புராணங்கள் சொல்லும் செய்தி

“முருகன் என்று சொன்னால் ‘அழகு’ என்ற ஒரு பொருள் இருப்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். அழகான பொருட்களை எல்லாம் முருகன் என்றே கொள்ளலாம். இயற்கை முருகனுடைய வடிவம், அழகான குழந்தைகளிடத்தில் முருகனைப் பார்க்க முடியும். அருணகிரி நாதரிடத்தில், திருமுறை ஆசிரியர்களிடத்தில் நாம் முருகனை பல்வேறு விதமாகப் பார்க்கலாம்” என்றார் தம் சொற்பொழிவில் முனைவர் கோ.ப.நல்லசிவம்.
“இறைவன் இசை வடிவமாய் இருக்கிறார். சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் குறிப்பிடுவார், ‘ஏழிசையாய், இசைப் பயனாய்’ என்று. எனவே, இசையாகவும், இசையின் பயனாகவும் இருக்கக்கூடிய இறைவனை இசையால் வழிபாடு செய்தார்கள் நம் முன்னோர்கள். தமிழால் இறைவனைப் பாடுவது என்பதே முழுமையான வழிபாடு.
இறைவன் எப்படிப்பட்ட மனதிலே குடிகொண்டிருக்கிறானாம்? இறைவனின் புகழ்பாடும் மனதில் குடிகொண்டிருக்கிறானாம். நாவுக்கரசர் நமது ஒவ்வொரு செயலுக்கும் இதுதான் பயன் என்று ஒரு பட்டியல் தருகிறார். என்ன பயன்? ‘கோயிலை தூய்மைப்படுத்தினால் இன்பம் பெருகிடும்; இறைவனுக்கு தூய மலர்கள் கொண்டு மாலை தொடுத்தால், மோட்சம் கிடைக்கும்; கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றினால் நல்ல ஞானம் கிடைக்கும்; இறைவனின் புகழ் பாடுபவர்களுக்கு இறைவன் இந்தளவுக்கு அருள் செய்வான் என்று சொல்வதற்கு என்னிடத்தில் அளவில்லை’ என்கிறார் அவர்.
தேவாரத்தை தயவு செய்து படிக்காதீர்கள்; பாடுங்கள். எதற்கெடுத்தாலும் குழம்பிக் கொண்டு இருக்கிறோம் நாம். இதைச் செய்யலாமா? அதைச் செய்யலாமா? இப்படிச் செய்யலாமா? அப்படிச் செய்யலாமா? என நாம் குழம்புவதை நிறுத்த வேண்டும் என்றால், அதற்குப் பாட்டு பாட வேண்டும். தமிழின் இன்னொரு பெயரே எளிமைதான். தமிழை கற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்க்கையே எளிமை, இனிமை தான். தமிழின் இன்னொரு அர்த்தம் அன்பு. தமிழ் கடவுளான முருகன் அன்பு வடிவானவன். அன்பை நம்மால் வெளிப்படுத்த முடியுமே தவிர, அதற்கு ஒரு வடிவம் தர முடியாது. அதற்கு ஒரு வடிவம் தந்தோ மேயானால் அதுதான் முருகன்.
தூய்மையான இடத்தில்தான் முருகன் இருப்பான். நம் மனதை நாம் மாசில்லாமல் வைத்திருந்தோமேயானால், அங்கே முருகன் வந்து விடுவான். நம் மனம் என்பது செம்மையாக இருக்க வேண்டும். கந்த புராணம் எதைச் சொல்கிறது என்றால், நாம் நன்றி மறக்கக் கூடாது என்பதைச் சொல்லித்தரும் ஒரு இலக்கியமாகவே கந்த புராணம் இருக்கிறது. புராணம் என்றால், புராதானமானது, பழமையானது என்று பொருள். முருகப்பெருமானின் பழைமையைச் சொல்வது கந்த புராணம்.
சரி; கந்தன் என்றால் என்ன? கந்து என்றால் ஒன்றைப் பற்றி கொள்வது என்றும் உலக உயிர்களுக்கு பற்றுக் கோடாக இருக்கக் கூடியவன் கந்தன் என்றும் பொருள்படும். கொம்பு கொடியை நோக்கி வராது.
கொடிதான் கொம்பை நோக்கிச் செல்ல வேண்டும். குளிர்காலத்துல நாமதான் நெருப்பைத் தேடிப் போய் கதகதப்பை தேடிக்கணுமே தவிர, எங்கேயோ இருக்கற தீ நம்மகிட்ட வந்து, ‘இந்தாங்க என்கிட்ட வந்து குளிர்காயுங்க’ன்னு சொல்லாது. அது இருக்கும் இடத்தில்தான் இருக்கும். இறைவன் என்பவனும் அப்படித்தான். நாம்தான் போய் அவனைப் பற்ற வேண்டும்.
இவர்கள் வேண்டியவர்கள், இவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு இறைவனுக்குக் கிடையாது. அதனாலதான் சூரபத்மனை கூட அவன் கொல்லவில்லை. சம்ஹாரம் என்பதன் பொருள் அழிப்பதல்ல; தீமையை அழித்து தீயவனை மனமாற்றம் செய்வது. பூஜை பண்ணும்போது ஒரு குழந்தை ஓடி வந்து சாப்பாட்டை எடுத்தா நாம என்ன பண்ணுவோம்? ‘இங்கு சாப்பிடக்கூடாது. பூஜையை முடிச்சிட்டு சாப்பாடு கூடத்துல உட்கார்ந்து சாப்பிடு’ என அந்தக் குழந்தையை மன மாற்றம் செய்வதைப் போல,சூரன் என்ற உடலில் ஆணவம் வெளிப்படுகிறது.
அதிலிருந்து அந்த உயிரைப் பிரித்து, சேவலாகவும், மயிலாகவும் மாற்றும்போது அவனது ஆணவம் அழிந்து அவன் முருகனின் கொடியாகவும், வாகனமாகவும் மாறுகிறான்.
மன மாற்றம் செய்யும்போது அது நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. தத்துவத்தை எளிமைப்படுத்தி கொடுக்கும் வேலையைத்தான் புராணம் செய்கிறது. ‘சத்யம் வத’ என்கிற வார்த்தை வேதத்தில் வரும். உண்மையின் பெருமையை சொல்ல வந்த புராணம்தான் ஹரிசந்திர புராணம். ‘தர்மம் சர’ அதாவது, தர்மம் வெல்லும் என்பதை சொல்ல வந்தது தான் மகாபாரதம். ஆணவம் என்ற ஒன்று வந்துவிட்டால் போதும்; மற்றவையெல்லாம் பின்னாலேயே வந்துவிடும். ஆணவம் இருந்தால் அவன் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் அழிந்து விடுவான் என்கிற செய்தியை கந்த புராணம் நமக்குச் சொல்கிறது.”

Comments