பசுவதீஸ்வரர்

''கோயிலுக்குள் சென்றால் பேரதிர்ச்சி! எம்பெருமானின் ஆவுடையும் அதன் மீது சிறிய கல் போன்ற அமைப்பு மட்டுமே காணப்பட்டது...'  
சிவனார் நாம ரூபங்களைக் கடந்தவர்தான் என்றாலும், அவரைப் பல வடிவங்களில், பல திருப்பெயர்கள் சூட்டி வழிபட்டு வருகிறோம். அப்படி, சுமார் 700 வருஷங்களுக்கு முன்பாக அம்மாபாளையத்தில் தோன்றிய ஒரு சிவாலயத்தில் அருளும் சிவபெருமானுக்கு என்ன திருப்பெயர் வழங்கப்பட்டது என்பது நீண்டகாலமாக யாருக்குமே தெரியாமல் இருந்தது. கடந்த மூன்று தலைமுறைகளாக அந்த ஊரில் வசித்து வரும் மக்களுக்கும் அந்த ஈசனின் திருப்பெயர் என்ன என்று தெரியவில்லை. அவ்வளவு ஏன்... அரசு ஆவணங்களில்கூட சிவாலயம் என்றுதான் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, சிவனாரின் திருநாமம் என்ன என்று குறிப்பிடப்படவில்லை.
தீவிரமாக விசாரித்தபோது, இந்தக் கோயிலில் அருள்புரியும் சிவபெருமானுக்குப் பசுவதீஸ்வரர் என்றும், அம்பிகைக்கு சாந்தநாயகி என்றும் திருப் பெயர்கள் அமைந்துள்ளன எனத் தெரிய வந்தது.
நீலகிரி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பவானி ஆறு, அப்பகுதி மக்களால் வாணி ஆறு என்றே அழைக்கப்படுகிறது. சத்தியமங்கலம் வழியாக வரும் இந்த நதியானது, பவானி நகரில் அமிர்த நதியுடன் சேர்ந்து, காவிரியில் கலக்கிறது. இந்த வாணி ஆற்றின் கரையில் ஐந்து இடங்களில் துர்வாசர் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அதில் நான்காவதாக அமைந்த ஆலயம்தான் அம்மாபாளையத்தில் இப்போது நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் பசுவதீஸ்வரர் திருக்கோயில்.
இந்தக் கோயிலில் பாலாலயம் செய்து, திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதிக்காக இந்தக் கோயிலை நாம் தரிசிக்கச் சென்றபோது, திகைத்துத்தான் போனோம். காரணம், கோயிலில் எந்த ஒரு விக்கிரஹமுமே காணப்படவில்லை.ஈசனுக்கும் அம்பிகைக்கும் சந்நிதிகள் அமைக்கும் பணியும், ராஜகோபுரம் கட்டுவதற்கான பணியும் தொடங்கி இருந்தன. திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ராமசாமி என்பவரிடம் பேசினோம்...
''ஒரு காலத்தில் சிறப்பாக வழிபாடு நடை பெற்று வந்த கோயில், பின்னர் ஆற்றில் ஏற்பட்டவெள்ளப்பெருக்கால் சிதிலமடைய ஆரம்பித்திருக் கிறது. அதன் பிறகு, மக்கள் அங்கு செல்வதையே நிறுத்திவிட்டனர். வழிபாடுகள் நின்று, சுமார் 300 வருஷமாவது ஆகியிருக்கும். இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த வளையல் வியாபாரி ஒருவரின் கனவில் சிவபெருமான் தோன்றி, எங்கள் ஊரின் இருப்பிடத்தைச் சொல்லி, தான் அங்கு ஆவுடையில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்குக் கோயில் கட்டும்படியும் தெரிவித்திருக்கிறார். உடனே, அந்த வளையல் வியாபாரியும் எங்கள் ஊருக்கு வந்து நடந்ததைக் கூறி, ஊர் மக்கள் சிலரோடு சிவன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். பல நூறு ஆண்டுகளாக வழிபாடுகள் நின்றுபோன நிலையில், கோயிலைச் சுற்றி முட்புதர்கள் காடு போல வளர்ந்து கிடந்ததால், யாராலும் கோயிலுக்குள்ளே செல்ல முடியவில்லை.
அப்போது, எங்கிருந்தோ வந்த மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், கோயிலின் உள்ளே செல்லும் வழியைச் சொல்லிச் சென்றான். அதே வழியில் கோயிலுக்கு உள்ளே வந்ததும், அந்தச் சிறுவனைத் தேடினால், காணவில்லை. இதற்கு முன்னர் யாருமே அவனைப் பார்த்ததும் இல்லை என்பது வியப்புக்குரிய ஒன்று. ஆக, சிறுவனாக வந்து வழிகாட்டியது அந்தப் பரமேஸ்வரனேதான் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தோம். உள்ளே சென்றால், எங்களுக்குப் பேரதிர்ச்சி! கோயிலுக்குள்ளே எந்தச் சிலைகளும் இல்லை. எம்பெருமானின் ஆவுடை மட்டுமே இருந்தது. ஆவுடையின் மீது சிறிய கல் போன்ற அமைப்பு மட்டும் காணப்பட்டது...' என்று, கோயிலுக்கு உள்ளே சென்ற சிலிர்ப்பான அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ராமசாமி. தொடர்ந்து...
''பின்பு, இறைவனுக்குத் திருநாமம் வைக்க நினைத்து, பிரஸ்னம் பார்த்தோம். திருக்கோயிலிலேயே பல பெயர்களை எழுதிப்போட்டு, ஒரு குழந்தையை விட்டு எடுக்கச் செய்தோம். அதில் வந்த பெயர் களே பசுவதீஸ்வரர், சாந்தநாயகி இரண்டும்!'' என்றார்.
தொடர்ந்து, கோயிலைச் சுற்றி இருந்த முட்புதர்களைச் சுத்தம் செய்து, கோயிலில் வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். அது முதல் கோயிலில் அனுதினமும் பூஜைகள் நடந்து வருகின்றன. கோயிலில் பஜனைகளும் தற்போது நடைபெற்று வரு கின்றன. இக்கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தட்சிணாமூர்த்தியின் சிலை, தற்போது ஈரோடு வ.உ.சி. பூங்காவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.
கோயில் சுவர்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருகிறது.எனவே, இது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது. கொங்கு நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்களுள் சுந்தர பாண்டியன் இக்கோயிலைக் கட்டி இருக்கலாம் எனவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இறைவனுக்குப் பெயர் வைத்தாயிற்று. கோயில் எழுப்ப வேண்டாமா? ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, திருப் பணிக் கமிட்டி ஒன்றை அமைத்து, பழைய கோயில் இருந்த அதே இடத்திலேயே, தற்போது புதிய கோயில் ஒன்றைக் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். திருப்பணி வேலைகள் தொடங்குவதற்கு முன்னால், கோயிலில் மிகப்பெரிய யாகம் ஒன்றையும் நடத்தியிருக்கிறார்கள்.
சாதி, மதம் கடந்து ஊர் மக்கள் அனைவருமே கோயில் திருப் பணிகளில் ஈடுபட்டு வருவது நம்மை ஆச்சரியப்பட வைப்பதோடு, மகிழவும் நெகிழவும் வைக்கிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட திருப்பணி வேலைகள், போதிய நிதியின்மை காரணமாக, இன்றைக்கும் மெதுவாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. தற்போதுதான் சந்நிதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் கோயில் மதில் சுவர் கட்ட வேண்டும்; விமானம் அமைக்க வேண்டும்; ஈசனுக்கு லிங்கம், அம்பாள் சிலை, மற்றும் விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, நவகிரகம், சண்டிகேஸ்வரர் போன்ற தெய்வமூர்த்தங்களுக்குச் சிலைகள் செய்து, அவர்களுக்கு தனித்தனி சந்நிதிகளும் அமைக்க வேண்டும்.
விரைவில் ஈசனின் ஆலயம் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்திட வேண்டும். அதற்கு நம்மால் ஆன எல்லா உதவிகளையும் செய்ய வேண்டியது நமது கடமையல்லவா? பசுவதீஸ்வரர் மனம் குளிர்ந்தால் அம்மாபாளையம் கிராமம் மட்டுமல்ல; மொத்த தமிழகமுமே வளம் பெறும் என்பது நிச்சயம்.

Comments