற நூலை முதன்முதலாக ஆழ்வார்களைப் பற்றிச் சொல்வதற்காகவே அருளிச் செய்தார் கருட வாகன பண்டிதர். ஆழ்வார்களின் வைபவத்தைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் அது. ஆரண தேசிகன் கண்ட அபிநவ அவதாரங்களிலே முதல் மூன்று அவதாரங்கள், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். ஸ்வாமி தேசிகன் இவர்களை, ‘பாட்டுக்கு உரிய பழையவர் மூவர்’ என்றே குறிப்பிடுகிறார்.
பாட்டுக்கு உரிய பழையவர் என்று குறிப்பிடும் போது, பன்னிரண்டு ஆழ்வார்களிலே மூத்த ஆழ்வார் களாகவும், கலியுகத்துக்கு முன்பே துவாபர யுகத்தின் கடைசியில் திரு அவதாரம் பண்ணிய ஆழ்வார்கள் என்பதாலும் ஸ்வாமி தேசிகன், பழையவர் என்ற சொல்லால் அவர்களைக் குறிப்பிடுகிறார். ‘பாட்டுக்கு உரிய’ என்றால் என்ன? நம்மைப் போன்ற அடியவர்கள் பாடுவதற்குத் தகுதியானவர்கள் அவர்கள். அந்த ஆழ்வார்கள் எம்பெருமானைப் பாடுவதற்குத் திறம் வாய்ந்தவர்கள் என்றே பொருள்கொள்ள வேண்டும்.
அன்றொரு நாள் எம்பெருமான் திருக் கோவிலூரிலே மிருகண்டு மஹரிஷியின் ஆஸ்ரமத்திலே ஒரு பெரிய இருளை உருவாக்கச் செய்தான். அந்த இருளை முன்னிட்டு கொண்டு, கடினமான அடை மழையை பெய்யச் செய்தான். அந்த மழையிலே இந்த ஆழ்வார்கள் மூவரும், மிருகண்டு மஹரிஷியின் ஆஸ்ரமத்திலே மழைக்காக ஒதுங்கியிருந்தார்கள். மூன்று ஆழ்வார்களின் திருமேனி சம்பந்தத்தை விரும்பிய எம்பெருமான், அந்த இருளிலே அவர்களுக்கே தெரியாமல், நான்காவதாக தானும் அவர்களோடு சேர்ந்து நெருக்குண்டான். அது ஏன்?
‘எம்பெருமான் இந்த ஆழ்வார்களை நெருக்கியது’ இரண்டு காரணங்களுக்காக என்று, ஸ்வாமி தேசிகன் அருளுகிறார். முதலிலே இந்த ஆழ்வார்களின் திருமேனி தன் மீது படாதோ என்ற ஏக்கத்தால், இந்த ஆழ்வார்களின் பவித்ரமான திருமேனி சம்பந்தம் வேண்டும் என்பதற்காக எம்பெருமான் இவர்களை நெருக்கினான்.
இரண்டாவது, அஞ்ஞானத்திலே மூழ்கி இருக்கிற நாமெல்லாம் ஞானம் பெற்று, ஆச்சாரிய சம்பந்தத்தாலே தம் திருவடிகளை அடைய வேண்டும்; அதற்குக் கடினமான சாஸ்திரார்த்த, வேத அர்த்தங்களை எல்லோருக்கும் புரியும்படி எளிய தமிழிலே இனிய பிரபந்தங்களாக, இந்த ஆழ்வார்களைக் கொண்டு பாடச்செய்ய வேண்டும். அவை உலகில் பரவி, அதைக் கடைபிடிப்பவர்கள் தம்மை அடைய வேண்டும் என்கிற தாய்யுள்ளத்தோடு, எம்பெருமான் நெருக்கி நின்றான் என்று ஸ்வாமி தேசிகன் அருளுகிறார்.
நான்கு வேதங்களின் முடிவிலும் உபநிஷத்துக்கள் உள்ளனவே. அவை எம்பெருமானை அடைவதற்காக விதித்த பக்தி, சரணாகதி மார்க்கங்களையே ஆழ்வார்கள் தங்களுடைய திவ்ய பிரபந்தங்களிலே, தங்களது அனுபவங்களை எல்லாம் கலந்து அருளிச் செய்தார்கள்.
திருக்கோவிலூர் எம்பெருமானுக்கு ‘தேகளீசன்’ என்ற இன்னொரு திருநாமமும் பிரசித்தம். இந்த எம்பெருமானின் சம்பந்தமாக ஸ்வாமி தேசிகன் ‘தேகளீச ஸ்துதி’ என்ற ஸ்துதியை அருளிச் செய்திருக்கிறார். தேகளீ என்றால் இடைகழி என்று பெயர். நாமெல்லாம் ரேழி, verandah என்று சொல்கிறோமே, அதற்கு சமஸ்க்ருதத்திலே ‘தேகளீ’ என்று பெயர். அந்த தேகளீயில் ஆழ்வார்களை நெருக்கிய பெருமாள்; ஆழ்வார்களுக்கு சேவை சாதித்த பெருமாள்; திவ்ய பிரபந்தங்களை அவதாரம் செய்ய வைத்த பெருமாள் என்பதாலே தேகளீசன், இடைகழி பெருமான் என்ற திருநாமம்.
முதலாழ்வார்கள் என்று இவர்களுக்கு ஏன் திரு நாமம்? மணவாள மாமுனிகள் இதை தன் ‘உபதேச ரத்தின மாலையில்’ சொல்கிறபோது, ‘மற்றைய ஆழ்வார்களைக் காட்டிலும், காலத்தால் முன்பே திரு அவதாரம் பண்ணி, இனிய பிரபந்தங்களை அருளிச் செய்து நமக்கெல்லாம் நல்வழி காட்டியதாலேயே இந்த மஹானுபாவர்களுக்கு முதலாழ்வார்கள் என்று திருநாமம் வாய்க்கப்பெற்றது’ எனக் குறிப்பிடுகிறார்.
ஆழ்வார்களிலே ஐந்து ஆழ்வார்கள், அயோனிஜர்களாக அவதாரம் செய்தவர்கள் என்று குரு பரம்பரை நூல்கள் குறிப்பிடுகின்றன. யோனிஜர்கள் என்றால் நம்மை போன்று, தாயினுடைய கர்ப்பத்திலே தோன்றியவர்கள். அப்படி அல்லாமல் மலர்களிலோ, செடிகளிலோ தோன்றிய ஆழ்வார்களை அயோனிஜர்கள் என்றே குறிப்பிடுவார்கள்.
துவாபர யுகத்தில், ஐப்பசி மாதம் செவ்வாய்க் கிழமை சிரவண நட்சத்திர நாளில் காஞ்சிபுரத்தில் திருவெஃகாவில் ‘காஞ்சன பத்மம்’ என்கிற புஷ்பத்தில் அவதாரம் செய்தார் பொய்கையாழ்வார். அவர் அருளிச் செய்த பிரபந்தம் முதல் திருவந்தாதி ஆகும். பொய்கையில் இவர் அவதாரம் பண்ணியதால் பொய்கை ஆழ்வார் என்றே இவருக்கு திருநாமம்.
எம்பெருமானுடைய கதையின் அம்சமாக தோன்றியவர் பூதத்தாழ்வார். ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரம் கூடிய திருநாளில், திருக்கடல் மல்லை எனும் திவ்ய தேசத்திலே மாதவி பூ என்று சொல்லக் கூடிய புஷ்பத்திலே அவதரித்ததால் ‘கடல்மல்லைக் காவலன்’ என்ற திருநாமமும் இவருக்கு உண்டு.
மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார், எம்பெருமானுடைய நந்தகம் என்கிற வாளின் அம்சம். ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் திருமயிலையில் ஒரு கிணற்றில் செவ்வல்லி என்கிற ஒரு புஷ்பத்திலே அயோனிஜராக அவதாரம் பண்ணினார். இதில் என்ன ஒரு விசேஷம் என்றால், பொய்கை ஆழ்வார் காஞ்சியில் அவதாரம் பண்ணிய மறுதினம் மாமல்லபுரத்திலே (திருகடல் மல்லை) பூதத்தாழ்வார் அவதாரம் பண்ணினார். அதற்கு அடுத்த நாள் மயிலையியே பேயாழ்வார் அவதாரம் பண்ணினார்.
பூக்களிலே அவதரித்த மூவருமே, பாக்களாலே பரந்தாமனைப் பாடிப் பரவினார்கள். அந்த மகான்களைப் பாடுவதாலேயே, நாமும் பகவானின் அனுக்ரகத்துக்கு ஆளாக முடியும். பழையவர் மூவரும், நம்மைப் பரமனுக்கு ஆட்படுத்தும் பரம குருக்கள் தானே...!

Comments