சென்ன மல்லீஸ்வரர்

பொதுவாக, பெண்களை மலராகவும், அந்த மலர்களைச் சுற்றி ஆடும் வண்டாக ஆண்களையும் வர்ணிப்பது இலக்கிய மரபு. ஆனால், பெண்ணை வண்டாகவும், ஆணை மலராகவும் வர்ணிக்கிறார் ஆசார்ய சங்கரர். ஆம்; ஸ்ரீசைலத்தில் உறையும் அம்பிகையைப் பாடும் ‘பிரமராம்பா அஷ்டக’த்தில் தான் இப்படிப் பாடுகிறார் ஆசார்யர். அதேபோன்ற திருநாமங்களுடன் நாம் இவர்களைத் தரிசிப்பது சென்னை, ஜார்ஜ் டவுனில் உள்ள சென்னமல்லீஸ்வரர் திருக்கோயிலில்.
‘ப்ரமரம்’ என்றால் வண்டு. இங்கு கோயில் கொண்டுள்ள அம்பிகையின் பெயர் பிரமராம்பாள். இந்த வண்டு மலரைச் சுற்றியபடி பறந்தவண்ணமிருக்கும். அந்த மலர் யார்? அவர்தான் சென்னமல்லீஸ்வரர். இந்தத் திருநாமங்களிலேயே அழகியல் ரீதியாகவும், தத்துவார்த்தமாகவும் ஒரு செய்தி இருப்பதைக் கவனிக்கலாம். பெருமான் மல்லீஸ்வரர். ஆனால், தேவி ப்ரமராம்பாள் ஆகிறாள். ‘திருக்கோலக்காவில், அவர் ‘தாளபுரீஸ்வரர்’ என்று பெயர் கொண்டால், அம்பிகை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்று விளங்குகிறாள். திருமங்கலக்குடியில் ‘பிராணநாதேசுவரர்’ என்று பெருமான் பெயர் கொண்டால், அம்பிகை ‘மங்களாம்பிகை’ எனப் பெயர் கொள்கிறாள்.
அதாவது, கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஏற்ப மற்றவர் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நுட்பத்தை உணர்த்துகிறார்கள் பெருமானும் தேவியும். அதேதான் இங்கும் உணர்த்தப்படும் விஷயம். அருள் வெள்ளமான அழகிய, எழிலார்ந்த இந்த திவ்ய தம்பதியர் எழுந்தருளியுள்ள ஆலயத்தின் திருக்குடமுழுக்கு விழா கடந்த 5.2.2015 அன்று கோலாகலமாக நடைபெற்றது. தேவாரப் பாடல்பெறாத தலம் என்றாலும், இதற்கான வரலாறும் சுவைமிக்கது.
ஆரம்பத்தில் இந்தக் கோயில் தற்போது ரிசர்வ் வங்கி இருக்கும் இடத்தில் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியினர் தங்களுடைய ராணுவ வசதிக்காக இங்கிருந்த சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோயில்களை இடித்துவிட்டனர். இதனால் சென்னை நகர மக்கள் கோபம் அடைந்தனர். அப்போது பெரும் தனவந்தரான மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் ஆங்கிலேயரிடம் போராடி மூல விக்ரகங்களைப் பெற்று தற்பொழுது என்.எஸ்.சி போஸ் சாலையில் இந்தக் கோயில்களை தமது சொந்த செலவிலேயே கட்டி முடித்தார்.
அழகிய மல்லிகை மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகளுக்கு நடுவே இத்திருக்கோயில் அமைந்த காரணத்தால், சென்னமல்லீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றதாகப் பெரியபுராண பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்ப்பக்கிருகத்தில் ஜோதிர்லிங்கம், சத்யோஜாத ஆகாயலிங்கம், சதாசிவம் என்றெல்லாம் ஆகமங்களால் போற்றப்பெறும் சென்ன மல்லீஸ்வரர் பிராகாரங்களைச் சுற்றியிருக்கும் அனைத்து மூர்த்தங்களுக்கும் பிரதானமாய்க் காட்சி தருகிறார்.
மேற்கு பிராகார முடிவில் அகிலத்தின் அன்னையா விளங்கும் பிரமராம்பிகை கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
துக்கத்தை தூள்தூளா தகர்த்தெறியும் துர்கா தேவி தனிச்சன்னிதி கொண்டுள்ளாள். செவ்வாய்க் கிழமை மங்கள வாரம், இராகு காலத்தில் இங்குள்ள துர்க்கையை வழிபடுவது சிறப்பாகும். உஷத்காலம், உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் ஆகிய நான்கு கால பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன.
இத்திருக்கோயில் இரு பிராகாரங்களைக் கொண்டது. உள்ளே நுழைந்ததும் இடப்புறம் மேற்கு நோக்கிய யாக சாலையை அடுத்து சூரிய மூர்த்தி, மேற்கு நோக்கிய நிலையில் அருள்புரிகிறார்.
பிரசன்ன விநாயகர், அருணகிரிநாதர், சுப்ரமண்யர், ஆதிசங்கரர், பைரவர், நடராஜர், நந்திதேவர் என தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதோஷ வேளையில் நந்தி தேவருக்கு அருகம் புல்லை மாலையாகக் கட்டி சாத்துகிறார்கள். வில்வம், மல்லிகை, மருக்கொழுந்து முதலிய மலர்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுவதுண்டு. இவருக்கு காப்பரிசி (பச்சரிசி, பச்சைப்பயறு ஆகியவற்றை ஊறவைத்து அதனுடன் வெல்லம் கலந்து) நிவேதனம் செய்கிறார்கள். பிரமராம்பிகை சமேத மல்லீஸ்வரரை, தரிசனம் செய்வதால் செல்வ வளம் சேரும்; தொழிலில் நஷ்டம் ஏற்படாது.
ஆனி திருமஞ்சனம், ஆடி சுவாதி, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, விஜயதசமி, கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், ஐப்பசி-அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மார்கழி மாத திருவெம்பாவை உற்சவம், ஆருத்ரா தரிசனம், அரைக்கட்டு உற்சவம், ரதசப்தமி, தை கிருத்திகை, மகா சிவராத்திரி, மாசி மகம், பங்குனி உத்திரம், வசந்த உற்சவம், வைகாசி விசாகம், அறுபத்து மூவர் விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இதே ஆலய வளாகத்தில் அமைந்துள்ளது சென்ன கேசவப் பெருமாள் கோயில். இங்கு பெருமாள், தாயார் சன்னிதிகள் தவிர, ராமர், ஆஞ்சநேயர், ஆண்டாள் உட்பட பல்வேறு சன்னிதிகளும் அமைந்துள்ளன.
தோஷம் தொடர்பான பரிகாரங்களுக்கு தாயாரை வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி பகல் பத்து, இராப் பத்து, சித்திரை பிரமோற்சவம், வைகாசி வஸந்த உற்சவம், மார்கழி ஆண்டாள் நீராட்டு உற்சவம், ஆவணி பவித்ர உற்சவம், ஸ்ரீராமநவமி உற்சவம் போன்ற வைபவங்கள் இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றன" என்கிறார் சீனிவாச பட்டாச்சாரியார்.

Comments