பிரச்னைகளைத் தீர்ப்பார் பீளிக்கா முனீஸ்வரர்!

சென்னை, கிண்டி அருகில் உள்ள ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில், பர்மா நகரில் உள்ளது முனீஸ்வரர் ஆலயம். சுமார் 48 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் முனீஸ்வரர். அவ்வளவு உயரமான திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வது சுலபம் அல்ல என்பதால், அருகிலேயே சுமார் 48 அங்குல உயரத்தில் மற்றொரு விக்கிரகமாகத் திருக்காட்சி தருகிறார் முனீஸ்வரர். 
இவருக்கு 'பீளிக்கா முனீஸ்வரன்’ என்று திருநாமம். சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு, மதுரையில் வாழ்ந்த மக்கள் சிலர், மதுரை மீனாட்சியம்மன் கோயில் வாசலில் உள்ள மொட்டை முனீஸ்வரரை இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தனர். ஒருமுறை, கடும் பஞ்சம் ஏற்படவே, அங்கிருந்து பர்மாவுக்குச் சென்று, அங்கே உள்ள பீளிக்கா எனும் பகுதியில் வேலை பார்த்தும், கடைகள் வைத்தும் வாழ்ந்தனர். எப்போதும் முனியின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மதுரையில் இருந்து பிடிமண் எடுத்து வந்து, அங்கே பீளிக்கா பகுதியில், முனீஸ்வரனுக்கு கோயில் எழுப்பி, வழிபட்டார்கள்.
பின்னாளில், சென்னைக்கு வந்து குடியேறியவர்கள், பீளிக்காவில் இருந்து பிடிமண் எடுத்து வந்து, இங்கே கோயில் கட்டினார்கள். ஆரம்பத்தில், குடிசையாக இருந்த ஆலயம், இன்றைக்கு மிகப் பெரிய கோயிலாக, பிரமாண்ட முனீஸ்வரர் விக்கிரகத்துடன் அற்புதமாக வளர்ந்துள்ளது எனப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்கள், இந்தப் பகுதி மக்கள்.
முனீஸ்வரரின் கழுத்தில் ருத்திராட்சமும், கழுத்துப்பட்டையில் அஷ்டலட்சுமிகளின் திருவுருவங்களும்  பொறிக்கப்பட்டுள்ளன.அவர் அணிந்துள்ள துளசி மாலையில் ஸ்ரீஅனுமன் காட்சி தருகிறார். முனீஸ்வரரின் இடுப்பில் இருக்கும் ஒட்டியாணத்தில், 12 ராசிகளின் சின்னங்களும், இரண்டு திருக்கரங்களில் ஸ்ரீசரஸ்வதிதேவியின் திருவுருவமும், முதுகுப் பகுதியில் 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

மகா சிவராத்திரி நன்னாளில், 108 கிலோ அரிசியில் சாதம் வடித்து, மலைபோல் குவித்து படையலிட்டுவிமரிசையாகபூஜைகள்நடைபெறுகின்றன.ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி, ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீவீரவிநாயகர் ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன.
அமாவாசை நாளில், இங்கே பூஜிக்கப்பட்ட முடிகயிறு வழங்கப்படுகிறது. இந்த ரட்சையைக் கையில் கட்டிக்கொண்டால் எதிரிகள் தொல்லை, தீயசக்திகளின் அச்சுறுத்தல், காத்துக் கருப்பு இவற்றிலிருந்து நம்மைக் காக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ஸ்ரீமுனீஸ்வரருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. பீளிக்கா முனீஸ்வரரை வணங்குங்கள்; பிரச்னைகளில் இருந்து விரைவில் விடுபடுவீர்கள்!

Comments