நல்லதங்காள்

அண்ணன் தங்கை பாசத்துக்கு உதாரணமாகத் திகழ்வது நல்லதங்காள் வரலாறு. இவர்களது வரலாற்றைப் போற்றும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் திருக்கோயில்.
வத்திராயிருப்பைச் சேர்ந்தவள் நல்லதங்காள். இவளுக்கு நல்லதம்பி என்ற அண்ணன் ஒருவர் உண்டு. பெரும் விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்லதங்காளை மானாமதுரையைச் சேர்ந்த காசிராஜன் என்பருக்குத் திருமணம் செய்து வைத்தனர். இள வயதிலேயே ஏழு குழந்தைகளுக்குத் தாயானாள் நல்லதங்காள். ஒருசமயம் மானாமதுரையை பஞ்சம் வாட்ட, தன் ஏழு பிள்ளைகளுடன் அண்ணன் நல்லதம்பியை நாடி அர்ச்சுனாபுரத்துக்கு வந்தாள். அப்போது அண்ணன் வீட்டிலில்லை. அண்ணியோ, பசியால் வந்த நல்லதங்காளையும் குழந்தைகளையும் ஆதரிக்காமல், ஓட்டை மண் பானையையும், பச்சை விறகையும், பயன்படுத்த முடியாத கோப்பையையும் கொடுத்து சமைத்து உண்ணச் சொன்னாள்.
அதைக்கொண்டு உணவு சமைத்து தானும் பிள்ளைகளும் உண்டு அரைப்பசி போக்கினர். நாட்கள் கடந்தன. அண்ணனோ வரவில்லை. பசி வாட்டியது. பிள்ளைகள் வாடின. அண்ணன் தன் நிலையைப் பார்த்து துடிப்பான் என எண்ணி, பாழும் கிணற்றில் ஏழு குழந்தைகளையும் தூக்கி எறிந்து தானும் குதித்து இறந்தாள் நல்லதங்காள். ஊர் திரும்பிய அண்ணன் நடந்ததைக் கேள்விப் பட்டு, தானும் அதே கிணற்றில் வீழ்ந்து மாண்டான் என்பது நல்லதங்காள் கதை.
இவள் மிகுந்த தெய்வ பக்தி கொண்டவள். எனவே, இறைவனும் இறைவியும் அவர்கள்முன் தோன்றி, மீண்டும் இப்புவியில் வாழ வரம் தந்தனர். ஆனால், நல்ல தங்காள், தங்களை இறைவன் திருவடியில் சேர்ப்பிக்க வேண்டினாள். இறைவன், அதற்கு காலம் வரும்வரை இங்கு கோயில்கொண்டு மக்களுக்கு அருள்பாலிப்பாயாக" என்று கூறி மறைந்தார். அன்று முதல் இங்கே நல்லதங்காள் தெய்வமாகக் காட்சியளிக்கிறாள்.
நல்லதங்காளுக்கும், நல்லதம்பிக்கும் கோயில்கள் கட்டி மக்கள் வணங்குகின்றனர்.குடும்ப உறவு பலப்பட, திருமணமாக, குழந்தைப்பேறு, பிள்ளைகள் நலமுடன் வாழ வேண்டிக்கொள்கின்றனர். ஏழு குழந்தைகளும் சிலைவடிவம் பெற்றுள்ளனர். இவர்கள் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சிய இடிபாடுகள், தற்கொலை செய்துகொண்ட கிணறு போன்ற சரித்திரச் சான்றுகளை வத்திராயிருப்பில் இன்றும் காணலாம். தன்னால் அண்ணனுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என தங்கையும், தங்கைக்குக் கிடைக்காத வாழ்க்கை, தனக்குத் தேவையில்லை என அண்ணனும் உயிரை மாத்துக்கொண்ட வரலாற்றை இன்றும் மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

 

Comments