உத்தமன்

இவ்வுலகில் உள்ள சகல ஜீவராசிகளும் ஸ்திரீகள். எம்பெருமான் நாராயணன் மட்டுமேதான் புருஷன். பரப்ருஹ்மமே நாராயணன் என்றார் ஆதிசங்கரர். நம்மை எல்லாம் ரக்ஷிக்கத்தான் பகவான் பல கோலங்களில் கோயில்களில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். எத்தனை கோடானு கோடி வருஷங்களா நிற்கிறது தெரியுமா திருமலை? வெளிநாட்டு ஆய்வாளர்கள், திருப்பதில இருக்கிற கற்களைக் கொண்டு போய் ஆராச்சி பண்ணி 250 கோடி வருஷங்களுக்கு மேல பழைமையானது இந்தக் கற்கள்னு கண்டுபிடிச்சு சொல்றா. அவ்ளோ பெருமை பகவானுக்கும் திருமகளான தாயாருக்கும்" என்றார், ‘உத்தமன்’ என்ற தம் சொற்பொழிவில் திருக்கோஷ்டியூர் மாதவன்.
சங்கல்பம் பண்ணிக்கும்போது, ‘ஸ்வேத வராஹ கல்பே’ன்னு சொல்லுவோம் இல்லையா? பகவான் வெள்ளை பன்றியா அவதாரம் பண்ணி பூமியைக் கண்டுபிடிச்சு தந்தார். அசுரனை வதம் பண்றதை பார்த்துட்டு (பூமி தேவி) தாயார் அப்படியே பயந்து போய் நின்னாளாம். எம்பெருமானின் கண்களில் தயையை மட்டுமே பார்த்தவள் அவள். அவர் பன்றியாக அவதாரம் பண்ணி, கண்களில் நெருப்பு கக்க சண்டையிட்டதைப் பார்த்து, ‘இது பெருமாள்தானா’ன்னு ஒரு நிமிஷம் சந்தேகப்பட்டு போயிட்டாளாம். பகவானின் திருமேனியில் அவருக்கே உரிய ஒரு வாசம் வருவதைத் தெரிந்து கொண்டபின் தான், ‘பெருமாள்தான் இவர்’னு சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டாளாம் தாயார்.
பூமி தாயை தூக்கி அப்படியே தன் மூக்கில் வைத்துக் கொண்டார் வராஹப் பெருமாள். பெரிய திருமேனி வராஹப் பெருமாளுக்கு. எட்டு திருக்கரங்களோட ஸ்வேத வராஹப் பெருமாள் பூமியை சுருட்டி மூக்கில் வைத்துக் கொண்டதும் ஆனந்தக் கண்ணீர் விட்றா தாயார். ‘என்னைக் காப்பாற்ற பன்றியாக வந்தாரே’ன்னு, தாயார் விட்ட கண்ணீர் பகவானின் வலது காலில் பட்டு, பூமியில் பட்டதாம். அதுதான் திருவெள்ளக் குளம் (அண்ணன் கோயில்).
‘பக்தர்களை ரக்ஷிப்பது ஒன்றுதான் என் நோக்கம். உனக்கு என்ன வேண்டுமோ கேள்’ என்றார் வராஹப் பெருமாள் தாயாரைப் பார்த்து. ‘ஸ்வாமி நிறைய கேட்கணும். என்னை தங்களது திருக்கைகளால் நீங்கள் தாங்க வேண்டும்’ என பூமி தாய் கேட்டுக்கொள்ள, அதை அப்படியே செய்தார் பெருமாள். இப்படியே திருமுகம், திருக்கரம், தோள், திருமார்புன்னு தாயாரை அரவணைத்த பகவான், ‘திருவடியில் அரவணைக்க அடுத்த அவதாரம்’னு சொல்லி பகவான் எடுத்ததுதான் த்ரிவிக்ரம அவதாரம்.
இந்திரனின் தாயாரான அதிதி பெருமாளை நோக்கிக் கடுமையான தவம் பண்ணினாள். என் பிள்ளையே சாஸ்வதமான ராஜாவா இருக்கணும்னு அவள் தவம் செய்துக் கொண்டிருக்கும்போது பெருமாள் அவளைப் பார்த்து, ‘அம்மா’ என்று அழைத்தாராம். ‘நீரா என்னை அம்மான்னு கூப்பீட்டீர்’னு அவள் கேட்க, ‘ஆமாம் உங்களைப் பார்த்தால் என் அம்மா மாதிரி எனக்குத் தெரியறது’ன்னார் பெருமாள். அதிதி அப்படியே மயங்கிவிட்டாள். ‘ஒரு வரம் வேண்டும்’ என்றாள். ‘என்ன’ன்னார் பெருமாள்? ‘என் கர்ப்பத்தில் புகுந்து எனக்கு மகனாகத் தாங்கள் பிறந்தால் சந்தோஷப்படு வேன்’னாள் அவள். ‘தந்தேன்’ என்றார் பகவான். எம்புள்ளதான் சாஸ்வதமான ராஜான்னு அவ கேட்டது சரியாயிடும் இல்லையா?
பகவான் த்ரிவிக்ரம அவதாரம் பண்ண 24 காரணங்கள்.
மகாபலி இந்திர பதவிக்காக யாகம் பண்ணின்டு இருந்தான். அசுர குலத்தில் பிறந்தாலும் தர்ம வழியில் பிரார்த்திக்கிறான் அவன். அதனால் அவனுக்கு இந்திர பதவியை விட உயர்ந்த பதவியைத் தரணும் அப்படீங்கறது பகவானின் சங்கல்பம். பகவான் வாமனனாக அவதாரம் எடுத்துக் கொண்டு மகாபலி யாகம் பண்ற இடத்துக்கு வர்றார். நான்கு அசுரர்கள் பெருமாளின் காலில் தண்ணீரை விட்டு அலம்பி அந்த ஸ்ரீ பாத தீர்த்தத்தை தலையில் தெளிச்சுண்டு வந்ததுமே அவா முகத்துல அசுரக்களை போயி, ஒரு ராஜகளை வந்துடுத்து. மகாபலி பெருமாள்கிட்ட என்ன வேணும்னு கேட்க, ‘நான் தபஸ் பண்ண ஒரு சின்ன ஆஸ்ரமம் வேண்டும். பூமி தானம் பண்ணுன்னார்’ இந்திரலோகத்துக்கே நான்தான் ராஜாவாகப் போறேன்னார் மகாபலி. ‘என் பாதத்தால் நானே மூன்று அடி மண்ணை அளந்து கொள்ளணும்’ என பகவான் சொல்லிவிட்டு தன் பாதுகைகளைக் கழட்டினார். வந்திருப்பது சாட்சாத் நாராயணன்தான் என்று அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார் கொடுக்காதே என மகாபலியை தடுக்கப் பார்த்தார்.
பெருமாள் ஏன் பாத ரக்ஷைகளைக் கழட்டினார் தெரியுமா? தானம் வாங்கும்போது பாத ரக்ஷையை போடக் கூடாது. பூ வாங்கும்போது செருப்பு போட்டுண்டு வாங்கக் கூடாது. ஸ்வர்ணம் (தங்கம்) வாங்கும்போது, தானியங்கள் வாங்கும்போது செருப்பு போட்டுக்கக் கூடாது. சாப்பிடும்போது செருப்புகளை போட்டுண்டு சாப்பிட்டா நோய் வரும். பகவான் கழட்டிய பாதுகைகளில் சங்கு, சக்ர முத்திரையைப் பார்த்து விடுகிறார் சுக்ராச்சாரியார் . இவர் மஹா விஷ்ணுவேதான் என மகாபலியிடம் சொல்கிறார் அவர். ‘எம்பெருமானேவா வந்திருக்கார்? என்ன பாக்கியம்!’ என ஒரு நிமிஷம் நினைத்த மகாபலியின் மனதில் அகங்காரத்தை உண்டு பண்ணினார் பெருமாள். மூன்று அடி மண்ணில் பெருமாளின் திருவடி மகாபலியின் சிரஸில் பதிந்த கதை நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆக, பூமி பிராட்டி கேட்டுக்கொண்டபடி தன் கால்களிலும் அவளுக்கு இடம் தந்து பெருமாள் தாயாரை அரவணைத்துக் கொண்டது இந்த த்ரிவிக்ரம அவதாரத்தில்தான்."

Comments