ஹயக்ரீவர் எதிரில் கலைமகள்!

பெரம்பலூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகில் பிரமாண்டமான திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீமதனகோபால ஸ்வாமி. சுமார் 1500 வருடங்கள் பழைமையான இந்தத் திருக்கோயிலை மன்னன் சுந்தரபாண்டியன் கட்டியதாக தல வரலாறு தெரிவிக்கிறது. கோயிலின் கருவறைக்குள் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
புராதனமும் புராணப் பெருமைகளும் வாய்ந்த இந்தத் திருக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது, முகப்பு மண்டபத்தில் வடக்கு நோக்கி அமைந்திருக்கும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சந்நிதி. அவருடைய சந்நிதிக்கு எதிரிலேயே கலைமகளும் சந்நிதி கொண்டிருக்கிறாள். கல்வி, ஞானம் அருளும் இரண்டு தெய்வங்களும்  இப்படி நேருக்கு நேர் பார்ப்பது போன்று சந்நிதி கொண்டிருப்பது, வேறெங்கும் காண்பதற்கரிய விசேஷ அம்சம்!
மடியில் லட்சுமிபிராட்டியார் அமர்ந்திருக்க, சங்கு, சக்கரம், ஜப மாலை, ஓலைச்சுவடி ஆகியவற்றை திருக்கரங்களில் தாங்கியபடி, அருட்கோலம் காட்டுகிறார் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர். பஞ்சமி திதி நாள் இவருக்கு உகந்தது. அன்று தேன், பால், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகித்து, குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டால், கல்வியில் சிறக்கலாம். அதேபோல், ஏலக்காய் மாலை மற்றும் தாமரை மொட்டுகளால் ஆன மாலைகளைச் சமர்ப்பித் தும் வழிபடலாம். மேலும், பள்ளிக் குழந்தைகள் இவருக்குத் தேன், பேரீச்சம்பழம் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபட்டு, பிரசாதமாகப் பெற்றுவந்து சாப்பிட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
கல்விச் செல்வம் மட்டுமா? அலைமகளோடு அருள்புரிவதால் இவரை வழிபடும் பக்தர்களுக் குப் பொருட்செல்வமும் குறைவற ஸித்திக்கும். தேர்வு காலங்களில், இவரது சந்நிதிக்கு வரும் பள்ளிக் குழந்தைகள் தங்களின் பேனா, பென்சில்களை ஸ்வாமியின் பாதத்தில் வைத்து வழிபட்டுச் செல்கிறார்கள். பெற்றோர் பலரும் ஒருங்கிணைந்து, தங்கள் குழந்தைகளின் கல்விநலன் சிறக்க, இங்கே ஹயக்ரீவ ஹோமம் நடத்தி வழிபடுவதும் வழக்கம்.
வழிபட வரும் குழந்தைகளுக்கு தியானம் செய்ய கற்றுக்கொடுப்பது, இக்கோயிலின் தனிச் சிறப்பு. குழந்தைகள் தங்கள் இரு கரங்களின் விரல்களையும் இணைத்து, பத்து விரல்களையும் ஐந்தாகக் கணக்கிட்டு பஞ்சபூதங்களாக பாவித்து, தங்களின் வயிற்றுக்கு நேராக வைத்து 10 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும். இதனால் குழந்தைகளின் ஞாபகசக்தி பெருகும்; அவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
வழிபட வரும் குழந்தைகளுக்கு, ஸ்ரீஹயக்ரீவ ஸ்வாமியை வழிபடுவதற்கான ஸ்லோகங் களையும் கற்றுத் தருகிறார்கள். நவராத்திரி காலத்தில், தசமி திதியில் ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் விசேஷ பூஜையும் வழிபாடுகளும் நடைபெறு கின்றன.
தேர்வுக் காலம் துவங்கும் இந்தத் தருணத்தில், இந்த ஆலயத்துக்கு உங்கள் குழந்தைகளை அழைத்து வந்து, இருபெரும் கல்வி தெய்வங்களையும் வழிபட்டு, வரம் பெற்றுச் செல்லுங்கள்.

Comments