கிருஷ்ண ஜன்ம பூமி

ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்தது ஆவணி மாதம், ரோஹிணி நட்சத்திரம், அஷ்டமி திதி கூடிய நன்னாளில்! ‘ஜன்மாஷ்டமி’ என்றே அந்த நாள் பெயர் பெற்றுவிட்டது. திருவிளையாடல்கள் பல நிகழ்த்திய கண்ணபிரான் அவதரித்தது சிறையில்.
‘ஒரு மழைக் கால நள்ளிரவில் ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாய் வளர்ந்த மாமாயன், தாய் மாமனின் வாளுக்கு பயந்து கோகுலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்’ என்கிறது பாகவதம்.
இந்திய மண்ணின் மிகவும் புனிதம் பெற்ற தலமான கிருஷ்ண ஜன்ம பூமி இன்றும் ஒளிக்கப்பட்டு மிக மிக உயர்ந்த நிலை பாதுகாப்புப் பகுதியாக எந்த நேரமும் துப்பாக்கி ஏந்திய இராணுவப் படையால் சூழப்பட்டு 24 து 7 என்ற அடிப்படையில் பாதுகாக்கப்படுகிறது. இந்தப் புனிதத் தலத்தை ஒட்டியுள்ள பள்ளிவாசலும் இந்தப் பாதுகாப்பில் அடங்குகிறது.
இந்தச் சிறைச்சாலைப் பகுதி ‘கர்ப்பக்கிரஹம்’ என்று அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் இதனைச் சுற்றி பக்கத்தில் பல கோயில்கள், நந்தவனங்கள் ஆகியவற்றை அமைத்திருக்கிறார்கள். நாங்கள் கார்த்திகை மாதம் பிற்பகுதியில் இந்தக் கோயிலை தரிசித்தோம். டெல்லி பகுதியின் குளிர் உடலுக்கும், இறைச் சிந்தனைகள் மனதுக்கும் இதமான அமைதியைக் கொடுத்தன. நமது கைப்பைகள், கேமிரா, செல்போன் எதுவும் உள்ளே எடுத்துச் செல்லக் கூடாது. ஆண்- பெண்கள் தனித் தனியான உயர்மட்ட பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படும் மிகப்பெரிய வளாகம். ‘கிருஷ்ண ஜன்ம பூமி காம்ப்ளக்ஸ்’ என்றுதான் இது குறிப்பிடப்படுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சி துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இது அறிவிக்கப் பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் பாதையில் ‘மதுரா’ என்ற ஊரில் இது இருக்கிறது. பெரியதொரு வழிபாட்டுத்தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. மதுராவில் ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. வாகன வசதிகள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் எல்லாம் இருக்கின்றன.
காலை 7 மணியிலிருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்து விடப்படுகிறது. எப்போதும் கூட்டம் இருந்து கொண்டேயுள்ளது.
இரண்டாவது யுகமான த்ரேதா யுகத்தில் சத்ருக்னன், லவணன் என்ற அரக்கனைக் கொன்று இந்த நகரத்தை ஸ்தாபித்தாராம். கண்ணன் பிறந்தது மூன்றாவதான த்வாபர யுகத்தில்! அதன் பிறகு ஸ்ரீ கிருஷ்ண பகவானின் கொள்ளுப் பேரரான வஜ்ர நாபன் என்பவரால் இங்கு கோயில்கள் அமைக்கப்பட்டன என்கின்றனர்.
கண்ணன் அவதரித்த இடம் ஒரு சிறை போலவே அடைப்பாக, மிகுந்த உயரமான, திடமான சுவர்கள், பெரிய கதவுகள்! இடம் முழுதும் சிவப்புக்கல் பதிக் கப்பட்டு குறைந்த வெளிச்சத்தில் இருக்கிறது. அங்கு ஜெயில் போல் கம்பிகளுக்குப் பின்னால் மிக அழகிய, சர்வ அலங்காரங்களுடன் கருநீலக் கண்ணன்! குழந்தை மேல் ஒளி வெள்ளம் பாய்கிறது. அருகில் வசுதேவரும் தேவகியும்! அஷ்டபுஜ யோக மாதா! பரவசமும் வருத்தமும் சேர்ந்த ஒரு உணர்வு மனதில் ஏற்படுகிறது.
நிஜமாகவே கிருஷ்ணன் ஜனனம் செய்த காராக் ருஹத்தில்தான் இருக்கிறோமா என்று தோன்றியது. கண்ணனின் ஸ்பரிசம் தரையில் பட்ட இடமாக ஒரு சதுர பகுதியை பராமரிக்கிறார்கள்.
கரார விந்தேன பதார விந்தம்
முகாரவிந்தே விநிவேச யந்தம் |
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்
பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி ||
என்ற பால முகுந்தனைப் பற்றிய ஸ்லோகத்தைச் சொல்லி கிருஷ்ண பரமாத்மாவை தியானித்தோம்.
இந்த வளாகத்தின் நடுவில் ஒரு பெரிய தியான மண்டபம்! இதற்கு ‘பாகவத பவனம்’ என்று பெயர். வெள்ளை மார்பிள் பதித்த சுத்தமான தரைத்தளம். இதில் பளபளவென்று ஆடை அணிமணிகளுடன் அருளாசி வழங்கும் ராதா கிருஷ்ணரின் பளிங்கு சிலைகள். ராதைக்கு அருகில் லலிதா, கோபிகா என்ற நெருங்கிய இரு தோழிகள். ஒரு சிவலிங்க வடிவம், மஹாகணபதி ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த பவனத்தில் ராதாகிருஷ்ண யுகல சர்க்கார் கோயில் இருக்கிறது. ஆறு ஆடி உயரமான உருவமாக ராதா ராணியும் கிருஷ்ணனும் மனதைக் கொள்ளை கொள்ளும் ஆடை அலங்காரங்களுடன் பக்தர்களை ஈர்க்கிறார்கள்.
அவர்களுக்கு வலது புறம் பூரி ஜகந்நாதர் தரிசனம். அதாவது, புவனேஸ்வரில் இருப்பது போலவே பலராம், சுபத்ரா, ஜகந்நாதர் உருவங்கள். அதே ‘நிம்பகஸ்தா’ என்ற மரத்தால், பூரி ஜகந்நாத் கோயிலின் பரம்பரை சிற்பிகளால் செய்யப்பட்ட அர்ச்சா மூர்த்திகள்! அவர்களுக்கு முன்னால் கருடனும் கொடி மரமும்! ஒரு பக்கம் சீதா மஹாலட்சுமி, ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி, லட்சுமணருடன் அருட்காட்சி தருகிறார். எதிரில் ஹனுமான். ஒரு பக்கம் பெரிய துர்கா தேவி வடிவம்!
ராதா கிருஷ்ணரின் இடது புறம் கேசவேஸ்வர் என்ற திருநாமத்துடன் சிவபெருமானும் பார்வதி தேவியும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்கள். இந்த லிங்க ரூபம் பாதரஸமும் சில மூலிகைகளும் சேர்த்து செய்யப்பட்டதாம். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரை தரிசனம் செய்தால் 12 ஜோதிர் லிங்கங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்கின்றனர்.
நாங்கள் கோயிலுக்குச் சென்றிருந்தது இரவு மங்கள ஆரத்தி நேரம்! நம் ஊர் கோயில்களில் அர்த்த ஜாம பூஜை போல! எங்கும் மணி ஓசையும், பஜனைப் பாடல்களும், ‘ராதே கிருஷ்ணா, ராதா ராணிகி ஜெய்’ என்ற கோஷங்களும் மனதை நிரப்பின.
நிறைய பளிங்குத் தூண்கள். மேற்கூரையிலும் தூண்களிலும் நான்கு பக்கமும் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள். மகாபாரத, இராமாயண காட்சிகள் பளிங்கு புடைப்புச் சிற்பங்களாகவும், சில கண்கவர் ஓவியங்களாகவும் தீட்டப்பட்டுள்ளன. ஆதிசங்கரருடன் சைதன்யரும் உண்டு! அங்கு சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின் உருவச் சிலையைக் கண்டதும் மனதில் மிகவும் பரவசம் ஏற்பட்டது.
பகவத் கீதையின் 18 அத்தியாயங்களும் சிவந்த நிறத்தில் ஜொலிக்கும் தாமிரப் பட்டயத்தில் பொறிக்கப்பட்டு பாகவத பவனத்தின் உட்சுவர்களில் பதிக்கப்பட்டுள்ளன.
‘கேசவதேவ் கோயில்’ என்பதுதான் இங்கு முக்கியமானது. பெரிய ஜன்னல்களுடன் நல்ல இயற்கை வெளிச்சத்துடன் இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அகலமான சுற்று பிராகாரத்தின் நடுவில் எண்கோண வடிவில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு தங்க விமானம். தீபாவளி மற்றும் விசேஷ காலங்களில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியில் தூரத்திலிருந்தும் இந்தக் கோயில் பிரகாசிக்குமாம். வான்முட்டும் அடுக்குமாடிக் கட்டிடங்கள் இல்லாத பழங்காலங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவில் ஆக்ராவில் உள்ள மன்னருக்கு கோயில் தீப தரிசனம் கிடைக்குமாம். இங்கு தற்போது காணப்படும் ‘கேசவ தேவ்’ கோயில் மிகவும் அழகாக இருக்கிறது. சைதன்ய மஹா பிரபு இந்தக் கோயிலைத் தரிசித்ததும் தன்னை மறந்து நிலை கொள்ளாமல் ஆடிப்பாடி புரண்டு உணர்ச்சி பெரு வெள்ளத்தில் மெய் மறந்தாராம்.
இந்த வளாகத்தில் ஒரு மியூசியம் உள்ளது. அதில் இந்தக் கோயிலை புனரமைக்கும்போது கிடைத்த சிலைகள், வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பொருட்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதனை அடுத்து ‘கோசரன் லீலா’ தரிசனம் என்ற பெயருடன். ஒரு காட்சிசாலை. கிருஷ்ண ஜன்ம பூமி தரிசனத்தில் ஒருவரும் இதைத் தவற விடக்கூடாது. அவசியம் பார்க்க வேண்டும். கிருஷ்ண பகவானின் பலவித லீலைகள், ராமாயண, மகாபாரதக் காட்சிகள் சிறு உருவ அமைப்புடன், அசைவுகளுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நமது ஊரில் கொலுவில் இருப்பது போலும், பொம்மலாட்டக் காட்சி போலும் சிறியதும் பெரியதுமாக 1½ முதல் 2 அடி உயர பொம்மைகள்! தகுந்த ஆடை, அலங்காரங்களுடன். சிலவற்றில் animation இருக்கின்றன. ராமர் சிவதனுசை உடைப்பது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைவது, காளியமர்த்தனம், சஞ்சீவிமலை, கண்ணன் வாயில் பூலோகம் போன்றவற்றில் animation கண்ணைக் கவர்ந்தன.
கிருஷ்ணன் வெண்ணெய் திருடுவது, கோபிகைகள் உடைகளைத் திருடுவது, வசுதேவர் யமுனையை கடந்தது, திரௌபதிக்கு சேலையை அளித்தது, சபரி மோட்சம், ராமரும் சீதையும் பர்ணசாலையில் இருப் பது போன்றவை சிறுசிறு தடுப்புகளாக பிரிக்கப்பட்டு சிறந்த ஒளி அமைப்புடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை ராமாயண, பாகவத, மகாபாரத காலங்களில் வாழ்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
இந்த வளாகத்தில் ஒரு இடத்தில் கண்ணபிரான் கோவர்த்தன மலையைத் தூக்கும் காட்சி மிகப் பெரிய அமைப்பாக, அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நீரூற்றுகள், கோபிகைகள், மாடு கன்றுகள், ஒரு இயற்கை அழகு அங்கு மேலோங்கி நிற்கிறது. இதுவும் காணத்தக்கக் காட்சி. பக்தி பரவசத்துடன் இந்த வளாகத்தில் தரிசனம் செய்துவிட்டு மனநிறைவுடன் வெளியில் வந்தோம்.
எத்தனையோ இடர்பாடுகளையும் தாண்டி இன்றும் கண்களுக்கு விருந்தாக, வரலாற்றுச் சான்றாக ஓங்கி நிற்கிறது கிருஷ்ண ஜன்ம பூமி!
கி.பி.400-ல் சந்திரகுப்த விக்ரமாதித்யன் என்ற அரசனால் சில கோயில்கள் ஏற்படுத்தப்பட்டன என்றும், அவர் காலத்தில் இந்த நகரம் மிகவும் வளமுடன் காணப்பட்டதாகவும் குறிப்புகள் கூறுகின்றன. அப்போது இந்து மதத்தோடு பௌத்த மதமும், ஜைன மதமும் சமமாகப் பாவிக்கப்பட்டு தனித்தனி கோயில்களும் பிரார்த்தனைத் தலங்களும் இந்த வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டன என்றும் ஆராய்ச்சிக் குறிப்புகள் உள்ளன. இதற்கு அகழ்வாராய்ச்சியில் சான்றுகள் கிடைத்துள்ளன. பிறகு இந்தப் புண்ணிய பூமி பலமுறைத் தாக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது இருக்கும் இந்த வளாகம் கி.பி.10ம் நூற்றாண்டிலிருந்து இருக்கிறது என்கின்றனர்.
முகமது கஜினியின் உதவியாளரான மீர் முன்ஷி அல் உத்வி (–Mir Munshi Al Utvi) என்பவரின் ‘தாரிகே யாமினி’ என்ற புத்தகத்தில் இந்தக் கோயிலின் அழகு மிகவும் பாராட்டப்பட்டு இருக்கிறது. ‘இது தேவதைகளால் கட்டப்பட்டதாக இருக்கலாம். 200க்கும் மேற்பட்ட திறன்மிக்க சிற்பிகள் நூறாண்டுகள் உழைத்தாலும் 1000 கோடி தினார்கள் செலவழித்தாலும் இதுபோல் இன்னொன்றை கட்ட முடியாது’ என்று முகமது கஜினி பிரமித்துப் போனாராம்.
கி.பி.1150-ல் விஜய பாலதேவா என்ற மன்னர் மதுரா நகரை ஆண்ட போது ஜாஜ்ஜா என்ற ஒரு பக்தர் சில கோயில் பகுதிகளைப் புனரமைத்தார் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 16-ம் நூற்றாண்டில் சிக்கந்தர் லோடி என்ற முஸ்லிம் அரசனால் சூறையாடப் பட்டது என்றும் குறிப்புகள் சொல்கின்றன.
ஜஹாங்கீர் காலத்தில் வீர் சிங் தேவ பண்டேலா என்ற மன்னர் மிகவும் சிரமப்பட்டு 250 அடி உயரமுள்ள கோபுரத்துடன் ஒரு கோயிலை ஏற்படுத்தினாராம். ஒரு பெரிய கிணறு வெட்டி, சுமார் 50 அடி உயரத்துக்கு அதிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு அலங்கார நீர் ஊற்றுகள் ஏற்படுத்தப்பட்டனவாம். சுவரின் ஒரு பகுதியும், கிணறும் தற்போதும் இருக்கின்றன.
கி.பி.1650ல் தாவர்நியர் என்ற பிரான்ஸ் நாட்டு பயணியின் குறிப்பில் இந்தக் கோயிலின் அழகு வெகுவாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

Comments