வெண்குடி வேந்தர்

இமயமலையில் சிவன்- பார்வதி திருமணம் நடந்தபோது முப்பத்து முக்கோடி தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், சப்தரிஷிகள், சூரியர், சந்திரர் என்று சகலரும் அங்கே திரள, வட பகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்து விட்டது. இயற்கை விதிகளுக்கு மாறான இந்த முரண்பாட்டால் ஜனங்களும், உயிரினங்களும் கடும் பிரச்னைகளுக்கு உள்ளானார்கள். மக்களின் சிரமங்களைக் குறைக்க வேண்டும்" என்று சப்த ரிஷிகளும் பரமேஸ்வரனிடம் முறையிட, அவர் அகத்திய ரிஷியை அழைத்தார். உடனடியாக பாரதத்தின் தென் பகுதிக்கு போகுமாறு ஈஸ்வரனால் கேட்டுக் கொள்ளப்பட்டார். பரமனின் கட்டளையை செயல்படுத்தும் விதமாக தென் பகுதியை நோக்கி தனது யாத்திரையைத் துவங்கினார் அகத்தியர். என் திருமணத்தைக் காண முடியவில்லையே என்ற வருத்தம் வேண்டாம். நானும் பார்வதியும் பொதிகை மலையில் திருமணக் கோலத்தில் உமக்குக் காட்சி தருவோம்" என்றார் கைலாயநாதர்.
அகத்தியர் பாரதத்தின் நடுநாயகமான விந்திய மலையைக் கடந்து தென் பகுதிக்கு வர, வடக்கும் தெற்கும் சமன் ஆகத் தொடங்கியது. அகத்தியர் தனது யாத் திரையின்போது எங்கெங்கு தங்குகிறாரோ அங்கேயெல்லாம் சிவலிங்கத்தை வைத்து பூஜிப்பார். அவர் சென்ற பிறகு அது ஒரு திருத்தலமாக மாறிவிடும். அப்படி அகத்தியர் உருவாக்கிய திருத்தலங்களில் ஒன்றுதான் பாலாற்றின் வடகரையில், காஞ்சிபுரத்திலிருந்து பத்து கி.மீ. தொலைவில் உள்ள வெண்குடி. அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்ட ஈசன் அகத்தீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட சிவாலயங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட அகத்தீஸ்வரர் ஆலயங்கள் இருக்கின்றன. ‘அகத்தீஸ்வர தரிசனம் யமயோகி பயம் நாஸ்தி; சிவலோகி நிரந் தரம்’ என்று சமஸ்கிருதத்தில் சொலவடை உண்டு. அகத்தீஸ்வரரை தரிசனம் செய்தால் மரணபயம் நீங்குவது மட்டுமல்ல; கைலாயத்தில் ஒரு இடமும் உண்டாம். பாலாறு பகுதியில் அகத்தியர் யாத்திரை சென்றிருக்கிறார் என்பதைக் குறிக்கும் விதமாக, பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் பிராகார சுற்றுச் சுவரில் அகத்தியரும் சிற்பமாக இருக்கிறார்.
வெண்குடி பல்லவர்களின் படைகள் தங்கிய இடம் என்கிறார்கள். பாலாற்றில் தண்ணீர் எப்போதும் ஓடிக் கொண்டிருந்தபடியால் நூற்றுக்கணக்கான யானைகள் இங்கே முகாம்களில் தங்க வைக்கப்பட்டி ருந்தன. வேழம் (யானை) குடி என்பது காலப்போக்கில் வெண்குடி ஆகியிருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பல்லவர் மற்றும் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில். 1893ல் காஞ்சி மாவட்ட ஆட்சித் தலைவராக ஹட்சன் என்பவர் இருந்தபோது, கோயிலில் திருப்பணிகள் நடந்ததாகப் பதிவு இருக்கிறது. ஆனால், 2005ல் திருப்பணிகள் நடந்தபோது கர்ப்பக்கிரக விமானம் புதுப்பிக்கப் பட்டதில் அது தனது கம்பீரத்தை இழந்து விட்டது.
மூலவர் அகத்தீஸ்வரரை தரிசித்துவிட்டு பிரதட்சணம் வரும்போது கோஷ்டத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கிறோம். தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழ் மூடியிருக்கும் துணியை எடுக்கிறார் குருக்கள். அங்கே ஆச்சர்யம் காத்திருக்கிறது. வழக்கமாக, தட்சிணாமூர்த்தியின் காலடியில் சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், சனகர் ஆகியோரது உருவங்கள்தான் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கே அகத்தியரும், புலஸ்தியரும் காட்சியளிக்கிறார்கள்.
புலஸ்தியர் ராவணனின் தாத்தா. அகத்திய முனிவருக்கும் இந்தத் தலத்துக்கும் தொடர்பு உண்டு என்பதை மேலும் வலுவாகச் சொல்கிறது இந்த சிற்ப அமைப்பு. அம்பாள் காமாட்சி, தனிசன்னிதியில் காட்சி தருகிறார். நவக்கிரக சன்னிதி பிற்காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம். கோயிலின் தலவிருட்சம் வில்வம். திருக்குளம் லட்சுமி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.
சித்தர்கள் பலர் வெண்குடி அகத்தீஸ்வரரை வழிபடுவதற்காக பாலாற்றங்கரையில் தங்கியிருந்ததாகச் சொல்கிறார்கள். கடுவெளிச் சித்தர் என்பவர் தினமும் காஞ்சியிலிருந்து பாலாற்றங்கரை வழியாக வெண்குடிக்கு வந்து அகத்தீஸ்வரரை வணங்கிச் செல்வாராம். இந்த சித்தர் யந்திரம் ஒன்றை லிங்கத்தின் அடியில் ஸ்தாபித்தாராம். இதன் காரணமாக இந்த ஆலயத்தில் ஆன்மிக அதிர்வலைகள் நிறைந்துள்ளதாக பக்தர்கள் சொல்லுகிறார்கள். கடுவெளிச்சித்தரின் சிஷ்யர் பாம்பாட்டிச் சித்தர். கர்ப்பக்கிரக முன் மண்டப தூண் ஒன்றில் பாம்பாட்டிச் சித்தர் காட்சியளிக்கிறார்.
கடுவெளிச் சித்தர் யந்திரத்தை ஸ்தாபித்தது திருவாதிரை நட்சத்திரத்தன்றுதானாம். எனவே, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வழிபட சிறந்த தலம் வெண்குடி என்றும் சொல்கிறார்கள். பாம்பாட்டி சித்தரும் வணங்கி வழிபட்ட தலமாதலால், இந்தத் தலத்தில் வழிபடுவோருக்கு சர்ப்பதோஷ நிவர்த்தியும் உண்டாம்.
நூற்றுக்கணக்கான சிவதலங்கள், ஒரு கால பூஜைக்கே திண்டாடும் நிலையில் வெண்குடி அகத்தீஸ்வரருக்கு இரு கால பூஜை நடக்கிறது என்பது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்தத் தலத்தில் சித்திரா பௌர்ணமியும் பங்குனி உத்தரமும் மிகவும் விசேஷம். காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், அணுகுவதற்கு சுலபமாக அமைந்திருக்கிறது இத்தலம்.
தொடர்புக்கு: சத்தியமூர்த்தி குருக்கள் - 99944 33598

 

Comments