கர்ப்பிணிகள் மலைக்கோயில்களுக்கு செல்லலாமா?


கர்ப்பிணிகள் மலைக்கோயில்களுக்கு செல்லலாமா?


பூமியின் தரைப்பகுதியில் இருக்கும் தட்ப வெப்ப நிலைக்கும் பூமிக்குச் சற்று உயரமான இடத்தில் அமைந்திருக்கும் மலைப்பகுதியில் இருக்கும் தட்ப வெட்ப நிலைக்கும் வேறுபாடு உண்டு என்பதை பழனி, திருப்பதி போன்ற மலைப்பகுதியில் நாம் காணலாம்.
கர்ப்பிணிப் பெண் என்பவள் இரு உயிர்களுக்கு சொந்தமானவள். ஆகவே, அவளது நடவடிக்கையால் விளையும் பலன்கள் கர்ப்பிணிப் பெண், அவள் கர்ப்பத்தில் வளரும் குழைந்தை ஆகிய இருவரையும் சென்றடையும். ஆகவே, கர்ப்பிணிப் பெண் தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும்.
பூமியில் தரைப்பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண், மலை மீது ஏறுவது என்பது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு (வயிற்றில் இங்குமங்குமாக அதிகமாக அசைவதால்) சிரமத்தைத் தரலாம்.
அத்துடன் பூமியைவிட மாறுதலான சீதோஷ்ண தட்ப வெட்ப (அதிகமான காற்று, அதிகமான குளிர் போன்ற) சூழ்நிலையுள்ள மலையின் மீதுள்ள பகுதி அந்தப் பெண்ணுக்கும் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் அடிப்படையிலேயே சாஸ்திரமும் மருத்துவமும் கர்ப்பிணிப் பெண்கள் மலை மீது ஏறுவதையும், மலை மீது வசிப்பதையும், மலையின் மீதுள்ள ஆலயங்களுக்குச் செல்வதையும் தடை செய்கின்றன.

மஹாளய பக்ஷம் அன்று கோயில்களுக்கு செல்லக்கூடாதா?

ஒவ்வொரு வருஷமும் புரட்டாசி அல்லது ஐப்பசி மாதங்களில் அமாவாசைக்கு முந்தைய பதினைந்து நாட்கள் ‘மஹாளய பக்ஷம்’ எனப்படுகிறது. மறைந்த முன்னோர்களை வழிபட வேண்டிய முக்கியமான நாட்கள் இவை. இந்த 15 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தெய்வங்களை வழிபடுவதற்கு முன்னர் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம் முதலியவற்றைச் செய்துவிட வேண்டும்.
தினசரி நாம் வீட்டில் செய்யும் பூஜை, அருகிலுள்ள ஆலயம் சென்று தரிசனம் செய்தல், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் முதலான ஸ்தோத்ரம் சொல்லுதல் போன்ற சில செயல்களைத் தவறாமல் செய்து வருவோம். ஒவ்வொரு நாளும் செய்யப்படுவதால் இவற்றுக்கு ‘நித்ய கர்மாக்கள்’ எனப் பெயர். இவை எக்காரணத் தாலும் தடைபடாது.
குறிப்பாக, பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிராத்தம் போன்றவற்றைச் செய்யும் அமாவாசை போன்ற நாட்களிலும், மஹாளய பக்ஷம் போன்ற நாட்களிலும் பித்ருக்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கான தர்ப்பணம் முதலானவற்றைச் செய்து முடித்த பின்பு, நித்ய கர்மாக்களான, வீட்டு பூஜை, ஆலயம் சென்று தரிசித்தல் போன்றவற்றை தாராளமாகச் செய்யலாம்.
ஆனால், நாம் வசிக்கும் ஊரின் எல்லைக்கு அப்பால் அமைந்துள்ள ஆலயங்கள், மலைகள், குல தெய்வ வழிபாடு, பரிகாரங்களாகச் செய்யப்படும் அர்ச்சனை, அபிஷேகம், ஹோமங்கள் ஆகியவற்றை மஹாளய பக்ஷம் போன்ற பித்ரு நாட்களில் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

கணபதி ஹோமத்தை சூரிய உதயத்துக்கு முன்பே முடித்துவிடவேண்டும் என்பது எதனால்?

இடையூறுகளைப் போக்குபவர், இடையூறுகளை ஏற்படுத்துபவர் என்னும் பெருமைக்குரியவர் மகாகணபதி என்னும் விநாயகர். இவரது வழிபாடுகளில் அக்னியில் ஹோமம் செய்து வழிபடுதல் என்பது சிறப்பானது. பொதுவாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் காலையில் சூரியன் உதிக்கும் முன்பாக, (சந்தியா வந்தனம் மற்றும் காயத்ரீ ஜபத்தைத் தவிர) எந்த ஒரு தெய்வத்துக்கான பூஜைகள் மந்திர ஜபங்கள், ஹோமங்கள் செய்யப்படுவதில்லை. ஆனாலும், கேரள மாநிலம் போன்ற சில இடங்களில் சூரியோதயத்துக்கு முன்னரே கணபதி ஹோமத்தைச் செய்தல், ஹோமத்தை சூர்ய உதயத்துக்கு முன்பே முடித்து விடுதல் என்னும் வழக்கம் வெகு காலமாக இருக்கிறது. இதற்கு பிரமாணம் உண்டா? இது சரியா? என்பது சந்தேகம்.
ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட தந்த்ர சாஸ்திர புத்தகமான ‘ஸ்ரீ ப்ரபஞ்ச ஸாரம்’ என்னும் புத்தகத்தில், விநாயகர் முதல் ஏராளமான தெய்வங்களை ஆராதிக்கும் அரிய மந்திரங்களும், ஒவ்வொரு தெய்வத்தையும் உபாசனை செய்யும் வழிமுறைகளும் அதற்கான பலன்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மேலும்,அந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு தெய்வத்தையும் உபாசிக்க (வழிபட) வேண்டிய காலமும் (நேரமும்)குறிப்பிடப் பட்டுள்ளது. அதன்படி, சூரியன் உதயமாகும் அதிகாலை நேரமே மஹா கணபதியை வழிபட சிறந்த காலமாகக் கூறப்பட்டுள்ளது.
ஏனென்றால், ஒவ்வொரு மனிதனும் தூங்கி எழுந்தது முதல், இரவு படுக்கும் வரை அவனால் விடப்படும் மூச்சுக்கள் ஒவ்வொரு தெய்வத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஆகவே, மனிதனால் விடப்படும் மூச்சின் எண்ணிக்கையின் அடிப்படையில் தெய்வங்களின் காலம் நிர்ணயிக்கப் படுகிறது. அதன்படி ஒரு மனிதன் காலையில் எழுந்தது முதல், அவனால் விடப்படும் சுமார் (இரண்டு மணி நேர) 50,000 மூச்சுக்காற்றுகளை மகாகணபதி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். ஆகவே, அதிகாலையில் விடப்படும் மூச்சுக் காற்றுகள் மஹாகணபதியைச் சேர்ந்தவை. ஆகவே, அந்த அதிகாலை நேரம் மகா கணபதியின் காலம்.
இதை அடிப்படையாகக் கொண்டே கணபதி உபாசனையை, குறிப்பாக கணபதி ஹோமத்தை அதிகாலையில் செய்யும் வழக்கம் இருக்கிறது. இது மிகவும் சிறப்பானதாகவும் கருதப்படுகிறது. ஆகவே, அதிகாலையில் எழுந்து ஸ்நானம் (ஸந்த்யா வந்தனம்)செய்து விட்டு மகா கணபதி ஹோமத்தைச் செய்து சூர்யோதய காலத்துக்குள் கணபதி ஹோமத்தை முடித்து விடலாம்.

Comments