பரிமுகன் இருக்க பயமேன்?

ஹயக்ரீவர் என்று சொன்னால், குதிரை முகம் கொண்டவர் என்று பொருள். ‘வெள்ளைப் பரிமுகன்’ என்று சொல்வார் ஸ்வாமி தேசிகன். பரிமுகன் என்றால் - பரிந்த முகம், பரிகின்ற முகம், பரியப்போகும் முகம் என்று மூன்று காலங்களிலும் பக்தர்களுக்குப் பரிவுடன் அருள்பவன் என்று அர்த்தம். இந்தப் பெருமானை வழிபடுவதால், கல்வியில் கூர்மையான கவனம், நல்ல ஞாபக சக்தி, புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கலைகளில் ஆற்றல் ஆகியவை மேம்படும். அம்பிகையை வழிபடும் ஸ்ரீவித்யா வழிபாட்டு முறையில் குருவாக விளங்கு பவர் இந்த ஹயக்ரீவர்.
சென்னையில் நங்கைநல்லூர், சென்னைக்கு அருகே உள்ள செட்டி புண்ணியம், புதுச்சேரி, கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இவருக்குத் தனிக்கோயில்கள் உண்டு. மாத்வ சம்பிரதாய ஆசார்யரான வாதி ராஜருக்குப் பிரத்யட்ச மூர்த்தி இவர். இவருக்கு ஆசார்யர் சமர்ப்பித்த ‘ஹயக்ரீவ பிண்டி’பிரசித்தமான நிவேதனம்.
ஸ்ரீ ஹயக்ரீவரை துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரங்களில் ஒன்று ஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம்.
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம்
நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷீத
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரிவேதி யோவதேத்
தஸ்ய நிஸ்ஸரதேவாணீ ஜன்ஹீகன்யாப்ரவாஹவத்
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி
விசோபதே ஸ வைகுண்ட கவாடோத்காடனக்ஷம
ச்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவ பதாங்கிதம்
வாதிராஜயதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்
‘ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவ என்று சொல்லும் பக்தர்களைவிட்டு பாவம் பட்டென்று விலகும்; கங்கை பிரவாகம் போல் வாக்கு வன்மை உண்டாகும்; வைகுண்டத்தின் கதவைத் திறக்கும் சக்தியும் உண்டாகும்’ என்கிறார் இந்த ஸ்லோகத்தை அருளிய ஸ்ரீ வாதிராஜ ஸ்வாமிகள்.
இந்தப் பரிமுகப் பெருமானின் திருவருள், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; அவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும்; விரும்பியபடியே மேல்நிலைகளை அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில், சென்னை மயிலாப்பூரில் சித்திரைக்குளம் அருகே உள்ள தேசிகன் சன்னிதியில் விசேஷ வழிபாடுகள் நடைபெற்றன.
கடந்த  இரன்டு தினங்களாக நடந்த இந்த நிகழ்ச்சியில், முதல்நாள் 49 கலசங்கள் வைத்து பூஜித்து ஸ்ரீ ஹயக்ரீவருக்கு அபிஷேகமும், மறுநாள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை லட்சார்ச்சனையும் நடைபெற்றன. வந்திருந்த மாணவர்களுக்குப் பிரசாதமும், பூஜிக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்த ஹயவதன மூர்த்திக்கு தேனபிஷேகம் செய்தும், ஏலக்காய் மாலை சமர்ப்பித்தும், நெய் தீபம் ஏற்றியும் வழிபடுவது மிகச் சிறந்த பலனைத் தரும்.
வ்யாக்யா முத்ராம் கரஸரஸிஜை புஸ்தகம் சங்கசக்ரே
பிப்ரத் பிந்ந ஸ்படிக ருசிரே புண்டரீகே நிஷண்ண: |
அம்லாந ஸ்ரீ: அம்ருத விசதை: அம்சுபி: ப்லாவயந்மாம்
ஆவிர்பூயா தநகமஹிமா மாநஸே வாகதீச: ||
‘ஞானமுத்திரை, சுவடி, சங்கு, சக்கரம் ஆகிய வற்றை நன்கு திருக்கரங்களிலும் தாங்கி, ஸ்படிகம் போன்ற திருமேனி துலங்க, செந்தாமரை மீது வீற்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்ற வாக்கின் அதிபதியான ஹயக்ரீவர், என்னுடைய மனத்திலும் எழுந்தருளி என்னை ரட்சிக்கட்டும்’ என்பது இதன் பொருள். இந்தத் துதியை தினமும் 12 முறை சொல்லி வந்தால், அந்த ஹயக்ரீவர் உங்கள் மனத் தடாகத்தில் எழுந்தருள்வார்; உங்களை வெற்றியை நோக்கிச் செலுத்துவார். இது நிச்சயம்.


Comments