திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம்-1

மிழ் என்னும் ஸ்ருதியும், தண்பொருநை நதி என்னும் லயமும் இணைந்து இசை பாடும் திருத்தலம் திருக்கோளூர். 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்வியதேசங்களில் ஒன்றான திருக்கோளூர் திருத்தலத்தை மங்களாசாசனம் செய்யும் நம்மாழ்வார், 'இத்திருத்தலத்தை எல்லோரும் விரும்பி வந்து சேருவார்கள்’ என்று மகிழ்ந்து போற்றுகிறார்.
ஸ்ரீ மன் நாராயணனின் சேனைமுதல்வரான விஷ்வக்சேனரின் அம்சமாக அவதரித்தவரே நம்மாழ்வார். திருக்கோளூருக்கு அருகில் அமைந்திருக்கும் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் தம்முடைய மங்களாசாசனத்தில்,
'உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணமாய் என் இளமான் புகுமூர் திருக்கோளூரே!’
என்று ஒரு தாயின் நிலையில் தம்மை இருத்திக்கொண்டு  பாடியிருக்கிறார்.
'தலைவனாகிய கண்ணனிடம் காதல் கொண்டவளாக, என்னை விட்டுப் பிரிந்து சென்ற என் மகள், அவனுடைய கல்யாண குணங்களையும், அவன் அருள் வளமுடன் வாழும் ஊரையும் கேட்டு அறிந்துகொண்டு சென்றுவிட்டாள். அப்படி இளம் மானைப் போன்ற என்னுடைய செல்வ மகள் சென்று தன் புகுந்த வீடாகக் கொண்ட அந்த ஊர் திருக்கோளூர்தான் என்பதை நான் அறிந்துகொண்டேன்.’

இப்படி நம்மாழ்வாரால் போற்றப்பட்டு இருக்கும் திருக்கோளூர் திருத்தலத்தை விட்டு எவரேனும் வெளியேற விரும்புவார்களா?
ஒரு பெண்ணுக்கு அப்படி ஓர் எண்ணம் தோன்றியது என்று சொன்னால், நமக்குச் சற்று வியப்பாகத்தான் இருக்கிறது. அதேநேரம், அந்தப் பெண் மனத்தில் எழுந்த இந்த எண்ணம் காரணமாகவே நமக்கு அற்புதமான ஒரு பக்தி இலக்கியமும் கிடைத்திருக்கிறது. அதுதான் 'திருக்கோளுர் பெண்பிள்ளாய் ரகசியம்’.
இந்த ரகசியம் வெளிப்பட்ட சம்பவம்,ஸ்ரீ ராமாநுஜரின் காலத்தில், அவருடைய முன்னிலையில்தான் நடந்தது. ரகசியம் வெளிப்பட்டாலும்கூட, அது மறைபொருள் கொண்டதாகவே திகழ்கின்றது.
ராமாநுஜருக்கு நம்மாழ்வாரிடத்தில் தனி ப்ரீதியும் பக்தியும் இருந்தது. காரணம், தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே பல திவ்வியதேச பெருமாள்களின் தரிசனம் கிடைக்கப்பெற்று, மங்களாசாசனம் செய்த பெருமைக்கு உரியவர் நம்மாழ்வார் மட்டுமே! அவர் அவதரித்த ஆழ்வார்திருநகரி திருத்தலத்தை தரிசித்து வணங்கிய பின்னர் ராமாநுஜர், 'எல்லோரும் விரும்பிப் புகும் ஊர்’ என்று நம்மாழ்வாரால் போற்றப் பெற்ற திருக்கோளூருக்குச் செல்கிறார்.
அவர் திருக்கோளூர் திருத்தலத்தில் பிரவேசிக்கப் போகும் அதே வேளையில், ஒரு பெண் அந்த ஊரில் இருந்து வெளியேறிச் செல்வதைப் பார்க்கிறார். அதைக் கண்டு வியப்புற்றவராய் ஸ்ரீ ராமாநுஜர்  அந்தப் பெண்ணிடம், ''பெண்ணே, நீ எந்த ஊரைச் சேர்ந்தவள்? இந்த ஊருக்கு வருவதற்கே மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்படி இருக்க, ஏதோ ஓர் ஊரில் இருந்து உன்னுடைய புண்ணியத்தின் பயனாக, எல்லோரும் விரும்பி வந்து சேரும் இந்த ஊருக்கு வந்துவிட்டாய். தொடர்ந்து இங்கேயே வசிக்காமல் ஊரைவிட்டு வெளியே செல்ல என்ன காரணம்?'' என்று கேட்கிறார்.
அதற்கு அந்தப் பெண், ''ஐயனே, தாங்கள் நினைப்பதுபோல் நான் ஏதோ ஓர் ஊரில் இருந்து இங்கு வந்து சேரவில்லை. நான் பிறந்ததும் வளர்ந்ததும், திருவும் பெருமையும் மிகுந்த இந்த ஊரில்தான். ஆனால், எல்லோரும் விரும்பிப் புகும் இந்த ஊர், எனக்கு மட்டும் ஆகாத ஊர் ஆகிவிட்டது. அதனால்தான் இந்த ஊரை விட்டு வெளியே போகிறேன்'' என்கிறாள்.
''வந்து சேரும் எல்லோரையும் வாழவைக்கும் இந்த ஊர் உனக்கு மட்டும் ஆகாத ஊர் ஆனது எப்படி''? என்று எம்பெருமானார் கேட்க,''ஸ்வாமி, தாங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால், வந்தார் எல்லோருக்கும் நவநிதிகளையும் தந்து அவர்களை வாழவைப்பதுடன், நிறைவான மோட்சத்தையும் அவர்களுக்கு அருளும் வைத்தமாநிதி பெருமாள் கோயில் கொண்டிருக்கும் இந்தத் திருக்கோளூர் திருத்தலத்தில் வாழ்வதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?'' என்று கேட்டவள், தொடர்ந்து...
''நான் அக்ரூரரைப்போல் அழைத்து வருவேன் என்று சொன்னேனா? அநசூயைபோல் பெருமானுக்குத் தாயாகி நின்றேனா? குசேலனைப்போல் அவல்பொரிதான் தந்தேனா?'' என இப்படியாக மறைபொருள் செறிந்த 81 வாக்கியங்களைக் கூறுகிறாள்.
''இப்படியெல்லாம் எதுவும் செய்திராத நான் இந்த ஊரில் வசிப்பதற்குத் தகுதியானவளாக எப்படி இருக்கமுடியும்? தகுதி இல்லாத என்னுடைய இருப்பின் காரணமாக இந்த பவித்ரமான க்ஷேத்திரம் தன்னுடைய புனிதத்தை இழந்துவிடக்கூடாது அல்லவா? அதனால்தான் நான் இந்த ஊரை விட்டு வெளியே செல்கிறேன்'' என்கிறாள்.
கல்வியறிவு பெறுவதற்குத் தகுதியற்றதாகக் கருதப்பட்ட ஒரு குலத்தில் பிறந்த அந்தப் பெண் உதிர்த்த இந்த மகா வாக்கியங்களைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்துபோனார் ராமாநுஜர்.
''பெண்ணே, நீ சொல்லிய ஒவ்வொரு வாக்கியமும் மறைபொருள் கொண்ட மகா வாக்கியம் அல்லவா? இத்தனை பெரிய விஷயங்களை சர்வசாதாரணமாக எடுத்துச் சொன்ன உன்னைத் தவிர, இந்த ஊரில் வசிப்பதற்குத் தகுதியானவர் வேறு யார் இருக்க முடியும்? இந்த ஊரில் வசிப்பதற்கான அத்தனை தகுதியும் உனக்கு உண்டு; உனக்கு மட்டுமே உண்டு!'' என்று அவளுக்கு ஆறுதல் கூறியதுடன், அவளுடைய வீட்டுக்கும் எழுந்தருள்கிறார்.வெளியில் எங்கும் சாப்பிடும் வழக்கம் இல்லாத ராமாநுஜர் அன்றைக்கு அந்தப் பெண் அன்புடன் பரிமாறிய உணவை ஏற்றுக்கொண்டு, அவளுக்கு ஆசிகள் கூறிச் செல்கிறார்.
திருக்கோளூரில் வசிப்பதற்கான தகுதி தனக்கு இல்லை என்பதை விளக்கும் விதமாக ராமாநுஜரிடம் அந்தப் பெண் கூறிய அந்த 81 மகா வாக்கியங்களே, 'திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம்’ என்னும் பக்தி இலக்கியம் ஆகும்

Comments