ஸ்ரீரமணார்ப்பணம்-3

திருச்சுழியின் மிகப் பெரிய சொத்து, அதன் அமைதி. திருச்சுழி சிறிய நகரம்; பெரிய கிராமம். அது மற்ற ஊர்களிலிருந்து விலகியிருந்தது. எப்போதேனும் ராமேஸ்வரத்துக்குப் போகிற யாத்ரீகர்கள் சற்று திசை மாறி, அந்தப் பக்கம் நடந்து வருவார்கள். தங்கி, இளைப்பாறிச் செல்வார்கள்.
ஊர் அவர்களை ஆவலுடன் வரவேற்கும். சுற்றிச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும். இப்படி, சாதாரண யாத்ரீகர்கள் வருவதுகூட விசேஷமாக அமைந்த அந்த ஊரில், சுந்தரமய்யர் வக்கீலாக வேலை பார்த்து வந்தார்.
சுந்தரமய்யர் வக்கீலுக்குப் படித்தவர் அல்ல; ஆனால், படித்தவர். வாதாடத் தெரிந்தவர். அந்தக் காலத்தில் படித்தவர்கள் குறைவாக இருந்ததால், கொஞ்சம் படித்தவர்களைக்கூட வழக்குகளில் வந்து வாதாட, ஆங்கிலேய அரசாங்கம் அனுமதித்திருந்தது.
சுந்தரமய்யர் நல்ல உயரம். இறுக்கமான முகம். கூரிய கண்கள். அழுத்தமான உதடுகள். துருத்திய கன்னம். நீதியின் முன்பு வாது செய்ய வந்தவர் சிரிப்பாய் இருக்கலாகாது என்பது அவருக்குள் ஓர் எண்ணம். எனவே, எப்போதுமே அமைதியாகவும் கூர்மையாகவும் இருப்பது அவர் வழக்கம்.
வக்கீல் தொழில் நன்றாக நடந்ததால், வருமானம் வந்தது. வருமானம் வந்ததால், கோயிலுக்கு அருகிலேயே ஒரு வீடு வாங்கினார். வீட்டுக்கு இரண்டு நிலைப்படிகள் வைத்தார். ஒரு பக்கம் முழுவதும் அவர் உபயோகத்துக்கு; மற்றது, அலுவலகம்போல் வருவோர் போவோர் புழங்குவதற்கும் தங்குவதற்கும் வசதியாயிற்று.
தொலைவிலிருந்த கிராமங்களிலிருந்து நிலம் சம்பந்தமாகவோ, அடிதடி ரகளையில் ஈடுபட்டோ, நீதி விசாரணைக்கு விண்ணப்பம் கொடுத்து ஜனங்கள் வருவார்கள். இரவு வந்துவிட்டால், திருச்சுழி தாண்டி காட்டுப் பாதையில் நடக்க ஆண்கள்கூட அச்சப்படுவார்கள். எனவே, விடிந்த பிறகு போகலாம் என்று இங்கேயே தங்கிவிடுவார்கள். அப்படித் தங்க சௌகரியமான இடம் சுந்தரமய்யர் வீடு.
தங்கினால் போதுமா, உணவுக்கு வழி? அதிலும் சுந்தரமய்யர் அன்பு. 'நம்ம வீட்டுல இருந்து ராத்திரி சாப்பிட்டுட்டு, கார்த்தால கஞ்சி குடிச்சுட்டுப் போகலாம்' வஞ்சனையே இல்லாத உபசரிப்பால் அவர் மிளிர, மனைவி அழகம்மையும் உடனடியாக அதை நிறைவேற்றுவார்.
சுந்தரமய்யர்- அழகம்மைக்கு முதலில் ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு 'நாகசுவாமி' என்று பெயரிட்டார்கள். சுந்தரமய்யருக்கு லக்ஷ்மி என்று ஒரு தமக்கை இருந்தாள். அவர் ஓர் ஆண் மகனை ஈன்றுவிட்டு, மரணம் அடைந்தார். அவரின் குழந்தையை சுந்தரமய்யரே எடுத்து வளர்த்தார். 'ராமசுவாமி' என்று பெயரிட்டார். இரண்டாம் முறை அழகம்மை கருத்தரித்தார். வீட்டிலுள்ள பெரியவர்கள் அதைக் கொண்டாடினார்கள்.
இந்த முறை அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதை ராமசுவாமிக்குத் திருமணம் செய்து வைக்கலாமே என்று கணக்குப் போட்டார்கள். ஒரு குழந்தை பிறக்கும் முன்பே அதற்கு மணமுடிக்கின்ற பேராவல், வாழ்க்கை பற்றிய ஆசை, அக்கறை அன்று மனிதர்களிடையே அதிகம் இருந்தது. வம்ச விருத்தி மிக முக்கியம் என்று நினைக்கப்பட்டது.
''அழகம்மை, நீ பேருக்கேத்த மாதிரி ரொம்ப அழகா இருக்கே. கன்னம் சிவந்து, உதடு கனிஞ்சு, அழகிட்டுண் டிருக்கு. இந்தத் தடவை பொண்ணுதான்.''
அழகம்மைக்கு எதுவாயினும் சந்தோஷம். நல்லபடி பிறக்க வேண்டும். சுந்தரமய்யருக்கு வெறும் வக்கீல் என்ற செல்வாக்கு மட்டுமல்ல; நல்லவர், உதவி செய்பவர், ஏழைப் பங்காளர் என்கிற நல்ல பெயரும் இருந்தது. வறுமை காரணமாகவும், வேறு பிழைப்பின்மை காரணமாகவும் அந்த ஊரைச் சுற்றிக் கள்வர் பயம் அதிகமிருந்தது. வழிப்பறி, கூரை பிரித்து இறங்குதல், கன்னம் வைத்தல் போன்ற விதம்விதமான திருட்டுகள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தன.காவலர்கள் தேடிப் பிடித்துக் கள்வர்களை மடக்கிக் கைது செய்வர். சுந்தரமய்யர் அவர்களுக்காக வாதாடுவார். வழக்காக மாறும் முன்பேகூட பஞ்சாயத்து பண்ணித் தீர்த்து வைப்பார்.
''என்னம்லே... செட்டியார் வீட்டுல கை வச்சுட்டீங்களாம்ல''
''நாங்க இல்லீங்க சாமி''
''எங்கிட்டயேவா... உன்னைப் பார்த்ததுக்கு ஆள் இருக்கு. உன் கூட்டாளி போட்டுக் குடுத்துப்பிட்டான். உள்ள உக்காந்துண்டிருக்கான். என்ன செய்ய...''
''சொல்லுங்க சாமி''
''கொடுத்துடு... எச்சரிச்சுவிட்டாப்போல ஆவும்''
''மடக்கி அடிப்பாங்க சாமி''
''நான் பாத்துக்கறேன். வீட்டு வாசல்ல வச்சுட்டு எட்டக்கப் போயிடு''
''ஒரு வம்பும் வராதா''
''நாங்க இருக்கோம்ல'' - உத்தரவாதம் கொடுப்பார்.
திருடப்பட்ட நகை, வீட்டு வாசலில் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருக்கும். திருட்டுக் கொடுத்தவர், 'கடவுளே.. கடவுளே...' என்று சந்தோஷப்படுவார்.
''குந்துமணிகூடக் குறையலை. எல்லாம் சரியா இருக்கு'' வீட்டுப்பெண்கள் கண்களில் நீர் வழிய, நன்றி சொல்வார்கள்.
''பிழைப்புக்கு வேற வழியில்லை. இதுவே பழக்கமாயிடுத்து. அரிசி பருப்போடு அஞ்சோ, பத்தோ கொடுத்துடுங்கோ. இந்தப் பக்கமே வர மாட்டான்''
ஒரு மூட்டை அரிசியும், ஒரு பை பருப்பும், மளிகை சாமானும், காசுமாய், நகை மூட்டை வைத்த இடத்திலேயே வைக்கப்பட்டிருக்கும்.
''இத்தனையும் எனக்கா''- கள்வர் வியப்பார்கள். ''சோறு திருடத்தான் போனேன். நகை இருந்திச்சு. எடுத்துக்கிட்டு வந்துட்டேன்'' குழந்தைபோலப் பேசுவார்கள்; அடிபடாமல் உயிர் காத்த சுந்தரமய்யரைத் தெய்வமெனப் புகழ்வார்கள்.
''யாரு முன்னால போறது''
''சுந்தரமய்யர்''
''ஒத்த வீடு அய்யருதானே... எனக்கு நாப்பது ஏக்கர் நிலம் இருக்கு. ஆறேழு வீடு இருக்கு. தாண்டிப் போப்பா''
பணக்காரர் தாண்டிப் போக, சுந்தரமய்யர் வணக்கம் சொல்ல, பணக்காரர் முகம் திருப்பிக்கொண்டார். காசு கர்வம் காட்ட, கல்வி மெல்லச் சிரித்தது.
ஒரு மைல் தூரம் போக, ஒரு திருப்பத்தில் பத்துப் பதினைந்து பேர் அந்தச் செல்வந்தர் வண்டியைச் சூழ்ந்து கொண்டு கடையாணியைப் பிடுங்கி... கத்தியைக் காட்டி மிரட்டிக்கொண்டிருந்தார்கள்.
''கழட்டுடா... எல்லாத்தையும் கழட்டிக் கொடு!'' என்று கூச்சலிட்டார்கள்.
''ஏய்... இன்னொரு வண்டி வருது''
''மடக்கு... மடக்கு''
''ஐயோ.. அது அய்யரு வண்டி'' - சுந்தரமய்யரின் வண்டியைப் பார்த்ததும், சரசரவென்று பாதையை விட்டு இறங்கி, முட்செடிகளுக்குள் மறைந்தார்கள்.
''யாரடா அது'' - சுந்தரமய்யர் அதட்டல் போட்டார்.
இரண்டு பேர் பவ்வியமாக முன்னே வந்து, கை கட்டி நின்றார்கள்.
''என்ன எடுத்தே''
''இப்பதாங்க ஆரம்பிச்சோம்...''
''கொடுடா அதை''
எடுத்ததைத் திருப்பிக் கொடுத்தார்கள்.
''ரெண்டு போட்டேன்னா, முதுகு பிய்ஞ்சு போயிடும்'' கல்வி கர்ஜித்தது. காசு பயந்து நடுங்கி, ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தது.
''இன்னொரு தடவை உங்களை இந்தப் பக்கம் பார்த்தேன்... தொலைச்சுப்புடுவேன்'' - சுந்தரமய்யர் மீண்டும் சீறினார். அவர்கள் பதுங்கிப் பின்னடைந்தனர்.
''இரு, இரு... ஐயா, ஆளுக்கு ரெண்டு ரூபா குடுத்துருங்க''
இரண்டு ரூபாய் என்பது அன்று பெரிய காசு. மூன்று நாள் உணவு. தங்கமும் வைரமுமாய் இழந்திருக்கவேண்டிய செல்வந்தர், கள்வர்களுக்குத் தலா இரண்டு ரூபாய் கொடுத்துவிட்டு, சுந்தரமய்யருக்கு நன்றி சொன்னார்.
''உங்களை அலட்சியமா நினைச்சு வந்துட்டேன். மன்னிச்சுக்குங்க'' - செல்வந்தர் கைகூப்பினார்.
''ஏதோ சிந்தனையா இருந்தீங்க. அதனால கவனிக்கலை. சரி, முன்னால போங்க. நான் கூடவே துணைக்கு வரேன்!'' - சுந்தரமய்யர் தட்டிக்கொடுத்தார்.
அறிவும் கம்பீரமும்தான் ஆணின் அலங்காரங்கள். சுந்தரமய்யர் அலங்காரபுருஷராய் விளங்கினார்.
''எனக்கொண்ணும் பெரிசா பூஜை புனஸ்காரம் தெரியாது. வீட்ல இருக்கிற சுவாமிக்கு சாஸ்திரிகள் வந்து பூஜை பண்ணிட்டுப் போவார். நான் சர்க்கரைப் பொங்கலோடு சரி. ஆனா, இந்த மாதிரி ஏழைகளைப் பார்த்தா வயிறு குழையும். 'பகவானே, இவாளை நல்ல கதிக்கு மாத்தப் படாதா'ன்னு ஒரு ஏக்கம் வரும்...''
அவர் நெஞ்சிலிருந்த ஈரம் கருவிலிருந்த குழந்தையிடமும் இருந்தது.
சடங்குகளைவிட வாழ்க்கை முக்கியம். அனுஷ்டானத்தை விட அன்பு முக்கியம். பொய்யான ஜாதி கர்வத்தைவிட சத்தியமான பிரியம் முக்கியம். இந்தக் குணங்கள்தான், கருவிலிருந்த குழந்தைக்கும் இயல்பாக இருந்தன. வித்து பலமாக இருந்ததால், விருட்சம் பெரிதாகக் கிளர்ந்தது.
அது மார்கழி மாதம். பூமி சில்லென்று இருந்தது. நல்ல மழை பெய்து முடித்து, பூமி முழுவதும் பச்சென்றிருந்தது. எல்லா உயிரினங்களும் துள்ளிக் குதித்தன. சிங்காரமாய் உலவின.
மார்கழி, தேவர்களின் விடியல். மார்கழியில் திருவாதிரை நட்சத்திரம் சேர்ந்த தினம், சைவர்களுக்குப் புனித நாள். எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் ஊர்வலம் வருகின்ற தினம். திருச்சுழியில் உள்ள சகாயவல்லி சமேத பூமிநாதர் ஆலயத்திலும் திருவாதிரைத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
வீதி உலா முடிந்து, எம்பெருமான் நடராஜமூர்த்தி ஆலயப்பிரவேசம் செய்துவிட்டார். திருவாதிரை முடிந்து, புனர்பூசம் ஆரம்பித்துவிட்டது.
சுந்தரமய்யர் வீட்டின்முன் அறையில், பல பெண்கள் போவதும் வருவதுமாக அலைந்துகொண்டிருந்தனர். இரவு ஒரு மணிக்குமேல் பரபரப்பானார்கள். அழகம்மையின் வேதனைக் குரல், சுந்தரமய்யரை மெல்ல வாட்டியது. இடையறாது நமசிவாய ஜபம் செய்தார். 117-க்குக் குழந்தை பிறந்தது. ஆண் மகவு.
ஆண் மகவு என்று சுந்தரமய்யருக்கு அறிவிக்கப்பட்டது. அவர் கோயில் கோபுரம் நோக்கிக் கைகூப்பினார். அது, 1879-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி.

Comments