உடையவர்

உயிர்க்குலம் அனைத்துக்குமான காருண்யத்தை, தமக்குள்ளே நிரப்பிக் கொண்டு உலாவிய ஆசார்ய மகாபுருஷர், உடையவர்! அரங்கத்தில் அரவணையில் பள்ளி கொண்ட அரங்கநாதனின் திருவாக்காக, ஸ்ரீமத் ராமானுஜருக்கு அமைந்த திருநாமம் இது!
என் பகவான், என் கடவுள் என்று சொல்லிக் கொள்வதில், எல்லாருக்குமே ஒரு ஆனந்தம், பிடிப்பு, நிறைவு இருக்கிறது. ஆனால், அந்த பகவான், ‘தம்முடையவன்’ என்று நம்மைக் குறிப்பிடுகிறானா? அப்படிச் சொல்லும் வகையில் நம் எண்ணமும், பேச்சும், செயல்களும் இருக்கிறதா? இதற்கு, ‘ஆமாம்’ என்று சொல்லும் வலிமை, நமக்கு இருக்கிறதா?
ஆனால், பகவானே ராமானுஜரை ‘உடையவர்’ என்று அழைத்தான் என்றால், அந்தச் சொல்லுக்குள்ளே இருக்கிற சூட்சுமம் என்ன? பகவானிடம் இல்லாத - வேறு எது அவரிடம் இருக்கிறது? திருக்குறுங்குடி பெருமாளான நம்பி, அவரிடம் நெற்றிக் கோடு (திருமண்) இட்டுக்கொள்ள நேரில் வந்தது எதனால்?
இப்படியெல்லாம் நமக்குள் தோன்றும் கேள்விகளுக்கு விடையளிக்கிறது குருகீதை.
அநேக ஜன்ம ஸம்ப்ராப்த கர்மபந்த விதாஹினே |
ஞானானல ப்ரபாவேன தஸ்மை ஸ்ரீ குரவே நம: || (75)
நம்முடைய பிறப்புக்குக் காரணமானவை வினை முடிச்சுகள். அவை ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும் வரை, நம் பிறவி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அந்த வினை முடிச்சுகளை, குரு அவிழ்ப்பதில்லை; மாறாக, தம்முடைய தவாக்னியால் அவற்றை எரித்து இல்லாததாக்குகிறார். அதனால், பக்தன் கர்ம பந்தத்தில் இருந்து விடுபட்டு, சுலபமாக பகவானை அடையச் செய்கிறார்.
பகவானிடம் காப்பாற்றுதல், தண்டித்தல் என்கிற இரண்டு நிலைகள்தான் உண்டு. ஆனால், ஆசார்யர்கள் தம் அளப்பரிய காருண்யத்தால், பக்தர்களை மேம்படுத்தி பகவானின் அருளுக்கு உரியவராக்கு கிறார்கள். பலாப்பழத்தின் தோல் நீக்கி, பிசின் அகற்றி, கொட்டையை விலக்கி சுளையை தேனில் தோய்த்து ஊட்டும் அன்னையின் மனோபாவம் இது!
தம் அடியார்களிடம் காணப்படும் கோபம், பொறுமையின்மை, சஞ்சலம், சந்தேகம், ஆசை, சபலம்... என்ற குணக்கோளாறுகளை விலக்கி, சீராக்கி, நேராக்கி, பகவானிடம் சேர்ப்பிக்கிறார்கள் ஆசார்யர்கள். இந்த குணக்கோளாறுகள் நீங்குவ தாலேயே, பகவானைப் பற்றிய ஞானம் வசப்பட்டு விடுமா? அதற்கும் பதில் சொல்கிறது குருகீதை.
அக்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன சலாகயா |
சக்ஷீருண்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குருவே நம: || (59)
கண்ணில் புரை. விழித்திரையில் ஏற்பட்டுள்ள அந்தப் படலத்தை, அறுவை சிகிச்சை செய்து அகற்று கிறார்கள் மருத்துவர்கள். மறைப்பு நீங்கியதும், விழித் திரையில் வெளிச்சம் படிக்கிறது. பார்க்கின்ற பொருள்களின் வடிவம் தெரிகிறது. இது மருத்துவம்.
இதேபோல, அக்ஞானம் என்கிற படலம், நம் மனத்தை, அறிவை மூடியிருக்கிறது. அதை ஞானம் என்னும் மையைப் பூசி, அகற்றுகிறார் ஆசார்யர். இதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. ‘மை’ என்பதும் கருப்புதான். ஆனால், இது அருள்! அதனால்தான், பகவான் கார்வண்ணமாக, மழைவண்ணமாக கரிய திருமேனியனாக தோற்றமளிக்கிறான் என்பதும் புரிகிறது.
அப்படி, தம் அடியார்களுக்கு ஞானமளித்து வழிப்படுத்துவதாலேயும், ‘உடையவர்’ என்கிற சொல்லால், அளப்பரிய காருண்யமே வடிவாக உடையவர் என்கிற சூட்சுமத்தை உணர்த்துகிறான் அரங்கன். இதுமட்டு மல்ல; இன்னும் பல திருநாமங்கள் உண்டு இவருக்கு.
இளையாழ்வார்: ஆதிசேஷனின் அம்சமாக, 1017ல், சித்திரை மாதம், சுக்லபக்ஷ வளர்பிறை, பஞ்சமி திதி, வியாழக்கிழமை, திருவாதிரைத் நட்சத்திரம், கடக லக்னத்தில் அவதரித்தவர் ஸ்ரீ இராமானுஜர். அவதார ஸ்தலம் ஸ்ரீபெரும்பூதூர். தாய்மாமன் பெரிய திருமலை நம்பி இவருக்கு சூட்டிய பெயர் இளையாழ்வான்.
எதிராஜன்: ஸ்ரீ இராமானுஜர் துறவு மேற்கொள்ள முடிவு செய்தபொழுது, காஞ்சி வரதராஜப்பெருமாளே, ‘வாரும் எதிராஜரே’ என்று அழைத்தார்.
இராமானுஜன்: மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோயில் ஆசார்யர்களில் ஒருவரான பெரிய நம்பி இராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்தார். அப்பொழுது, அவர் இட்ட திருநாமம் இராமானுஜன்.
எம்பெருமானார்: அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்த திருக்கோஷ்டியூர் நம்பி, ‘இதைப் பிறருக்குச் சொல்லாதே. சொன்னால் உனக்கு நரகம்’ என்றார். ஆனால், இவரோ தான் ஒருவன் நரகம் போனாலும், கேட்கும் ஆசையுடைய எல்லாரும் கேட்டு நற்கதி பெறட்டுமே என்று, அந்த மந்திரத்தை எல்லோர்க்கும் அருளினார். அதையறிந்த நம்பி, உடையவரை வாரி அணைத்து, ‘நீர் சாட்சாத் அந்த எம்பெருமானேதான்’ என்று கூற, இராமானுஜர் எம்பெருமானார் எனப்பட்டார்.
பாஷ்யகாரர்: பிரம்ம சூத்ரத்துக்கு விசிஷ்டாத்வைத வழியில் இராமானுஜர் விரிவுரை எழுதினார். அந்த விரிவுரைகளைக் கேட்ட ஸ்ரீ சரஸ்வதிதேவி, இவருக்கு ‘ஸ்ரீ பாஷ்யகாரர்’ எனும் திருநாமம் சூட்டினார்.
திருப்பாவை ஜீயர்: அக்காலத்தில் துறவிகள், தாம் உண்பதற்குப் போதுமான உணவுப் பொருட்களை, மாதுகாம் அல்லது உஞ்சவிருத்தி எனப்படும் முறையில், வீதிகளில் ‘உபநிஷத்’களைச் சொல்லிக் கொண்டு செல்வர். அதேபோன்று இவர் உபநிஷத்தின் சாரமான திருப்பாவையைச் சொல்லிக்கொண்டு செல்வார். இதனால் ‘திருப்பாவை ஜீயர்’ என்று திருநாமம் உண்டானது.
கோயில் அண்ணன்: திருமாலிருஞ்சோலை ஸ்ரீ சுந்தரராஜனுக்கு நூறு தடா அக்கார அடிசிலும், நூறு தடா வெண்ணெயும் சமர்ப்பிப்பதாக பிரார்த்தனை செய்து கொண்டாள் ஆண்டாள். ஸ்ரீ இராமானுஜர் அழகர் கோயிலுக்கு வந்து, ஸ்ரீ ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றினார். அதனால், ஸ்ரீ ஆண்டாள் தன் விக்ரக ரூபத்திலேயே, ‘வாரும், என் அண்ணன் அல்லவோ’ என்று அழைத்தாள். அதனால், ‘கோயில் அண்ணன்’ என்று திருநாமம்.
இப்படி நாமமாயிரம் கொண்டு திகழ்பவர் ஸ்ரீமத் ராமானுஜர் என்ற போதிலும், உடையவர் என்கிற திருநாமமே அனைத்திலும் மேம்பட்டு விளங்குகிறது. பகவான் ‘உடையவர்’ என்று அவரைக் குறிப்பிட்டதால் மட்டும் அல்ல; ‘நம்மை உடையவர்’ என்று அவரிடம் நாம் சரணாகதி செய்வதால். பகவானுக்கு நெற்றிக்கோடு இட்டவர், நமக்கு பற்றுக்கோடாய் விளங்குகிறார் - தம்முடைய அர்ச்சாவதார திருமேனியில்!


Comments