வாழ்வை உயர்த்தும் படிக் கோயில்!

துரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில், மதுரைக்கு அருகிலேயே உள்ளது ஒத்தக்கடை. இங்கே, யானையைப் போன்று தோற்றம் கொண்ட மிக நீண்ட மலையில், குடைவரைக் கோயிலில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீயோக நரசிம்மர். ஆகவே, இந்த மலையின் அடிவாரப் பகுதி, நரசிங்கம்பட்டி என அமைந்ததாகச் சொல்வர். 
இந்தப் பகுதியில் உள்ள இன்னொரு கோயில், மலைச்சாமி கோயில். மிகப் பழைமையான, புராதனமான ஆலயம் இது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
இங்கு தெய்வத் திருவுருவங்கள் ஏதுமில்லை. நான்கு படிகள் இருக்கின்றன. அந்தப் படிகளையே கடவுளாக வழிபடுகிறார்கள் ஊர்மக்கள். பெருமாள் தன் திருப்பாதம் பதித்த இடமே நான்கு படிக்கட்டுகளாக, வழிபடும் விஷயமாகப் போற்றிக் கொண்டாடப்படுகிறது என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.
படிகளுக்கு மலர் தூவி வழிபடுகிறார்கள் பக்தர்கள். இந்தக் கோயிலுக்கு அருகில் உள்ள திருக்குளத்தின் கரையிலிருந்து மூன்று முறை மண்ணை எடுத்து வந்து, மணல்மேட்டில் கொட்டி வேண்டிக்கொண்டால், அந்த முறை விவசாயம் சிறக்கும், பயிர் பச்சைகள் செழிக்கும் என்பது ஐதீகம்!
மேலும், படிச்சாமி என்றும் மலைச்சாமி என்றும் கொண்டாடப்படும் இந்தச் சாமிக்கு, கரும்புதான் படையல். நல்ல விளைச்சல் விளைந்திருந்தால், கட்டுக்கட்டாக கரும்புகளைத் தூக்கி வந்து, காணிக்கையாகச் செலுத்திச் செல்வார்களாம் விவசாயிகள். அந்தப் படையல் கரும்பையே, வந்திருக்கும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகின்றனர். குழந்தைகள் சரிவரச் சாப்பிடுவதில்லை என்றாலோ, அடிக்கடி அழுதுகொண்டே இருந்தாலோ, இங்கு படியில் வைத்து வேண்டிக்கொண்டால், ஆரோக்கியத்துடன் குழந்தைகள் வளர்வார்கள் என்பது நம்பிக்கை. பூசாரிப்பட்டி, அரிட்டாபட்டி என அக்கம்பக்கத்துக் கிராமங்களில் சுகப்பிரசவம் நிகழ்ந்து குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு மலைச்சாமி, மலையரசி, மலையாண்டி, மலையாயி எனப் பெயர் சூட்டுகின்றனர்.

மேட்டுப் பகுதியில் மண் கொட்டும்போது ஒரு சிலர், உப்பையும் சேர்த்துக் கொட்டி வழிபடுகின்றனர். முகத்தில் பரு போன்று ஏதேனும் வடுக்கள் இருப்பின், அது இந்த வேண்டுதலால் விரைவில் உதிர்ந்துவிடும், கரைந்துவிடும் என்பது நம்பிக்கை!
இன்னொரு விஷயம்... இந்த மணல் மேடு, எவ்வளவு மழை பெய்தாலும் கரையாதாம்!

Comments