‘கருப்பூரம் நாறுமோ...’

கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!
'சூடத்தைக் கொளுத்தாதீர்கள்’ என்றோ, 'கற்பூரம் ஏற்றாதீர்கள்’ என்றோ கோயில்களில் அறிவிப்புப் பலகையைப் பார்த்தால், ஒரு நிமிடம் துணுக்குறவே நேர்கிறது. கற்பூரத்தால் காற்று மாசுறும் காலம் ஒன்று நேர்ந்துவிட்டதே என்பதால் வருகிற துணுக்!
கருப்பூரம் என்பது சூடமா அல்லது சமையலுக்கு உதவும் பச்சைக் கற்பூரமா என்பது போன்றது அல்லாது, ஒருவேளை வெற்றிலை வகையோ என்ற ஐயமும் தோன்றாமல் இல்லை. கற்பூர வெற்றிலை பற்றிக் கேள்விப்பட்டது போலவே, உண்ணும் உணவும் தின்னும் வெற்றிலையும் வைணவத்தில் இருப்பதை அறிவேன். எனக்குப் பொதுவாக கருப்பூரம் என்றால் சூடமேதான்.
சூடம் ஏற்றுவதற்குத் தடை சொல்லாத, அதனாலேயே கற்பூர ஆரத்தியும் காணுகின்ற பேற்றை அருளும் திருத்தலம் ஒன்றுக்கு, 2001ம் ஆண்டில் சென்றிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. தெற்கே திருநெல்வேலிக்குப் பக்கத்தில், ஏதோ ஓர் ஊரில், ஏதோ ஒரு பெருமாள் கோயில் அது. ஏதோ ஓர் ஊர் என்பதை ஏதோ ஓர் ஊர் என்றே எடுத்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு பெருமாள் என்பதனை அதிகம் சிந்திக்காதீர்கள். பெத்தபெருமாள் பெற்ற பெயர்கள் அனந்தம்; அனேகம்! அழகுமிகு பெயர்களுக்கோர் அலகுமில்லை!

அப்போது, எனது திருமணப் புதிதான காலமும் கோலமும். நானும் மனைவி சாந்தியும் கோயிலுக்குச் சென்றிருந்தோம். ஆலயத்துக்கு வெளியிலேயே சிறு பாலித்தீன் பாக்கெட்டில் பொதியப்பட்டிருந்த கற்பூரக் கட்டியையும் வாங்கிக்கொண்டாயிற்று.
சந்நிதானத்தில் சாந்நித்யத்தின் முன்னால் நானும் மனைவியும் நிற்கிறோம். மேலும் சில நபர்கள். கர்ப்பக் கிரகத்தினுள் ஏற்றிய சுடர், கடவுளுடைய மூக்கின் கல் முனையில், காலத்தினாலும் கருணையினாலும் தோய்ந்ததாய்ப் பளபளக்கிறது. கற்பூரச் சுடரின் அருகில் மேலும் தகதகக்கப் போகிற வதனம் இது. கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளியே வந்த அர்ச்சகரின் தட்டில் சூடத்தை வைப்பதற்காக, கற்பூரம் இருந்த பாக்கெட்டை பல்லால் கடித்துப் பிய்த்துவிட்டேன். சூடத்தை சிறை மீட்டு அர்ச்சகரிடம் கொடுக்கப்போக, அவர் அதைக் கோபமாக மறுத்துவிட்டார். 
அவ்வமயம் 'செய்யாதன செய்யோம்’  எனச் சொன்ன ஆண்டாளது வாக்கினை மறந்துவிட்டேன். அர்ச்சகரை விடவும் கோபமாக கோயிலில் இருந்து வெளியே வந்துவிட்டேன், மனைவியையும் இழுத்துக்கொண்டு!
துணுக்கென்றால் திகைத்தலும், முணுக்கென்றால் முன்கோபித்தலும் அப்போது என் இயல்பு! குணமாக இருந்ததெல்லாம் கொதிப்பாக மாறுவதற்கு, ஓரிரு தசாப்தங்களை எடுத்துக் கொள்கின்றன (ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் மேலே தொடர வேண்டாம்).
சாமி முன்னர் நிறுத்தி, வழிபடுவதற்குமுன் வெளியேற்றிக் கூட்டி வரும் கணவனை மனைவி கேள்விக்குறியுடன் பார்க்கிறாள். கோபம், ஆதங்கம், ஏக்கம், அங்கலாய்ப்பு, துயரம், திகைப்பு என அறுவகை பாவங்களுடன் மனைவி என்னை ஏறிட்டுப் பார்க்கிறாள். நானும் உடனடியாக ஏதும் விளக்கம் சொல்லவில்லை. எனக்கு ஏனோ, செய்யாதன செய்யாத ஆண்டாளை விட, சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே பிடித்திருந்தது; பிடித்திருக்கிறது!
சூடத்தின் பாக்கெட்டை கடித்ததும், அர்ச்சகர் மறுத்ததும், நான் வெளியேறிய தாகப்பட்டது கடவுளரிடம் கொண்ட திருவூடல். வெளிறிப் போவதற்கு முன்பே வெளியேறிவிட்டேன். கடித்தெடுத்துக் கையில் வைத்த கற்பூரம் இன்னும் காற்றில் கரைந்திருக்கவில்லை. தான் சூடி அழகுப் பார்த்துத் தண்ணொளிக்கும் மலர்மாலைகளை ஆண்டாளிடம் ஏற்கிற திருமால், அறியாமற் கடித்துச் சூடம் பிரிக்கும் அற்பனின் சூடத்தை ஏற்கமாட்டாரா என்பதுதான் எனது கேள்வி.

ஆனால் பாருங்கள், அர்ச்சகர்களிடமும் மனைவிகளிடமும் பேசி ஜெயிக்கமுடியாது.பக்தி என்பது, சூடம் போன்று நிறைய பூடகங்கள் கொண்டதே! சொல்லியும் விளக்க முடியாது; விளக்கியும் சொல்ல முடியாது.
அயோடினை இந்த அறிவியல் ஆட்டத்தில் இருந்து கழித்துவிட்டு, கற்பூரத்துக்கு வருவோம். தனிமங்களிலேயே அயோடினும் கற்பூரமும்தான் பதங்கமாதல் (சப்ளிமேஷன்) என்னும்  தன்மையைக் கொண்டிருப்பவை. அதாவது, ஒரு திடப்பொருள் அடுத்து திரவ நிலையினை அடைந்துவிட்டு, அப்புறம்தான் வாயு நிலைக்குச் செல்லவேண்டும். ஆனால், திட நிலையிலிருந்து அப்படியே வாயு நிலைக்கு மாறும் தகவினை சூடம் பெற்றிருக்கிறது.
லௌகீகத்தை டச்சே செய்யாமல் பரம்பொருளின் பாதமடைதல் என்னும் நற்கதி பற்றை பலரும் அவாவுறவே செய்வார்கள். இருப்பினும், ஆண்டவன் என்னவோ 'அனுபவம் என்பது நம்மைப் பிறிதொன்றுடன் சம்பந்தப்படுத்திக் கொள்வது’ என விதித்திருக்கிறார். 'அனுபவம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு இவ்வளவு சிறிய, சிறப்பான விளக்கத்தை நான் அசோகமித்திரனின் எழுத்து வாயிலாகப் படித்தேன்.
ஒரு தமிழ்ச் சங்கக் கூட்டத்தில், ஆகாசவாணி ரேடியோக்காரராகவும், எழுத்தாளராகவும் புகழ்பெற்ற சுகி சுப்பிரமணியன் அவர்களின்  மகனைச் சந்தித்தேன். அவர் ஒரு சொற்பொழிவாளர். பக்தி மட்டுமல்லாது இலக்கியம், அறிவியல், தேவையான லௌகீகம் என அவர் பேசுவதால், தமிழ்நாட்டின் வெற்றிகரமான பேச்சாளர்களில் ஒருவர் அவர்.
மாணிக்கவாசகர், புதுமைப்பித்தன், நக்கீரன், ஜெயகாந்தன் என அவருடனான பேச்சு செல்லும் பாதை விதவிதமாக இருக்கும். அப்படித்தான் ஒருநாள் ஆண்டாள் பற்றியும், ஆண்டாளின் 'கருப்பூரம் நாறுமோ’ பாட்டு பற்றியும் பேச்சு வந்தது. இலக்கியம் என்று வந்தால் பேச்சு என்ன... பெரும்பாலும் சிலாகிப்புதான்!

தமிழின் சொற்கடல், அதாவது 'சொல் ஆழி’ தருகிற சாத்தியங்களில் ஒன்றாகத்தான் இந்தப் பாடலில், 'ஆழியில் உதித்த சங்கே நீ சொல்!’ என சொல்லாழியும் பயின்று வருகிறது.
அவருடன், இந்தப் பாடலின் அழகு பற்றிப் பேசுகையில், எனக்கு இருபது வயதுகளை ஒட்டின பருவமாகையால், திருப்பவளச் செவ்வாய் பற்றிப் புன்முறுவலுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு அந்நாட்களில் கோயமுத்தூர் வாசம் என்பதால், கொங்குச் சொற்செட்டும் நன்றாக வரும்.
'தமிழ்ல அழகு சொல்லுதல்னு இருக்கு. திருமாலின் வாய்ச்சுவை என்னன்னு தெரிஞ்சுக்க ஆண்டாள் ஆசைப்படறா. அதை அவனுக்கு நெருக்கமானவங்ககிட்டதான் கேக்க முடியும். அவனோட சுதர்சனச் சக்கரத்துக்கு திருமாலைப் பத்தித் தெரியாதா என்ன? ஆனா, ஆண்டாள் ஏன் சங்கு கிட்ட கேக்கறாள்னா, அதுதான் அவனோட எச்சிலுக்கும் எயிற்றுக்கும் நெருக்கமான உதட்டுல உக்காந்திருக்கு. யார்கிட்ட எதைக் கேக்கணும்னு தெரியணும். அதான் தமிழ். அதுதான் திருமொழி. வாழ்க்கையோட தத்துவமும் சூட்சுமமும்கூட!'
'சரிதானுங்க நீங்க சொல்றது' என, நான் உடனடியாக ஒப்புக் கொண்டேன். இதை ஒப்புக்கொள்ள, உதட்டிலிருந்து வரும் உயிர்க் காற்று சங்குக்குள் கமகமாகிச் சுழியும் கணநேரமே போதுமானதாயிருந்தது.

Comments