கட்டமுது

சித்திரை மாதம் நிகழும் பௌர்ணமி திதி மகிமை வாய்ந்தது. இது, இந்திரன் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்ட நாள். அதனால் இந்திர விழா வெகு விமரிசையாக நடந்தேறும் தினம். அது மட்டுமல்ல, அன்னதான மகிமையை ஈசன் உலகுக்கு எடுத்துக் காட்டிய நாளும் இதுதான். எப்படி?
சீர்காழிக்கு அருகில் உள்ளது வடகல் கிராமம். இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கடாவூர் எனும் திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் சிவாலயம். ஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடிய திருத்தலம். அம்பாள் காவியங்கண்ணி (நீலோத்பல விசாலாக்ஷி) உடனுறை ஸ்ரீ வெள்ளடையப்பர், சுயம்புவான லிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கிறார்.
மகாவிஷ்ணு ரிஷப வடிவில் வழிபட்டதால் விஷ்ணுபுரம் எனவும், சுந்தரருக்குத் தயிர் சாதம் அளித்துப் பசியாற்றியதால் ததியோன்னபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிபி சக்கரவர்த்தியைப் பரிசோதிக்கப் புறா உருவில் வந்த அக்னி தேவன், எடைக்கு எடை இழப்பீடு (குர்கீ) கேட்ட கழுகின் (இந்திரன்) செயலுக்குத் தானும் காரணமாகியதற்காக வருந்தி, இங்கு ஒரு நீர் நிலையை உண்டாக்கி, அந்நீரால் அபிஷேகித்து வெள்ளடையப்பனை வழிபட்டு நற்கதி பெற்றதால் இவ்விடம் குருகாவூர் எனவாயிற்று.
தலவிருட்சம் வில்வம். ஆண்டுக்கு ஒருமுறை தை அமாவாசை அன்று மட்டுமே திறக்கப்பட்டு நீராட அனுமதிக்கப்படும் கிணறு வேள்விடைத் தீர்த்தம், பால் கூபம் என்றழைக்கப்படுகிறது. திருஞான சம்பந்தருக்கு வெள்ளடை மகாதேவர் இதில் கங்கையைத் தோன்றச் செய்து அருளியதால் அன்று மட்டும் இதன் நீர் வெண்ணிறமாய்த் தோன்றுமாம்!
முதலாம் குலோத்துங்கன், முதலாம் இராஜேந்திரன், விக்கிரம சோழன் காலத்தைச் சார்ந்தக் கல்வெட்டுகளிலிருந்து பலரும் மானியங்கள் நிபந்தங்கள் ஏற்படுத்தியத் தகவல்களை அறிய முடிகிறது.
ராஜகோபுரம் கிடையாது. நுழைவாயிலின் இடது பக்கம் மண்டபத்தின் மேல் வலது புறம் விநாயகர், இடது பக்கம் சுந்தரர், சம்பந்தர் கொலுவிருக்க, நடு நாயகமாக ரிஷபாரூடராயர் அம்மையும், அப்பனும் அருள்புரிகின்றனர்.
முதலில் வருவது நீண்ட திறந்த வெளி மண்டபம். அடுத்து கற்களால் மேற்கூரை வேய்ந்த மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என அமைந்துள்ளது. மகா மண்டபத்தின் வலது பக்கம் நடராஜர் - சிவகாம சுந்தரி. விமானத்துடன் கூடிய மிகவும் சிறிய கருவறைச் சன்னிதிகள். நின்ற கோலத்தில் அம்பிகை தெற்கு நோக்கியும், இறைவன் கிழக்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர். புராண சம்பவங்களைச் சித்தரிக்கும் சிலை வடிவங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. மாடக்குழி அதாவது பிறை மாடங்களில் சூரியன், சந்திரன், பைரவர் முதலான தெய்வங்கள். கருவறையில் வெள்ளடை நாதர் சதுர வடிவப் பீட மொன்றில் சிறிய பாணலிங்கமாய் எழுந்தருளியுள்ளார்.
ஈசன் சன்னிதி கோஷ்டத்தில் உள்ள விநாயகர் சிரசின் மீது குடையும், ஒரு ஜோடி சாமரங்களும் அலங்கரிக்கின்றன. கந்தவேள் வழக்கத்துக்கு மாறாக, தட்சிணாமூர்த்தி போன்று தெற்கு நோக்கியவாறு வள்ளி, தெய்வானை சமேதராய்க் காட்சியளிப்பது விசேஷம். அதனால் இவரைக் ‘கல்லால மரத்து தேவ’ராகக் கருதி, வியாழன் தோறும் சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர். அர்த்தமண்டபத்தில், சீர்காழி சட்டைநாதர், லிங்கோத்பவர், பிரம்மா, எட்டு கரங்கள் கொண்ட துர்கை, விஷ்ணு-மோகினி ஆகியோரின் சிலைகளையும் மாடங்களில் தரிசிக்க முடி கிறது. உற்சவர் சோமாஸ்கந்தர்.
வைகுண்ட நாதன், கரியமாணிக்கப் பெருமாள் என்ற நாமத்துடன் தனிச் சன்னிதி கொண்டுள்ளார். முன்கோபத்துக்குப் பெயர்போன துர்வாச மகரிஷி, அதிசயமாய்ச் சிரித்த முகத்துடன் இடது கரத்தில் ஏட்டுச் சுவடியுடனும், வலது கரத்தில் சின்முத்திரை துலங்க தோற்றமளிக்கிறார்! இங்கு உறையும் காவியங் கண்ணி அம்மன் ‘சுகப் பிரசவ நாயகி’ என அழைக் கப்படுகிறாள். கர்ப்பிணிகள் அம்பாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அதையே பிரசாதமாக எடுத்துச் சென்று உபயோகித்தால் சுகப் பிரசவமாகிறது என்பது பலரின் அனுபவம்.
காவிரிக் கரையோரம் அமைந்துள்ள சிவாலயங்களைத் தன் அடியார்களுடன் தரிசித்தவாறு யாத்திரை மேற்கொண்ட சுந்தரர், ஒரு சமயம் இந்த வடகால் கிராமத்தை அடைந்தார். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இருந்த ஸ்ரீரிஷபேஸ்வரர் ஆலயம் கண்களுக்குப் புலப்படாததால் கடந்து சென்று விட்டார். சிறிது தூரம் சென்றதும், அவர்களுக்கு பசி வாட்டியது.
நீர் பருக அலைந்தும் பயனில்லை.
அப்போது ஒரு முதியவர், என் குடிலில் தினமும் வழிப்போக்கர்களுக்கு அன்னமிட்டு வருகிறேன். இன்று இதுவரை எவரும் வராமல் இப்போதுதான் தாங்கள் வந்துள்ளீர்கள். நான் இடும் கட்டமுதைப் புசித்து என்னைக் கௌரவப்படுத்துமாறு விண்ணப்பித்துக் கொள்கிறேன்" எனக் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று அனைவரும் வயிறார உண்டு அங்கேயே சிறிது நேரம் இளைப்பாறினர். சுந்தரர் உண்ட களைப்புத் தீர கண் அயர்ந்தார். திடீரென விழித்துக் கொண்டவர், அவ்விடத்தில் அன்னதானம் நடந்ததற்கான எவ்வித அறிகுறியும் தென்படாததால் வியப்படைந்தார். அந்த முதியவரையும் காணவில்லை. சுந்தரருக்கு விளங்கி விட்டது.
சுந்தரர் மனமுருக இறைவனை வேண்ட, உமையொருபாகன் காட்சியளித்து, ஆலயம் இருக்குமிடத்தைக் கோடி காட்டி அங்கு வருமாறு அழைத்தார். சுந்தரர் ஆலயம் சென்று, வேள்விடைநாதரைத் தொழுது, ‘பாடுவார் பசி தீர்ப்பாய்...’ என்ற பதிகம் பாடிப் பரவினார்.
இந்நிகழ்வு நடந்த தினம் சித்ரா பௌர்ணமி நன்னாள். ஈசன் அன்னமிட்ட இடமாகக் கருதப்படுவது திருக்கடாவூரிலிருந்து தென் திருமுல்லைவாயில் செல்லும் வழியில் சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. அது ‘வரிசைப் பற்று’, ‘இடமணல்’ என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. அங்கு ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை ஆகியிருப்பதைக் காணலாம்.
சித்ரா பௌர்ணமி நாளில் வெள்ளடை நாதர் சுந்தரருக்குக் கட்டமுது இடும் நிகழ்ச்சி இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று அனைவருக்கும் தயிர்ச் சாதமும், நீரும் அளித்தால் அளப்பரிய உணவுத் தானியங்கள் நமக்குக் கிடைக்க ஸ்ரீவெள்ளடைநாதர் அருள்புரிவார் என்பது நம்பிக்கை!
செல்லும்வழி:
சீர்காழியிலிருந்து 6 கி.மீ.மினி பஸ் வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 10.30 வரை. மாலை 5 மணி முதல் 7.30 வரை.


Comments