வேதநாராயணர்

பல்லவர்களும், பாண்டியர்களும், சோழர்களும் பெரும் ஆலயங்கள் கட்டியது மட்டுமல்ல; அவை முறையாகப் பராமரிக்கப்படுவதற்கும் அங்கே இறைபணி செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் ஆலயங்களைச் சார்ந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கும் உரிய வாழ்வாதாரத்தையும் உருவாக்கினார்கள். இதற்கான சான்றுகளை கல்வெட்டுக்களாக பல ஆலயங்களில் காண முடிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலுகாவில் உள்ள ஆனூர் வேதநாராயணர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுக்கள் இந்த வகையில் மற்றுமொரு சாட்சியாக இருக்கின்றன. திருநாட்டு பெருகசன் மற்றும் ஈசானன் ஆகியோர் பெருமாளின் திருப்பள்ளி எழுச்சியின்போது இசைக் கருவிகள் வாசிக்க நியமிக்கப்பட்டிருப்பதாக இந்தக் கோயிலில் உள்ள முதலாம் ராஜராஜன் காலத்து கல்வெட்டு சொல்கிறது. அது மட்டுமா? வேதம் கற்பிக்கும் பண்டிதர்களுக்கு உணவு உற்பத்திக்கு நிலம், மாணவர்களுக்கு மானியம், நிலம், கோயிலில் விளக்குகள் எரிய, பூஜை செய்ய வருமான ஆதாரத்தை உருவாக்க நிலங்கள் என்று ஏராளமான நிலங்கள் தவிர, மானியங்கள் இந்தக் கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்டிருப்பதாக முதல் மற்றும் இரண்டாம் ராஜராஜன் காலத்து கல்வெட்டுக்கள் சொல்லுகின்றன.
வேதநாராயணர் கோயிலில் மட்டுமல்ல; இங்கேயுள்ள அட்டபுரீஸ்வரர் மற்றும் கந்தசாமி கோயிலும், கல்வெட்டுக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. இந்தப் பகுதிகளில் காணப்பட்ட பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் மூலம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே ஆனூரில் மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் தெரிவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். பதிமூன்றாம் நூற்றாண்டில் இந்த ஊர் ‘சித்திரமேழி விண்ணகரம்’ என்றும் அழைக்கப்பட்டது. முதலாம் ராஜராஜன் சாளுக்கிய மன்னனான சத்தியாசிரியனை வென்றதன் நினைவாக இந்த ஊருக்கு ‘சத்தியாசிரிய குலகால சதுர்வேதி மங்கலம்’ என்னும் பெயர் இருந்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. மேலும், ஆனியூர், ஆதியூர் என்றும் இது குறிப்பிடப் பட்டிருக்கிறது.
வேதநாராயணராக பெருமாள் இங்கு அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருப்பதற்குப் புராண வரலாறும் சொல்கிறார்கள். வரபலம் பெற்ற மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள் பிரம்மாவின் கையிலிருந்த வேதத்தைப் பிடுங்கிக் கொண்டு சென்று விட்டார்கள். பிரம்மா, பெருமாளிடம் முறையிட, அவர் அந்த இரு அசுரர்களையும் கொன்று, வேதத்தை மீட்டெடுத்து மீண்டும் பிரம்மா விடம் ஒப்படைத்தார்.
அதுவரையில் பிரம்மா, ஆனூரில் ஒற்றை முகத்துடன் யாகம் வளர்த்துக் கொண்டிருந்தார். பெருமாள், இங்கு பிரம்மாவுக்குக் காட்சியளித்து வேதத்தை ஒப்படைத்ததால் வேத நாராயணராகக் காட்சியளித்து வருகிறார். ஆனூருக்கு அருகில் இருக்கும் திருக்கழுக் குன்றத்தில் இருக்கும் நான்கு மலைகளும், நான்கு வேதங்களைக் குறிப்பதாக ஐதீகம். இந்த மலைத் தொடர்களுக்கு வேதகிரி என்றும் பெயர் உண்டு.
கிழக்கு நோக்கிய கோயில். கோயிலுக்கு வெளியே கல்தூண் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. மூலவர் வேதநாராயணர் அமர்ந்த நிலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார். ‘வேத முதல்வன் விளங்கு புரிநூலன், பாதம் பரவிப் பலரும் பணிந்து’ என்று ஒரு பாசுரத்தில் சொல்லியிருப்பார் திருமங்கை ஆழ்வார். நின்ற கோலத்தில் அசத்தும் அழகோடு, தேவியர் இருவருடன் நிற்கும் உற்சவர் பெருமாளை பார்க்கும்போது அந்த ஆழ்வாரின் பாசுரம் மனதில் ஓடுகிறது.
பெருமாள் ஒருமுறை அருகில் உள்ள பாலாற்றில் தீர்த்தவாரிக்குச் சென்று மண்டபத்தில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பக்தருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஆற்றுப் படுகையில் குறிப்பிட்ட இடத்தைத் தோண்டச் சொல்லியிருக்கிறார். தோண்டினால் பள்ளத்தில் மற்றொரு வேதநாராயணர் சிலை. மூலவரைப் போல நகலாக இருக்கிறார். ‘ஆஹ்வான’ முத்திரையுடன் காணப்பட்ட அந்த பெருமாள் பல்லவர் காலத்தவர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சற்று சிதிலமடைந்து காணப்பட்ட அந்தச் சிலை இப்போது கோயில் முன் மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
நாள் முழுதும் வேத கோஷங்கள் முழங்கிய இந்தக் கோயிலின் இன்றைய நிலை அன்பர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். கோயில் விமானம் முழுவதும் புதராய் செடிகள். கர்பக்கிரக சுவர்களில் வெடிப்புகள். மரங்களின் வேர்கள் அர்த்த மண்டபத்தின் சுவர்களில் இறங்கி எந்த நேரத்தில் சுவர் விழுந்து விடுமோ என்று நமக்கு படபடக்கிறது.
கோயில் வளாகம் முழுவதும் முட்களும், செடிகளாகவும் இருக்கின்றன. பிராகாரத்தை சுற்றி வர முடியாத நிலை. கோயிலின் மேற்கல் கூரை, நிறைய இடை வெளிகளுடன் இருப்பதால், மழை காலத்தில் உள்ளேயும் மழை பெய்கிறது.
கோயிலுக்குத் திருப்பணி நடந்து நூறு ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். ஆனால், கடந்த முறை திருப்பணி நடந்தபோது கல்வெட்டு சுவர்கள் முறைப்படி பாதுகாக்கப்படாததால், அவைகள் வரிசை மாறி கட்டுமானம் செய்யப்பட்டு விட்டன. இதன் காரணமாக பல கல்வெட்டுக்கள் தலைகீழாகக் காட்சியளிக்கின்றன. இதனால் ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஒழுங்குபடுத்திப் படிப்பதற்குள் திணறிப் போய் விடுகிறார்கள்.
கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆழ்வார்கள், ராமானுஜர், தும்பிக்கை ஆழ்வாழ் சிலைகள், சரியான பூஜையின்றி பராமரிப்பு இல்லாமல் சுவர் ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. வில்லும் அம்பும் ஏந்திய கோதண்டராமர் சிலை ஒரு பக்கம் வைக்கப்பட்டிருக்கிறது. பெருமாளுக்கு எதிரில் கருடர் மட்டும் உரிய இடத்தில் இருக்கிறார்.
இந்தச் சூழலில், ஆறுதலாகச் சொல்லப்படும் ஒரே விஷயம், ஒரு கால பூஜை நடைபெறுகிறது என்பது தான். பல நல்ல உள்ளங்களின் உதவி காரணமாக சிதிலமடைந்த பல தலங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்டவர்களின் பார்வை ஆனூர் பக்கம் திரும்பவும் வேதநாராயணர் பாதம் பணிவோம்.
தொடர்புக்கு: 0 95510 66441

Comments