குன்றுதோறும் ஆராதனை!

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். எனவேதான், குமரனை குன்றக் கடவுள் என்றும், குறிஞ்சிநிலக் கடவுள் என்றும் போற்றிக் கொண்டாடுகிறோம். குன்றுதோறும் முருகன் குடியிருந்தாலும், குன்றுதோறாடல் என்பது தணிகைமலை என்னும் திருத்தணிகை திருத்தலத்தையே சிறப்பாகக் குறிக்கும். சங்க காலப் புலவரான நக்கீரர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இத்தலத்தை 'குன்றுதோறாடல்’ என்று சிறப்பித்துப் பாடியுள்ளார்.
இப்படி, மலைதோறும் கோயில் கொண்டருளும் மலைமகள் மைந்தனை 'குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழு’ என்ற பெயரில் ஒரு கூட்டு வழிபாட்டுக் குழு அமைத்து, வழிபட்டு வருகிறது ஓர் அமைப்பு.
சிறுசிறு குன்றுகள், ஏறிச் செல்லமுடியாத மலைகள் என எங்கோ கண்காணாத இடங்களில், சென்று தரிசிக்கவே கடினமாக இருந்தாலும், அங்கே முருகன் கோயில் ஒன்று உள்ளது என்று கேள்விப்பட்ட மாத்திரத்திலேயே உடனடியாகக் கிளம்பிச் சென்று தரிசித்து, தங்களால் இயன்ற திருப்பணிகளை ஆத்மார்த்தமாகவும் பக்திபூர்வமாகவும் செய்து வருகின்றனர், இந்த அமைப்பினர். இவர்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் முருகன் கோயிலுக்குச் சென்று, முருகக் கடவுளுக்குப் பலவிதமான அபிஷேக ஆராதனைகள் செய்து, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை ஓதுவார்களைக் கொண்டு பாராயணம் செய்து வழிபட்டு வருகிறார்கள். அத்துடன் நின்றுவிடாமல், உழவாரப் பணிகளையும், புனரமைக்கும் பணிகளையும் இந்தக் குழுவினர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 43 வருடங்களாக...
900க்கும் அதிகமான மலைக் கோயில்களில் முருகனுக்கு வழிபாடுகள் நடத்தியிருக்கும் இந்த அமைப்பு, திருப்பூரில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர் சண்முகம், இ்தன் ஆக்கபூர்வமான பணிகள் பற்றி விவரித்தார்...
''1971ம் ஆண்டு, திருப்பூரில் நானும் இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து அடிக்கடி முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அதைத் தொடர்ந்து செயல்படுத்த நினைத்து, மாத வழிபாடு செய்வதென முடிவெடுத்தோம். முருகன் குடிகொண்டிருக்கும் மலைக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டால் என்ன என்று அப்போது எங்கள் மனதில் தோன்றிய எண்ணமே 'குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழு’ உருவாகக் காரணமாகியது.
'வெள்ளச் சடையன் விரும்பும் அழகனை
உள்ளக் கோயில் உறையும் முருகனை
கருணை பொழியும் கந்தனைத்
திங்கள்தோறும் சென்று தொழுதலே சிறப்பு...'
என்று நமது சான்றோர்கள் முருகனை வழிபடுவதன் சிறப்பை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அதை மனதில் வைத்து, குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகக் கருதி, ஒவ்வொரு மாதமும்  முருகக் கடவுளை வழிபட்டு வருகிறோம்.ஆரம்ப காலத்தில் அருகிலுள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தோம். பின்னர், ஆன்மிக அன்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகியதால், தனிப் பேருந்து மூலம் தொலைவில் உள்ள ஊர்களுக்கும் சென்று வரத் தொடங்கினோம்.
எங்கள் அமைப்பினர் 50வது கோயிலாகச் சென்று தரிசித்தது விராலிமலைக் கோயில் ஆகும். அப்போது, விராலிமலை முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, தங்கக் கவசம் சார்த்தி, கல்யாண சண்முகார்ச்சனை செய்ததுடன், அன்றைய இரவு முருகனின் வீதிஉலாவும் நடத்தி, ஒரு திருவிழா போலவே கொண்டாடினோம். இதேபோல், 75வது கோயில், 100வது கோயில் என்று செல்லும் ஒவ்வொரு கோயிலிலும் திருவிழாவாகவே கொண்டாடுகிறோம்'' என்று சொல்லும் சண்முகம் திருப்பூர் ஈசன் கடை வீதியில் பூஜை பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்.
அருணகிரிநாதரைப் போற்றும் வகையில், ஆனி மாத மூல நட்சத்திரத்தில் அவரது குருபூஜையைப் பத்து ஆண்டுகளாகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். அன்று திருப்புகழைப் பாடும் ஓதுவார்களைச் சிறப்பிக்கும் விதமாக, ஒவ்வொரு வருடமும் அவர்களுக்குப் பொற்கிழி வழங்கி, கௌரவித்து வருகிறது இந்த அமைப்பு.
தொடக்கத்தில் சிறிய அளவில் இருந்த இந்த அமைப்பில், இன்று ஐந்நூறுக்கும் அதிகமான அன்பர்கள் இணைந்து இறைத்தொண்டு செய்து வருகிறார்கள். மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலுக்கும் இந்தக் குழுவினர் சென்று, முருகனை தரிசித்து வந்துள்ளனர். இந்த முறை, இலங்கை, கதிர்காமத்தில் உள்ள முருகனைத் தரிசிக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களில் எழுபதுக்கும் அதிகமான அன்பர்கள் ஒன்றிணைந்து, பங்குனி மாதத்தில் ஒரு நல்ல நாளாகப் பார்த்து, திருப்பூரில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் உள்ள வெள்ளிமலை முருகனுக்குப் பாத யாத்திரையாக பால்குடம் எடுத்துச் சென்று வழிபட்டு வருவதை பல வருடங்களாக மேற்கொண்டு  வருகிறார்கள். அதுபோலவே, பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில், வெள்ளியங்கிரியில் தொடர்ந்து அன்னதானமும் செய்து வருகிறார்கள். வருடமெல்லாம் அழகன் முருகனைப் போற்றிக் கொண்டாடி வரும் இவர்கள், ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும் சென்று கூட்டு வழிபாடு மேற்கொண்டு வருகிறார்கள்.
அதுமட்டுமா?மலைக்கோயில்களில்படித் திருவிழா, குருப்பெயர்ச்சியின் போது 'குருப்பெயர்ச்சி யாகம்’ என இவர்களின் இறைப்பணி தொடர்கிறது. பதினைந்து வருடங்களுக்கு மேலாக திட்டை குரு கோயிலில் இவர்கள் நடத்தி வந்த யாகத்தை, தற்போது திருலோக்கியில் நடத்தி வருகிறார்கள்.
குமரனுக்கும், அவன் பெயரால் அடியார்களுக்கும் இந்த அமைப்பினர் செய்யும் அருந்தொண்டு சிலிர்க்கவைக்கிறது. இவர்களது இறைத் தொண்டு இன்னும் இன்னும் வளர, குமரக் கடவுள் அருள்புரிவானாக!

Comments