சேவையிலும் இருப்பான் ஐயப்பன்

''பம்பை நதிக்கரையில், மிகப்பெரிய தீவிபத்து. அதில் சிக்கிக்கொண்ட குழந்தைக்கு முதலுதவி செய்ய, திருவனந்தபுரம் டாக்டர் வேலாயுதம் பிள்ளை என்பவர் முழுமுனைப்பாகச் செயல்பட்டார். ஆனால், அங்கே வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஏதேனும் விபத்தென்றால், முதலுதவி செய்யக்கூட எவருமில்லை. இந்த யோசனையின் விளைவாக அவருக்குத் தோன்றியதுதான் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்'' என்கிறார் தமிழகத்தின் மாநிலத் தலைவர் வாசுதேவன்.

 
''சுமார் 62 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், இன்றைக்கு உலகம் முழுவதுமாக, 4000 கிளைகளுடன் வேர்விட்டு வளர்ந்திருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 58 கிளைகள் உள்ளன. சுமார் 2000 பேர் ஆயுட்கால உறுப்பினர்களாக இருந்து சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர். இன்னொரு விஷயம்... சபரிமலை தேவஸ்தான நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சேவை அமைப்பு, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று!'' எனப் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார், மாநிலச் செயலாளர் கே.ஐயப்பன்.
துவக்க காலத்தில், கார்த்திகை, மார்கழி ஆகிய சபரி மலை சீசன் காலங்களில், மூலிகை கலந்த குடிநீரை  பக்தர்களுக்கு விநியோகித்தது; காலில் அடிபடும் பக்தர்களுக்காக, ஆங்காங்கே ஸ்ட்ரெச்சர் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் முகாமிட்டது; திரைத்துறை அன்பர் களாலும் நல்லுள்ளம் கொண்டவர்களாலும் இன்னும் இன்னும் வளர்ந்தது சங்கம்; 70-களில், தமிழகத்திலும் காலூன்றியது.  

''சபரிமலையில் எரிமேலி, அழுதா நதி போன்ற பல இடங்களில் மருத்துவ முகாம்கள் ஆரம்பத்தில் வைக்கப் பட்டன. இன்றைக்கு, சுமார் 25 இடங்களில் முகாம்கள் வைத்திருக்கிறோம். கார்த்திகை துவங்கி தை மகர ஜோதி வரை தயார் நிலையில் மருத்துவக்குழுவினர் இருப்பார்கள்'' என்கிறார் அகில பாரத சேவா சங்கத்தின் இணைச் செயலாளர் ஸ்ரீதர்; இவர் சபரிமலை அன்னதானக் கமிட்டியின் செயலாளரும்கூட!
அதுமட்டுமா? 'உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத் தோர்’ எனும் முதுமொழிக்கு ஏற்ப, அன்னதான சேவையைத் திறம்படச் செய்து வருகின்றனர், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
''சுமார் 6000 சதுர அடி பரப்பளவில், சபரிமலை திருக்கோயிலில், காடு-மேடுகளைக் கடந்து, மழை-வெயிலைப் பொருட்படுத்தாமல் வருகிற பக்தர்களை அமர வைத்து, உணவு பரிமாறி வருகிறோம். இதையறிந்த திருவாங்கூர் தேவஸ்தானம், சங்கத்தின் சேவையைப் பாராட்டி, 6000 சதுர அடி இடத்தைக் கொடுத்தது; இங்குதான் தினமும் குறைந்தது 20,000 முதல் 30,000 ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வருகிறோம்'' என்று பெருமிதத்துடன் சொல்கின்றனர்.

அதுவும் எப்படி?!
காலையில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், சாம்பார்; மதியம் சாதம், பொரியல், கூட்டு, ரசம்; மாலையில் ரவா உப்புமா, சட்னி, இரவில் கஞ்சி மற்றும் பயறு வகை உணவுகள், சத்துமிக்கதாகவும் ருசியாகவும் சுடச்சுடவும் பரிமாறுகின்றனர், பக்தர்களுக்கு!
''சமையலுக்குத் தேவையான பொருட்கள் தமிழகம் மற்றும் கர்நாடகத்திலிருந்து மலைக்கு அனுப்பப் படுகின்றன. கார்த்திகை துவங்கி மகர ஜோதி வரை தினமும் அன்னதானச் சேவை நடைபெறும்; எனவே, ஒவ்வொரு சீசனுக்கும் சுமார் 25 முதல் 30 டன் அளவுக்கு காய்கறிகள்; 28 டன் அரிசி ஆகியவை தேவைப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நம் சங்க கிளைகள்
மூலம், இவை சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களெல்லாம், சிறப்பு முகாம் அமைத்து, மக்களிடமிருந்து பெறப்படுகின்றன. ஆகவே, மக்களுக் குத்தான் அத்தனைப் புண்ணியமும் போய்ச்சேரும். நாங்கள் வெறும் கூரியர் ஆட்கள்தான்!'' என்கிறார் ஸ்ரீதர்.

டிசம்பர் மாதத்தில் ஆறு நாட்கள், ஐயப்ப பக்தர்களுக்கான முழுச்சேவையையும் திருச்சி மாவட்ட அமைப்பு பார்த்துக்கொள்ளுமாம்! அப்போலோ மருத்துவமனையின் உதவியுடன் மலைப்பகுதியில் சிறப்பு முகாம்கள்,  இலவச ஆம்புலன்ஸ் தயாராக இருக்குமாம். தவிர, பம்பையில் துவங்கி ஐயப்ப சந்நிதானம் வரையிலான பல இடங்களில், ஆக்ஸிஜன் பார்களை அரசாங்கம் நிறுவி உள்ளது; என்றாலும் அரசுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கும் உதவியைச் செய்வது, அகில பாரத ஐயப்ப சேவா சங்கமாம்!  
''சபரிமலை என்றில்லாமல், ஐயப்ப ஸ்வாமியின் பக்தர்களுக்கு மட்டுமே சேவை என்றில்லாமல், மதுரை கள்ளந்திரியில் முதியோர் இல்லம் ஒன்றை நிர்வகித்து வருகிறோம். அதேபோல், திருச்சி வயலூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திரம்; திருவானைக்காவலில் ஆடி வெள்ளி; குணசீலம் பெருமாள் கோயிலில் புரட்டாசி விழா; சமயபுரம் மாரியம்மன் கோயிலில், சித்திரைத் திருவிழா ஆகிய காலங்களில் அங்கு சென்று சேவை செய்வதை பாக்கியமாகக் கருதுகிறோம்'' என்கிறார் ஸ்ரீதர்.

''அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகமும் சீருடையும் கிடைச்சா சந்தோஷம்; அவங்களுக்கு கண் பரிசோதனையும் மருத்துவ பரிசோதனையும் செஞ்சா அவங்களைப் பெத்தவங்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் நிம்மதி; 'இந்த குரூப் ரத்தம் உடனே வேணும்’னு சொன்னா ஓடிப் போய் ரத்தம் கொடுக்கும்போது, நோயாளிகளுக்கும் அவங்களோட குடும்பத்தாருக்கும் கிடைக்கிற நிம்மதி... இதுக்கெல்லாம் காரணம், அந்த ஐயப்பன்தான்! அவர் மீது கொண்ட பக்திதான், இத்தனை சேவையையும் செய்ய வைச்சுது!
முக்கியமா, இந்த உலகத்துல இருக்கிற எல்லா மக்களும், 'போதும்... போதும்’னு நிறைவாகிற ஒரே விஷயம், சாப்பாடுதான்! அந்த அன்னதானத்தை ஐயப்பன் சந்நிதானத்துல ஒவ்வொரு சீசன்லேயும் வழங்கறதை பாக்கியமா நினைக்கிறோம்'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார் ஸ்ரீதர்.
அன்னதானப் பிரபுவே... சரணம் ஐயப்பா!

Comments