அங்காளபரமேஸ்வரி

அங்காளபரமேஸ்வரி என்றதும் நம் நினைவுக்கு வருவது மேல்மலையனூர். இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் அம்பாளுக்கு நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தைக் காண பெருந்திரளான பக்தர்கள் திரள்கிறார்கள். குறிப்பாக, ஆடி மற்றும் தை அமாவாசை தினங்கள் இங்கு மிக விசேஷமானவை. அதேபோன்று, மாசி மாதத்தில் நடைபெறும் மயானக் கொள்ளை நிகழ்ச்சியும் விசேஷமானது.
சரி; மயானக் கொள்ளையின் வரலாற்றைக் கொஞ்சம் காண்போம். ஒரு காலத்தில் சிவபெருமானைப் போலவே பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் ஆணவம் கொண்ட பிரம்மாவின் ஒரு தலையை சிவபெருமான் கொய்துவிட, ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. தவிர, கொய்யப்பட்ட பிரம்ம கபாலமும் சிவபெருமானின் கரங்களில் ஒட்டிக் கொண்டது. பிரம்மனின் தலை கொய்யப்பட்ட கோபத்தில் சரஸ்வதி தேவி, கொடிய ரூபத்துடன் பூவுலகில் அலையும்படி அன்னை பார்வதிக்கு சாபம் கொடுத்தாள். பூமியில் பல தலங்களிலும் அலைந்து திரிந்த பார்வதி, இறுதியாக மலையனூர் வந்தாள். ஈசன் அங்கே பிகை்ஷ பாத்திரத்துடன் வர, அவர் கரங்களில் இருந்த பிரம்ம கபாலத்தில் பார்வதி தேவி உணவிட்டாள். உணவை போடப் போட கபாலம் அதை விழுங்கிக் கொண்டேயிருந்தது.
அப்போது, அங்கே வந்த மகாலட்சுமியின் ஆலோசனைபடி, மேலும் இரு கவள உணவை பார்வதி தேவி கபாலத்தில் இட, அது ஆவேசமா அதை உண்டது. மூன்றாவது கவளத்தைக் கை தவறியதுபோல் அன்னை பார்வதி கீழே போட, உணவின் சுவையில் வயப்பட்ட கபாலம் அதை உண்ண சிவபெருமானின் கரத்தைவிட்டு கீழே விழுந்தது.
அப்போது அன்னை பார்வதி, அங்காளபரமேஸ்வரியாக அவதாரங் கொண்டு பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடைய முடியாதபடி அதைத் தமது காலால் மிதித்து பூமியில் ஆழ்த்தி விட்டாள். அதோடு, சிவபெருமானைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது. இந்நிகழ்வின் அடிப்படையிலேயே பெரும்பாலான அங்காளபரமேஸ்வரி கோயில்களின் சார்பில் இந்நிகழ்வு நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
அன்று பக்தர்கள் தங்கள் தோட்டம், வயல்களில் விளைந்த காய்கறி மற்றும் உணவுப்பொருட்களைக் கொண்டு வந்து அகோர பசியோடிருக்கும் ஈசனுக்குப் படைத்து வழிபடுகிறார்கள்.
மலையனூர் அங்காளபரமேஸ்வரி அன்னையின் திருநாமம் மற்றும் புற்றுமண் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட கோயில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள கொமாரபாளையத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், அனைத்து அங்காள பரமேஸ்வரி கோயில்களிலிருந்தும் மாறுபட்டுத் திகழ்கிறது. எப்படி? அனைத்து அங்காளபரமேஸ்வரி ஆலயங்களிலும் மாசி அமாவாசை நாளில் நடைபெறும் மயானக் கொள்ளை விழா, இத்தலத்தில் நடத்தப்படுவதில்லை என்பதுதான்.
கம்பீர அழகோடுகூடிய கோயில் ராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் வசந்த மண்டபத்தின் முன்பு கருப்பராயரும், பேச்சியம்மனும் துஷ்ட சம்ஹார மூர்த்தங்களாக விஸ்வரூப கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். கன்னிமூலையில் விநாயகப்பெருமான், முருகப்பெருமான், நாகருக்கு சன்னிதிகள். இவை தவிர, மகாமண்டபத் தூண்களில் அஷ்ட லட்சுமிகளின் ரூபங்கள், இறையம்சத்தோடு கலைநயமும் கலந்து காட்சியளிக்கின்றன.
கருவறையில் கண்களில் கருணை பொழிய, சாந்த சொரூபிணியாக அன்னை அங்காளபரமேஸ்வரி. நான்கு கரத்தினள். முன் இரு கரங்களில் கத்தி, கபாலம்; பின் இரு கரங்களில் சூலம், உடுக்கை விளங்க, பிரம்ம கபாலத்தை மிதித்தபடி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.
இத்தலத்தில் அன்னை அமர்ந்ததே ஒரு அற்புத நிகழ்வு. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தீவிர பக்தர்கள் நால்வர், தாங்கள் வசிக்கும் மைசூரில் அம்பாளுக்கு ஓர் கோயில் எழுப்பத் தீர்மானித்தார்கள். அதோடு அன்னையின் திருவுருவச் சிலையை மலையனூரிலேயே வடித்து, அம்பாளின் சக்தி அம்சமான புற்றிலிருந்து மண் எடுத்து வந்து கோயிலை நிர்மாணிக்கவும் முடிவு செய்தனர்.
அதன்படி மலையனூர் சென்று அம்பாளின் சிலை மற்றும் புற்றுத் திருமண்ணோடு மைசூர் நோக்கிப் பயணமானார்கள். செல்லும் வழியில் கொமாரபாளையம் பவானி நதிக்கரையில் சந்தியா வந்தனம் செய்ய எண்ணி சிலையையும், புற்றுமண்ணையும் வைத்துவிட்டு நீராடச் சென்றனர்.
நித்ய கர்மாக்களை முடித்த பக்தர்கள் திரும்பி வந்து சிலையை எடுக்க முயல, அது அசைய மறுத்தது. நால்வரும் சேர்ந்து எவ்வளவோ முயற்சித்தும் அது முடியாமல் போனது. வானமே விதானம், வையகமே கருவறையாகக் கொண்டு அன்னை பரமேஸ்வரி அங்கேயே அமர்ந்து அருள்பாலிக்கத் தொடங்கி விட்டாள். அம்பாளின் திருவுள்ளம் அறிந்து, அந்நால் வரும் அன்னைக்கு முறைப்படி வழிபாடு செய்து, அங்கு சிறிய ஆலயம் ஒன்றையும் எழுப்பினர்.
இத்தலத்து அம்பாள் மூன்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு குலதெய்வமாக வழிபடப்படுகிறாள். அன்னையின் திருநோக்காலும், பக்தர்களின் பங்களிப்புடனும் சிறிய அளவில் இருந்த இக்கோயில் எழிலுடன் விரிவுபடுத்தப்பட்டு 2000-ம் ஆண்டு குடமுழுக்குக் கண்டது.
அம்பிகை இத்தலத்தில் நந்திவாகினியாக அருள்பாலிக்கிறாள். அன்னை இத்தலத்தில் சாந்த சொரூபமாகக் காட்சியளிப்பதால் இங்கு உயிர் பலிகள் ஏதும் கொடுக்கப்படுவதில்லை. சாத்வீக பூஜைகளும், வழிபாடுகளுமே இந்த ஆலயத்தில் நாம் காணும் சிறப்பு.
மகாசிவராத்திரி, சித்திரா பௌர்ணமி, அதையொட்டி 108 பால் குட அபிஷேகம், லலிதா சகஸ்ர நாம வழிபாடு, வைகாசி திருவிழா, ஆடி மாத வெள்ளிக் கிழமைகள், புரட்டாசி யாகம், ஆறாட்டு ஆகியவை விசேஷ தினங்கள்.

Comments