ஸ்ரீரமணார்ப்பணம்!

குளிர் மிகுந்த டிசம்பர் மாதத்தில், உலகின் பல பகுதிகளில் பல மகான்கள் பிறந்திருக்கிறார்கள். பரத கண்டத்தில், தேவர்கள் கண் விழிக்கும் மாதம் மார்கழி. உன்னதமான காலம். மனிதர்களின் மன வெப்பம் நீக்கிக் குளிர்விக்க, அங்கே அற்புத பிறப்பு நிகழ்ந்தது.
உதவி செய்ய வந்த பெண்களில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவள் பல குழந்தைகள் பெற்றவள். பல குழந்தைப் பேறு பார்த்தவள். ஆனால், அவளுக்கு அப்போது கண் பார்வை மிகவும் மங்கியிருந்தது. ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு, மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தாள். அந்த மூதாட்டியின் அனுபவம், மற்ற பெண்களுக்கு உதவியாக இருந்தது.
கண்பார்வை இல்லாததால், அந்தக் கிழவியின் மனம் முழுவதும் அந்தக் குழந்தைப் பிறப்பின் மீதே இருந்தது. நல்லபடியாக சிசு வெளியே வரவேண்டுமே என்ற கவலை இருந்தது.
குழந்தை பிறந்ததும், அதை அந்த மூதாட்டியின் கைகளில் கொடுத்தார்கள். உடனே பளிச்சென்று அந்த மூதாட்டிக்குக் கண்கள் தெரிந்தன. எதிரில் இருப்பது குழந்தையா, பெரும் ஒளியா என வியந்தாள். இத்தனை இருட்டில் ஒரு குழந்தை இத்தனைப் பிரகாசமாக இருக்கிறதே, எப்படி என்று ஆச்சரியப்பட்டாள். பிறந்த குழந்தையை 'மகான்' என்று சிறிது நேரத்தில் ஜாதகமும் சொல்லியது.
இரண்டாம் வீட்டில் புதன், சுக்கிரன், ஐந்தில் குரு, மிக மிக விசேஷம். ஞானவான் பிறந்திருக்கிறான் என்பதற்கு அடையாளம். ஐந்தாம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருவின் ஆதிக்கம், மிக மிக உயர்ந்த மனிதன் என்பதை நிரூபிக்கும். ஆனால், சுந்தரமய்யர் வீட்டுக்கு ஒரு சாபம் இருந்தது. உண்ண உணவும், படுக்க இடமும் கேட்ட ஒரு துறவியைப் பல தலைமுறைகளுக்கு முன்னால் விரட்டி அடித்ததால், அந்த வம்சத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் யாரோ ஒருவர் துறவியாகப் போவார் என்ற விதி இருந்தது. அதுபற்றி அப்போது யாரும் கவலைப்படவில்லை.

சுந்தரமய்யருக்கு குலதெய்வம் வேங்கடரமண சுவாமி என்பதால், குழந்தைக்கு வேங்கடராமன் என்று பெயர் வைத்தார்கள். குழந்தை கொழுகொழுவென்று இருந்தான்; துடியாக வளர்ந்தான். 'என்ன பாட்டு... என்ன ஆட்டம்... என்ன துள்ளல்..! கொஞ்ச நேரம் சும்மா இருக்கமாட்டேன் என்கிறானே!' என்று தாய் அன்போடு அலுத்துக்கொள்ள, சீரும் சிறப்புமாக வளர்ந்தான்.
அதே ஊரிலுள்ள மன்னர் சேதுபதி பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். இடுப்புத் துண்டும், வெறும் மார்பும், சிலேட்டும், பலப்பமுமாய் பிள்ளை பள்ளிக்கூடம் போவது பார்க்கப் பரவசமாயிருந்தது.
'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டா'
பிள்ளை மற்ற மாணவர்களோடு கைகட்டி உரக்கப் பாடம் சொல்வது, கேட்க ஆனந்தமாக இருந்தது. ஊர் முழுவதும் அந்தக் குழந்தையின் புகழை ஓதப் போகிறது; அந்தக் குழந்தையின் அருள் மொழியைக் கேட்கப் போகிறது; உலக மக்கள் எல்லாப் பொல்லாங்கையும்
உதறிவிட்டு அதன் காலடியில் அமைதியை, ஆனந்தத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை ஊரோ, அந்தக் குழந்தையின் பெற்றோரோ அறியவில்லை.
''டேய்... கப்பல் பண்ணலாமாடா! கத்திக் கப்பல் பண்ணி தண்ணில
விடலாமாடா?''
''கெட்டிப் பேப்பர் வேணும்டா!'' - நண்பன் கேட்டான்.
வேங்கடராமன் ஓடிப்போய் மேஜையின் மீது நாற்காலி போட்டு, மேஜையிலிருந்து நாற்காலிக்கு ஏறி, பரண் மீதிருந்த ஒரு கட்டுக் காகிதத்தை எடுத்துக் கீழே போட்டான். சுற்றியுள்ள சணலைப் பிரித்து, நாலைந்து காகிதங்களை உருவி, மடமடவென்று மடித்துக் கிழித்து இரட்டைக் கப்பல், கத்திக் கப்பல், வெறும் கப்பல், பாய்மரக் கப்பல் என்று பலதும் செய்தான். எடுத்துக் கொண்டு கோயில் குளத்துக்கு ஓடினான். மெல்லிய காற்றில் அலையும் நீரில், கப்பல்கள் ஆனந்தமாய் பிரயாணம் செய்தன.
அது வீட்டுப் பத்திரம். ஸ்டாம்புப் பேப்பர். கெட்டியான தாள்கள். நன்கு பயணித்தன.

''அவனைச் சட்டைத் துணியைக் கழட்டிட்டு, ஊரை விட்டு போகச் சொல்லு! அவன் வீட்டுக்குள்ளே வரப் படாது. அது இன்னொருத்தர் வீட்டுப் பத்திரம். நான் என்ன பதில் சொல்வேன்?'' - சுந்தரமய்யர் விஷயம் தெரிந்து உரக்கக் கத்தினார். வேங்கடராமன் மிரண்டு, வெளியே ஓடிப் போய், காணாமல் போனான்.
மாலை வந்தது. இரவு நெருங்கிற்று. வேங்கடராமனைக் காணோம் என்று வீடு தேடிற்று. அக்கம்பக்கத்திலுள்ளோர் தேடினார்கள். விஷயம் கேள்விப்பட்டு, ஊர் முழுவதும் இங்கேயோ, அங்கேயோ என்று அலைந்தது.
கோயிலில் அன்று கூட்டமில்லை. சுவாமிக்கு அர்த்தஜாம பூஜை முடித்துவிட்டு, அம்பாளுக்கு நைவேத்தியம் முடித்து விளக்குத் தூண்டிவிட்டபோது, அம்பாளின் பின்பக்கம் ஏதோ அசைவு கேட்க, சிவாச்சார்யருக்குத் திக்கென்றது. துள்ளிக் குதித்து வெளியேறி, 'யாரது' என்று குரல் கொடுக்க, வேங்கடராமன் முகம் எட்டிப் பார்த்தது.
''கன்னுக்குட்டி! இங்கேயா இருக்கே! ஊர் முழுக்க உன்னைத் தேடறதேடா அம்பி! உங்கம்மா இரண்டு தடவை கோயிலைச் சுத்தி வந்துட்டாளே... பாவம், அழறாடா! இங்கே என்ன பண்றே?''
''அப்பா அடிப்பா!''
''அதுக்குப் பயந்து ஒளிஞ்சிண்டிருக்கியா? ஒளியறதுக்கு இதுவா இடம்?''
அந்த கன்னுக்குட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு வந்து வீட்டில் சேர்த்தார் சிவாச்சார்யர்.
எல்லாம் வல்ல இறையிடம் அடைக்கலம் புக வேண்டும் என்கிற உணர்வு வேங்கடராமனுக்கு அந்த வயதிலேயே, அவன் அறியாமலேயே ஏற்பட்டுவிட்டது.
வேங்கடராமன் மேற் படிப்புப் படிக்க திண்டுக்கல் போனான். முதலில் ஆட்டம், பிறகுதான் படிப்பு என்கிற நியதிதான் அவனுக்கு இருந்தது. பிரபஞ்சத்தின் ஆட்டத்தை உற்றுப் பார்ப்பவருக்குப் படிப்பு எதற்கு என்பதுதான் பிற்காலத்தில் நியதியாயிற்று.
விளையும் பயிர் முளையிலே என்பது உண்மையான வாக்கியமாயினும், முளைத்த பயிரை உற்றுப் பார்க்க எல்லோருக்கும் தெரியாது. முளைவிட்ட பயிரும் தன்னை யாரென்று காட்டாது.
எல்லாக் குழந்தைகளையும்போல வேங்கடராமன் உற்சாகத்துடன் ஓடியாடினான். நல்ல திடகாத்திரனாய் இருந்ததால், எல்லா விளையாட்டுகளிலும் மும்முரமாய் ஈடுபட்டு ஜெயித்தான். அவன் இருக்கும் பக்கம் சேர்ந்துகொள்ள, பையன்கள் ஆசைப்படுவார்கள். கட்சி பிரிக்கின்றபோது, ''என்னைச் சேர்த்துக்கடா, என்னை சேர்த்துக்கடா'' என்று கெஞ்சுவார்கள்.
திருச்சுழியில் ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு திண்டுக்கல் நகராட்சி பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தான். திண்டுக்கல் இன்னும் பெரிய ஊர். அங்கும் பல நண்பர்கள் சேர்ந்தார்கள்.
திண்டுக்கல்லில், குறுநில மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை ஒன்று இருந்தது. அதற்கு 'ஊமையன் கோட்டை' என்று பெயர். ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பெரும் கலவரம் கொடுத்த அந்த ஊமையன், அந்தக் கோட்டையிலிருந்து ஆட்சி செய்து வந்தான். அந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் முற்றுகையிட்டபோது, சுற்றுச்சுவரில் ஒரு துளையிட்டுத் தப்பித்துவிட்டான். அந்தக் கோட்டைக்குள் நுழைய வேங்கடராமன் தன் நண்பர்களுடன் போனபோது, காவலர்கள் உள்ளே விடவில்லை. சுற்றுச்சுவர் ஏறிக் குதித்து உள்ளுக்குள்ளே போய் விளையாடி, காவலர்கள் கவனித்துத் துரத்தும்போது ஊமையன் தப்பித்த சிறிய துவாரம் வழியாகவே வேங்கடராமனும் மற்ற பையன்களும் வெளியேறினார்கள்.
அப்படி வீரதீரமான செயல்களால் நண்பர்களிடையே வேங்கடராமன் புகழ் ஓங்கிற்று. எத்தனைக்கெத்தனை உற்சாகமாக விளையாட்டு இருந்ததோ, அத்தனை அளவு உறக்கமும் இருந்தது. ஒரு விசேஷத்துக்குப் போவதற்காக, அவனைப் படிக்கச் சொல்லி வீட்டில் இருக்க வைத்துவிட்டு, அவன் காவலிருப்பான் என்று வீட்டிலுள்ளவர்கள் வெளியேறினர். அவர்கள் வெளியேறியதும் வேங்கடராமன் சிறிது நேரம் படிப்பதுபோல் இருந்துவிட்டு, பிறகு புத்தகத்தை மூடி வைத்து ஜன்னல் கதவு, வாசற்கதவு, பின்கதவு எல்லாவற்றையும் தாளிட்டு மூடினான். பாய் விரித்துப் படுத்தான். உறங்கிப் போனான். விசேஷம் முடிந்து வீட்டிலுள்ளவர்கள் வந்து பல்வேறு விதமாகக் குரல் கொடுத்தும், கதவு தட்டியும், ஓசை எழுப்பியும் வேங்கடராமன் எழுந்திருக்கவில்லை.
அது மனம் ஒருமித்த உறக்கம். உடலே இல்லாத, மனமே இயங்காத ஆழ்ந்த உறக்கம். வெளியே சென்றவர்கள் ஏதோ ஒரு விதமாக வீட்டுக்குள் நுழைந்து, அவனை உலுக்கி எழுப்பினார்கள்.
உடம்பு எடுத்த காரணத்துக்காக உறங்க வேண்டிய நேரத்தையெல்லாம் இளமையிலேயே ஒட்டுமொத்தமாய் உறங்கிவிட்டு, ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு உறங்காமலேயே அறிதுயிலில் ஆழ்ந்து கிடக்கின்ற அற்புதம் நிகழப் போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
'கும்பகர்ணா', 'தூங்குமூஞ்சி' என்று அந்தச் சிறுவனைக் கடிந்து கொண்டார்கள். தூக்கம் வீட்டில் மட்டுமல்ல; வகுப்பறையிலும் வந்தது. தூங்கினால் காது திருகி, தலையில் குட்டி, ஆசிரியர் எழுப் புவார், அவமானப்படுத்துவார் என்பதால், குடுமியின் நுனியில் நூல் முடித்து, அந்த நூலை எடுத்து சுவரிலுள்ள ஆணியில் மாட்டிவிட்டு வேங்கடராமன் படித்துக்கொண்டிருப்பான். தூங்கி வழிந்தால், சட்டென்று குடுமி இழுபடும். விழித்துக்கொள்வான். எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தூங்க முடியும் என்கிற வரப்பிரசாதம் இளம் வயதில் அவனுக்கு இருந்தது.
திண்டுக்கல்லில் இருந்தபோதுதான், வேங்கடராமன் தன் தந்தையை இழந்தான். திண்டுக்கல்லிலிருந்து திருச்சுழி வந்து மரணப் படுக்கையில் இருந்த தந்தையைச் சந்தித்தான். தந்தையின் மரணம், அந்தத் தாக்கம் அவனுக்குள் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்தியது. தந்தையின் அகால மரணம் குடும்பத்தைச் சிதறடித்தது.
தாய் திருச்சுழியிலும், அண்ணனும் தங்கையும் பெரியப்பா வீட்டிலும், நாகசுவாமி என்கிற தமையனும் வேங்கடராமனும் மதுரையிலுள்ள சித்தப்பா சுப்பையர் வீட்டிலும் தஞ்சம் புகுந்தார் கள். சித்தப்பாவும் சித்தியும் மிக ஆதரவாகக் குழந்தைகளை அரவணைத்துக் கொண்டார்கள்.
ஆனால், எவர் ஆதரவுமின்றி இறை மட்டுமே துணையாக வேங்கடராமன் வாழப் போகிறான் என்று அப்போது எவருக்கும் தெரியவில்லை

Comments