சுற்றக்கூடாத நவக்கிரகம்

கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் மீன்சுருட்டியிலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் உள்ளது கங்கை கொண்ட சோழபுரம். இங்குள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள நவக்கிரக மண்டபம் மற்ற கோயில்களில் உள்ளது போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய யந்திர வடிவில் எட்டு கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்திருக்க, இத்தேரை அருணன் ஓட்டுகிறான். தேரிலுள்ள பத்து கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகைச் சுற்றி வருகின்றன. எனவே, அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் சுற்ற முடியாதபடி இந்த நவக்கிரக மண்டப அமைப்பு உள்ளது.

மாங்கல்ய பாக்கியம் பெற...
அரியலூர் மாவட்டம், அணைக்கரையில் இருந்து வடமேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோடாலி கருப்பூர் சொக்கநாதர் - மீனாட்சி அம்பாள் திருக்கோயில். இக்கோயில் மீனாட்சி அன்னையின் பாதத்தில் ஒரு கிலோ அரிசியுடன் மாங்கல்ய சரடை வைத்து, வேண்டி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

தசாவதாரத் திருக்கோயில்
அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவிலுள்ளது கோதண்டராமர் கோயில். கோதண்டராமர் கோயில் என்று சொல்லப்பட்டாலும் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாசல பதியே மூலவராக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் பெருமாளின் பத்து அவதாரங்களையும் தசாவதாரச் சிற்பங்களாக மண்டபத் தூண்களில் ஒருசேரக் காணலாம். அம்பரீஷன் எனும் மன்னன் பெருமாளின் தசாவதாரங்களையும் ஒருசேர தரிசிக்க விரும்ப, அவனுக்கு எம்பெருமான் காட்சி தந்த தலம் இது. இன்றும் பறவை வடிவில் இவ்வாலய கோபுரத்தில் அமர்ந்து அம்மன்னன் பெருமாளை தரிசித்து மகிழ்கிறானாம். அதனை குறிக்கும் விதமாக மண்டபத்தின் எதிர்ப்புற கோபுர உள்வாயிலின் மேல் பறவை ஒன்றின் சிலையை வடித்து வைத்திருக்கிறார்கள். திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக இது விளங்குகிறது. பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், துளசி மாலை சார்த்தியும் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


Comments