சொர்க்க பள்ளம்

காலவெள்ளத்தில் மறைந்துபோன, நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைக் கண்டறிந்தவர் ஸ்ரீமத்நாதமுனிகள். இவருடைய திருவரசு அமைந்துள்ள தலம், செம்போடை. கி.பி.823-ம் ஆண்டு இன்றைய காட்டுமன்னார் கோயிலில், ஈஸ்வரபட்டர் தம்பதிக்கு மகனா பிறந்த இவர், ஒருமுறை தந்தையாருடன் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்குச் சென்றார். அப்போது ஒரு அடியார், ‘ஆரா அமுதே’ எனத் தொடங்கும் பத்து பாசுரங்களை பெருமாள் முன் சேவித்தார். இறுதியில் அந்த அடியார் ‘ஆயிரத்துள் இப்பத்தும்’ என பாட்டை முடித்தார். உடனே அவரிடம் ஐயா, ஆயிரம் பாடல்கள் உள்ளதாகக் கூறுகிறீர்களே? அவற்றையும் சொல்லுங்கள்" என்றார். வந்திருந்த அடியார், குழந்தாய்! எனக்கு இந்த பத்து பாடல்கள்தான் தெரியும்! மீதமுள்ள பாடல்களை திருக்குருகூரில் உள்ள ஸ்ரீசடகோபரிடம் சென்று பெற்றுக்கொள். அவரால்தான் இப்பாடல்கள் இயற்றப்பட்டன" என்றார். உடனே, திருக்குருகூர் சென்று சிலை வடிவில் இருந்த சடகோபரை சேவித்தார் நாதமுனிகள்.
அப்போது மதுரகவியாழ்வாரின் ‘கண்ணினுன் சிறுத் தாம்பு’ எனும் 11 பாசுரங்கள் ஸ்ரீபாராங்குசதாசரிடம் இருப்பதாக அறிந்தார். அவரைத் தேடிச் சென்றார். அவரோ, ‘இப்பாசுரங்களை 12,000 முறை பயபக்தியுடன் பாடினால், நம்மாழ்வார் காட்சி தருவார்’ என முன்னோர்கள் கூறியுள்ளதாகக் கூறினார். அதைப் பெற்ற நாதமுனிகள், ஊன் உறக்கமின்றி ஓரிடத்தில் அமர்ந்திருந்து பன்னிரெண்டாயிரம் முறை பாடி பூர்த்தி செய்தார். அவரது பக்தியை மெச்சிய சடகோபர் காட்சி கொடுத்து, நான்காயிரம் பாசுரங்களையும் அருள்கிறேன். பெற்றுக்கொள்ளும்" என வரமளித்தார்.
யோக பயிற்சியில் வல்ல ஸ்ரீமத்நாதமுனிகளும் ஏகசந்தகிரகியாக 4000 பாசுரங்களையும் பெற்றுக் கொண்டார். பிறகு காட்டுமன்னார் கோயில் சென்று, வீரநாராயண பெருமாள் சன்னிதியில் நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களைப் பாடி மகிழ்ந்தார்.
இந்த நிலையில் ஒரு நாள் சீதா பிராட்டி, லெட்சுமணர், அனுமனோடு வேடுவர் வேடத்தில் நாதமுனிகள் வீட்டுக்குச் சென்ற ஸ்ரீஇராமபிரான் சுவாமி இருக்கிறாரா?" எனக் கேட்க, இவரது மனைவி அரவிந்த பாவை, வீரநாராயணபெருமாளை தரிசிக்கச் சென்றுவிட்டார்" எனக் கூறிவிட்டார்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திலே வீடு திரும்பினார் நாதமுனியார். செய்தியை அறிந்தார். வந்தது யாரென்று புரிந்தது. அவர்கள் சென்ற திசையைக் கேட்டு, ஓட்டமும் நடையுமாய் விரைந்தார். வழியில் பூ ஒன்று விழுந்து கிடந்ததைக் கண்டு, இது பிராட்டியின் தலையில் இருந்து விழுந்த பூதான் என கண்டு கொண்ட இடம் இன்றைய ‘பூ விழுந்த நல்லூர்.’ குரங்கின் அடியைக் கண்ட இடம் (குரங்குஅடி) இன்றைய ‘குருங்குடி.’ வேடுவர் வேடத்தில் வந்தவர்களை கண்டீர்களா?" என மக்களிடம் கேட்ட இடம்தான் இன்றைய ‘கண்ட மங்கலம்.’
இப்படி கங்கைகொண்ட சோழபுரம் வரை வந்தும் ஸ்ரீராமபிரானைக் காண முடியவில்லை. மிகுந்த மன உளைச்சலோடு கிழக்கு வாசல் வழியே செல்லும் போது, சொர்க்கப்பள்ளம் என்ற இடத்தில் ஸ்ரீ ராம பிரான் சீதாப்பிராட்டியோடு அவரை ஆட்கொண்டு அருளி தன் திருவடியில் 94 வயதில் (917)சேர்த்துக் கொண்டார். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் ஏகாதசி வளர்பிறையில்(சுக்லபட்ச) ஸ்ரீராமபிரான் காட்சி தந்தருளிய நாள் மிகுந்த சிறப்போடு இங்கு கொண்டாடப்படுகிறது.
இந்தக் கோயில் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என இரண்டு பகுதிகளாக உள்ளது. மகா மண்டபத்தின் வலதுபுறம் ஸ்ரீமத் நாதமுனிகள் யோக நிலையில் உள்ள சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தின் அருகே கருவறையை வணங்கும் நிலையில் கருடாழ்வார். கருவறையில் ஸ்ரீவீரநாராயண பெருமாள் - ஸ்ரீதேவி - பூதேவி தாயார் சிலையும், அதற்கு முன்புறமாக ஸ்ரீசீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி. பூதேவி சிலைகளும் உள்ளன.
கோயிலின் இடதுபுறத்தில் உள்ள திருவரசில் பிரதானமாக ஸ்ரீமத் நாதமுனி சுவாமிகள் சமாதி உள்ளது. அதன் இடது புறமாக உயக்கொண்டார் குருகைக் காவலப்பன், மணக்கால்நம்பி; திருவரசின் பின்புறம் ராம-லெட்சுமண, சீதை, அனுமன்; திருவரசின் வலதுபுறம் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான், திருக்கண்ணமங்கை யாண்டான் ஆகியோரின் சிலைகள் சிறிய மாடம் போன்ற அமைப்பினுள் உள்ளன.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வு நடந்த இடத்தை கண்டறிந்தவர், ஜெயங்கொண்டத்தைச் சார்ந்த ஹரிதாச புலவர் என்பவர். பின்னர், டாக்டர் ஏ.வி.ஆர் என்கின்ற ரெங்காச்சாரி சுவாமிகள் உதவியோடு இதை உறுதி செய்தார்.
மேலும், பொறியாளர் கோமகன், ஊர் முக்கியஸ்தர்கள், ஊர்மக்கள், மெயன்பர்கள் உதவியோடு சிலைகளையும் இடத்தையும் பெற்று, கடந்த 16.09.2013 அன்று திருக்கோவிலூர் ஜீயர் 25வது பட்டம் ஸ்ரீமத் சீனிவாச்சாரியார் தலைமையில் கும்பாபி ஷேகமும் நடைபெற்றுள்ளது.
செல்லும் வழி
சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஜெயங்கொண்டம் நோக்கி செல்லும் குறுக்குரோடு நிறுத்தத்திலிருந்து சுமார் 3 கி.மீ.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 12 வரை.
மாலை 4 மணி முதல் 7 வரை.

தொடர்புக்கு : 96776 90111.

Comments